சென்னை : நாடு முழுவதும் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் நடப்பு மாதம் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை. அதேநேரத்தில் 19 கிலோ வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.102.50 வரை குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றுகின்றனர். காஸ் சிலிண்டர் விலை மாதத்திற்கு ஒரு முறை மாற்றப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் டெல்லியில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ694 ஆகவும், சென்னையில் ரூ710 ஆகவும் இருந்தது. பின்னர், ஒவ்வொரு மாதமும் படிப்படியாக விலை உயர்த்தப்பட்டு, டிசம்பர் 1ம் தேதி சென்னையில் ரூ.915.50 ஆக விற்கப்பட்டது. இந்நிலையில், 2022ம் ஆண்டு நடப்பு மாதத்திற்கான காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது.இதன்படி, 14.2 கிலோ வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த மாத விலையிலேயே நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதாவது, கடந்த மாத விலையில் இருந்து ரூ102.50 அதிரடியாக குறைத்து அறிவித்துள்ளது. இதனால், விலைக் குறைப்பால் இன்று முதல் டெல்லியில் வணிக சிலிண்டரின் விலை ரூ.1998.50 என்றும், கொல்கத்தாவில் ரூ.2,074.5 என்றும், மும்பையில் ரூ.1,951 என்றும் சென்னையில் ரூ.2,134.50 என்றளவிலும் இருக்கும். மேலும் விலை குறைப்பால் உணவகங்கள், தேநீர் கடை உரிமையாளர்களுக்கு சற்று அழுத்தம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது….