Sunday, October 6, 2024
Home » முயன்றால் முடியும்!

முயன்றால் முடியும்!

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழி மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்டும் ஜெயக்கொடிடிசம்பர் 3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம். சுயகாலில் நிற்கக்கூட முடியாத இளம்பெண் ஜெயக்கொடி. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இலவசப் பயிற்சியளித்து அவர்கள் தங்களின் கால்களில் நிற்க உதவியிருக்கிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு பொருளாதார அதிகாரமளிப்பதற்கு உந்து சக்தியாக இருப்பவர்களுக்கு லியோனார்ட் செஷயர் டிசபிலிட்டி (leonard cheshire disability) அமைப்பால் தேசிய அளவில் வழங்கப்படும் விருது ஜெயக்கொடிக்கும் கிடைத்திருக்கிறது. மேலும் பல மகளிர் அமைப்பின் விருதுகளையும் இவர் தொடர்ந்து பெற்றிருக்கிறார்.“மாற்றுத் திறனாளிகளின் கஷ்டங்களையும், சிரமங்களையும் இன்னொரு மாற்றுத் திறனாளியால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்’’ எனும் ஜெயக்கொடி ஒவ்வொரு மாற்றுத் திறனாளிகளுக்கும் அவரவரின் உடல் அமைப்புகளுக்கு ஏற்றபடி தையல் இயந்திரத்தை மாற்றி வடிவமைத்து பயிற்சி அளித்து வருவதோடு, ஆதரவற்ற பெண்களுக்கும் இலவசமாகவே பயிற்சி அளிக்கிறார். கடலூர் மாவட்டம் வி.காட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயிகளான ராமலிங்கம்-முல்லையம்மாள் தம்பதியின் இரண்டாவது மகள் ஜெயக்கொடி. மூன்று வயது குழந்தையாக இருந்தபோதே இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் முடங்கின. பெற்றோர் இவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு அலைந்து கொண்டிருந்ததால், 10 வயதுவரை இவரின் கல்வி தடைபட்டது. பிறகு தொண்டு நிறுவனம் நடத்திய சிறப்பு பள்ளியில் சேர்த்து எட்டாம் வகுப்பையும், பிறகு சென்னையில் உள்ள சிறப்புப் பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பையும் முடித்தார். பிறகு அங்கிருந்த ஷேர்லி என்கிற ஆசிரியர் மூலமாக, சமூக நலத்துறை சார்பில் நடத்தப்படும் கடலூர் அரசு சேவை இல்லத்தில் இணைந்து, ஓராண்டு அங்கேயே தங்கி தையல் மற்றும் கைவேலைப் பொருட்கள் செய்யும் பயிற்சியையும் முடித்து, மூன்றாண்டுகள் அங்கேயே பயிற்றுனராகப் பணியாற்றினார்.இவரின் அக்கா, தங்கைகள், தம்பி என எல்லோருக்கும் திருமணமான பின்னும் இவருக்கு கல்யாணம் தடைபட்டு தனியாளாக நின்றார். அப்போதும் மனம் தளராத ஜெயக்கொடி, ‘சுய சம்பாத்தியம் இருந்தால் மட்டுமே சுயமரியாதையோடு இருக்க முடியும்’ என்பதை உணர்ந்து, ‘தன்னைப் போன்ற பெண்களும் இப்படியொரு நிலையில்தானே இருப்பார்கள் என்றெண்ணி அவர்களுக்கு உதவ நினைத்தார். தொடக்கத்தில் தான் சம்பாதித்த பணத்திலிருந்து மூன்று தையல் இயந்திரங்களை வாங்கியவர், தையல் கடை மற்றும் பயிற்சி மையத்தை ஆரம்பித்தார். இதற்கு வரவேற்பு கிடைக்கவே, மகளிர் குழு மூலமாக ஒன்றரை லட்ச ரூபாய் கடன் பெற்று, கடலூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, பெரிய அளவு தையல் இயந்திரங்களையும் வாங்கி பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்கினார். தினமும் பேருந்தில் பயணித்து வந்து பயிற்சி பெற முடியாத நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிப் பெண்கள் இங்கேயே தங்கி பயிற்சிபெறும் வகையில், ‘உண்டு உறைவிட பயிற்சி மையத்தை’ கடலூரில் ஆரம்பிக்க விரும்பினார். இவரது தம்பி இதற்கு மிகப் பெரும் துணையாக இருந்திருக்கிறார்.கால்களைப் பயன்படுத்தி தைக்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத் திறனாளி பெண்களுக்கு, ‘ஆரி ‘ வேலைப்பாடுகளை, ஜாக்கெட் மற்றும் புடவைகளில் செய்வதற்கு பயிற்சி அளிப்பதுடன், ஸ்வெட்டர், மஃப்ளர், ஒயர் கூடை பின்னுதல் போன்ற கைவேலைப்பாடுகளையும் கற்றுத் தருகிறார். ஈரோட்டிலிருந்து துணிகளை வாங்கி நைட்டிகள் தைத்து விற்பது போன்ற பணிகளுக்காக சில மாற்றுத்திறன் பெண்களுக்கு நேரடி வேலையும் தந்து வருகிறார். இவரிடம் பயிற்சி பெற்ற பல மாற்றுத்திறனாளிப் பெண்கள் தன்னம்பிக்கையோடு சுயமாகத் தொழில் செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். “மாற்றுத் திறனாளிகள் யாருக்கும் பாரமாக இல்லாமல், அவர்களை சுய காலில் நிற்க வைக்க வேண்டும் என்பதே தனது லட்சியம்’’ என்கிறார் ஜெயக்கொடி அழுத்தத்துடன். ‘‘சிறு கஷ்டம், சிறு தோல்வி என்று வந்தாலே, வாழ்க்கையே சூன்யமாகிப் போய்விட்டதைப்போல் சிலர் துவண்டுவிடுவார்கள். ஆனால் பயிற்சி நிலையம் தொடங்கிய சில மாதங்களிலே கொரோனா பெருந்தொற்று ஊரடங்கில் இவரது பயிற்சி மையம் முடங்கிப் போனது. அரசாங்கத்தால் வழங்கப்படும் சீருடைகள் தைக்கும் பணியும் இல்லாமல் போகவே, வாங்கிய கடனையும், பயிற்சி நிலைய வாடகையையும் கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தும் வீட்டின் உரிமையாளர் என்னிடத்தில் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்கிறார்’’ என்கிறார் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்தியவராய்.துணிக்கடைகளோ, ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்களோ எங்களுக்கு துணிகளை தைத்துத்தர வாய்ப்பளித்தால், அவர்கள் கேட்கும் தரத்தில் கேட்கும் வடிவத்தில் எங்களால் தைத்து வழங்க முடியும் என்று நம்பிக்கை அளித்தவர், தாம்பூலப் பைகள், பள்ளி மாணவர்களுக்கான புத்தகப் பைகள் உள்ளிட்ட தையல் தொடர்புடைய எந்த ஆர்டரையும் எங்களால் பெற்று தைத்துத்தர முடியும்’’ என்கிறார். ‘‘அப்படியான வாய்ப்புகள் கிடைத்தால், பிற மாவட்டங்களில் உள்ள மற்ற மாற்றுத்திறன் பெண்களும் இங்கு வந்து தங்கி பயிற்சி பெற என்னால் உதவ முடியும்’’ என்கிறார் தெளிந்த சிந்தனையோடு ஜெயக்கொடி.தொகுப்பு: வாசுகி ராஜாபடங்கள்: ஜி.சிவக்குமார்

You may also like

Leave a Comment

3 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi