Monday, October 7, 2024
Home » புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது தமிழகத்துக்கு 5 நாள் கனமழை ஆபத்து: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை; விடாது கொட்டும் மழையால் சென்னை மக்கள் தவிப்பு

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது தமிழகத்துக்கு 5 நாள் கனமழை ஆபத்து: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை; விடாது கொட்டும் மழையால் சென்னை மக்கள் தவிப்பு

by kannappan

சென்னை: வங்கக்கடலில் இன்று மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்பதால்,  தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும். அதனால் 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் 20 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் மழை பாதிப்பு  தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு, மாவட்ட வாரியாக குழுக்களை அமைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி தொடங்க வேண்டிய வடகிழக்கு பருவமழை, சற்று தாமதமாக தொடங்கியது. இருப்பினும் எதிர்பாராத அளவுக்கு கொட்டித்தீர்த்த மழையால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்கள் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் 6ம் தேதி இரவு விடிய விடிய 23 செமீ மழை கொட்டித் தீர்த்தது. அதனால், சென்னை நகரின் பெரும்பாலான இடங்களில் மழை நீர் சூழ்ந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேங்கிய நீரை அப்புறப்படுத்தினாலும் கூட, இடைவிடாத தொடர் மழையால், தண்ணீர் பல இடங்களில் மீண்டும் மீண்டும் தண்ணீர் தேங்கும் நிலை காணப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மேலும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்டோபர் மாதம்  தொடங்கி நேற்று வரை பெய்த மழையின் அளவைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் 43 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.  இந்நிலையில், மழை நீடித்து வருவதுடன் தமிழகத்தில் பெய்த மழையால் நீர்தேக்கங்கள், ஏரிகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல ஊர்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. அதனால், பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், அடையாறு ஆறு உள்ளிட்ட பல ஆறுகளில் தண்ணீர் ததும்பி செல்லுகின்றன. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்தது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தருமபுரி, கோவை, கரூர், நாமக்கல், திருச்சி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. விட்டு விட்டு மழை கொட்டியது. பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது. தெற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது.  அது அடுத்த 24 மணி நேரத்தில்  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு  வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்கும். இதன் காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும். அதனால் அந்த மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. இத தவிர ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். குறிப்பாக 10 மற்றும் 11ம் தேதிகளில் அதிக அளவில் மழை பெய்யும்.   தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று 11ம் தேதி வரை வீசும். 9ம் தேதி தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசும். 10ம் தேதி தெற்கு வங்கக் கடல் பகுதி, மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 9ம் தேதிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.வங்கக்கடலில் அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு கடல் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதே நேரத்தில் அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த  தாழ்வு மண்டலம் கிழக்கு திசையில் இருந்து காற்றை உறிஞ்சுவதால் வங்கக் கடல் பகுதியில் இருந்து ஈரப்பதம் உள்ள காற்று மேற்கு நோக்கி செல்லத் தொடங்கும். அதனால் தமிழகத்தில் அதிக அளவில் மழை பெய்யும்  வாய்ப்புள்ளது என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், வட கிழக்கு பருவமழைக் காலம் 2022 ஜனவரி வரை உள்ளதால் அடுத்தடுத்த காற்றழுத்தம் அல்லது புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதால் இந்த ஆண்டு தமிழகத்துக்கு அதிக அளவில் மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளனர். இயக்குநர் பேட்டி: வட கிழக்கு பருவமழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது: தமிழகத்தில் தென் கிழக்கு வங்கக் கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்.  குறிப்பாக 16 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். இந்நிலையில், 9ம் தேதி அன்று தெற்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். அது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்கக் கூடும். அதனால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். மேலும், கடந்த மாதம் முதல் இதுவரை தமிழகத்தில் பெய்துள்ள மழை 43 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் 40 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 10 மற்றும் 11ம் தேதிகளில் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.  இதன்படி தமிழகத்தில் 20 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யும் வாய்ப்புள்ளது.* 43% அதிக மழைதமிழகத்தில் அக்டோபர் முதல் தேதியில் இருந்து நேற்று வரை பெய்த வடகிழக்கு பருவமழையில் தமிழகம் முழுவதும் சராசரியாக 43 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. சென்னையில் 40 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.மாவட்டங்களில் பெய்த மழை அளவுமாவட்டம்    பதிவான மழை (மிமீ)    இயல்பு மழை (மிமீ)    வேறுபாடு (சதவீதம்)செங்கல்பட்டு    464    346    34சென்னை    548    393    40கடலூர்    531    318    67கோவை    468    217    116ஈரோடு    357    198    80கன்னியாகுமரி    470    332    41கரூர்    334    171    95மயிலாடுதுறை    518    365    42நாமக்கல்    326    190    72பெரம்பலூர்    382    242    58புதுக்கோட்டை    348    197    77சிவகங்கை    391    241    62தஞ்சாவூர்    402    262    53திருநெல்வேலி    395    228    73திருவாரூர்    531    300    77திருச்சி    358    209    71விழுப்புரம்    489    268    82200 ஆண்டுகளில் 48 மணி நேரத்தில் பெய்த மழை அளவு2021ம் ஆண்டு நவ. 7ம் தேதி 46 மணிநேரத்தில் சென்னையில் 215 மிமீ மழை பெய்துள்ளது. ஆண்டு    நாள்    மழை விவரம்1846 அக்.    21ம் தேதி    550 மிமீ1857 அக்.    24ம் தேதி    460 மிமீ1976 நவ.    25ம் தேதி    452 மிமீ1996 ஜூன்    14ம் தேதி    348 மிமீ1985 நவ.    13ம் தேதி    329 மிமீ2015 டிச.    2ம் ேததி    294 மிமீ1984 பிப்.    17ம் தேதி    294 மிமீ1969 அக்.    22ம் தேதி    280 மிமீ2005 அக்.    27ம் தேதி    273 மிமீ1901 டிச.    10ம் தேதி    262 மிமீ1985 நவ.    12ம் தேதி    249  மிமீ2015 நவ.    16ம் தேதி    247 மிமீ 1984 நவ.    13ம் தேதி    246 மிமீ1952 மே     22ம் தேதி    244 மிமீ1922 நவ.    16ம் தேதி    236 மிமீ2005 டிச.    3ம் தேதி    234 மிமீ1902 அக்.    28ம் தேதி    233 மிமீ2021 நவ.    7ம் தேதி    215 மிமீ1943 மே    17ம் தேதி    215 மிமீ …

You may also like

Leave a Comment

three × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi