புதுக்கோட்டை, ஜூலை 2: உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அஞ்சலக கோட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு மருத்துவர்களை வாழ்த்தி அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களிடம் வாழ்த்து மடல்கள் எழுதப்பட்டு மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜ்மோகனை, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் நேரில் சென்று கௌரவித்தார். மருத்துவ பணியே மகத்தான பணி என்று மருத்துவ கல்லூரி முதல்வரிடம் கூறி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வாழ்த்துகளை தெரிவித்தார்.