Sunday, October 6, 2024
Home » தற்கொலைகளை தடுக்கும் கால்பந்து! !!

தற்கொலைகளை தடுக்கும் கால்பந்து! !!

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழி எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும், அது நமக்கு புத்துணர்ச்சியினை தரும். ஆனால் ஒரு விளையாட்டு ஒருவரின் உயிரைக் காத்து வருகிறது என்றால் நம்ப முடிகிறதா! அதுதான் உண்மை. சென்னை வியாசர்பாடியில் உள்ள ஒரு விளையாட்டு மைதானம். அங்கு ஆண், பெண். குழந்தைகள் எல்லாரும் வண்ண உடை அணிந்து பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தனர். விளையாட்டு பயிற்சி எல்லா மைதானங்களிலும் நடப்பதுதானே… இதில் என்ன சிறப்புன்னு நினைக்கத் தோன்றும். இங்கு கால்பந்து விளையாட்டு, பயிற்சி பெறும் எல்லாருடைய உயிரைக் காத்து அவர்களுக்கான வாழ்வாதாரத்ைத ஏற்படுத்தி தருகிறது. ‘‘குழந்தைகள், இளைஞர்கள் என 300 பேருக்கு, இலவச கால்பந்து பயிற்சி அளித்து வருகிறது SCSTEDS அமைப்பு’’ என்கிறார் கால்பந்து பயிற்சியாளர் தங்கராஜ். வியாசர்பாடி, உழைக்கும் மக்கள் வாழும் இடம். இங்கு விளையாட வரும் குழந்தைகள் எல்லோருமே அமைப்பு சாரா தொழிலாளிகளுடைய குழந்தைகள். குறிப்பாக, வீட்டு வேலை செய்பவர்கள், மருத்துவமனையில் சுத்தம் செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என 70% இவர்களின் பிள்ளைகள்தான் பயிற்சி பெற வருகிறார்கள். யாருக்குதான் பிரச்னைகள் இல்லை. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அவரவர் நிலைக்கு ஏற்ப பிரச்னைகள் க்யூவில் நின்று கொண்டு இருக்கிறது. ஆனால் இங்கு இருக்கும் மக்களுக்கு அதைவிட பத்து மடங்கு அதிக பிரச்சனைகள் இருக்கும். வட சென்னை மக்கள் என்றாலே மோசமானவர்கள்தான் என்ற பார்வை பெரும்பாலான மக்களிடம் நிலவி வருகிறது. ஆனால், அதற்கு  மாறாக இவர்கள் திறமைசாலிகள், பலசாலிகள், அன்பானவர்கள். இவர்களின் திறமைகளையும், பலத்தையும், மற்ற அதிகாரமுள்ள அதிகாரிகளும் முதலாளிகளும் தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர்.சில வருடங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒருவர் கூட இங்கு தேர்ச்சி பெறாமல் இருந்தனர். இது போக சாராயக் கடைகளில் குடித்துவிட்டு தங்கள் வாழ்க்கையை வீணடிக்கும் இளைஞர்களும் அதிகம். முறையான கல்வி இவர்களுக்கு அவசியம். ஆனால், கடன் சுமை காரணமாக படிப்பினை பாதியிலேயே நிறுத்திவிட்டு கூலி தொழிலாளியாக வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தோம். முதலில் இரவு நேரப் பள்ளிக்கூடம் ஆரம்பித்தோம். ஒவ்வொரு வீடாக சென்று குழந்தைகளை அழைத்து வந்து, தெருவிலேயே பாடம் நடத்துவோம். ஆனால் சில நாட்களிலேயே யாரும் பாடம் படிக்க வரல. என்ன செய்வதுன்னு யோசிச்ச போதுதான் கால்பந்து விளையாட்டு நினைவுக்கு வந்தது’’ என்றவர் அதன் பிறகு கால்பந்து விளையாட்டினை தன் ஆயுதமாக மாற்றி அமைத்தார். ‘‘வியாசர்பாடியை பொதுவாக குட்டி பிரேசில் என்று அழைப்பார்கள். இங்கு எல்லோருக்கும் கால்பந்து தெரியும். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தின் முதலே இங்கு கால்பந்து பிரபலம். முறையான பயிற்சியோ, விதிகளோ இவர்களுக்கு தெரியாமல் போகலாம். ஆனால் கால்பந்து விளையாடுவதை பார்க்கவே சிறியவர் முதல் பெரியவர்கள் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு வந்திடுவார்கள். அப்பதான் கால்பந்தினை கொண்டே இவர்களுக்கு ஒரு வழியை அமைக்க முடிவு செய்தேன். 1997ல் நானும், என் நண்பர் மற்றும் பயிற்சியாளருமான உமாபதியும் இணைந்து, சிறுவர், சிறுமியருக்கான இலவச கால்பந்து பயிற்சியை ஆரம்பித்தோம். இப்போது எங்களின் மற்றொரு நண்பர் சுரேஷும் எங்களுடன் இணைந்து பயிற்சி அளித்து வருகிறார். இளைஞர்கள் மட்டும் தான் கால்பந்து விளையாடுவார்கள். நாங்க குழந்தைகளுக்கும் பயிற்சி அளிக்க ஆரம்பிச்சோம். எங்களின் நோக்கம், குழந்தைகள் மூலம் அவர்கள் குடும்பத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான். பெரியவர்களின் மனநிலையை எளிதாக மாற்ற முடியாது. குழந்தைகளை நல்ல வழிகாட்டுதல் மூலம் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும். ஒரு தலைமுறைக்கு உதவினால், அடுத்தடுத்த தலைமுறையும் சிறந்து விளங்குவார்கள் என்ற நம்பிக்கையில்தான் இரண்டு வயது குழந்தைகள் முதல் பதினெட்டு வயது இளைஞர்கள் வரை பயிற்சியில் இணைத்தோம். கண்மூடி திறப்பதற்குள், இருபது வருடங்கள் ஓடிவிட்டது. இத்தனை வருடங்களில் பல மாற்றங்களை நிகழ்த்தியுள்ளோம். இருபது வருடத்திற்கு முன், இங்கு பெண்கள் அதிகம் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் இருந்தனர். குடும்ப சூழ்நிலை, பொருளாதார காரணங்கள் இருந்தாலும், தற்கொலைக்கான முக்கிய காரணம், பெண்களிடம் போராட்ட குணமும், மன வலிமையும் இல்லாததே. இந்த விளையாட்டின் மூலம் போராடும் குணம், தோல்வியை சந்திக்கும் வலிமை, விழுந்தாலும் எழுந்து நிற்கும் தன்னம்பிக்கை என பல நல்ல குணங்களை இவர்கள் கற்கின்றனர். இதனால், துயரங்களை எதிர்கொண்டு துணிந்து நிற்கின்றனர். இன்று எங்கள் மாணவர்களில் ஒருவர் கூட தற்கொலை என்ற முடிவை நிச்சயம் தேர்ந்தெடுக்கமாட்டார்கள்” என்றவர் இங்கு பலதரப்பட்ட சூழலில் குழந்தைகள் வாழ்ந்து வருவதை குறிப்பிட்டார். ‘‘இங்கு பயிற்சி பெரும் குழந்தைகள் பலருக்கு ஒன்று பெற்றோர்கள் இருக்க மாட்டார்கள். அப்படியே இருந்தாலும் பிரிந்து இருப்பார்கள். பெற்றோர் இல்லாத காரணத்தால், பாட்டி வீட்டிலும் மற்ற உறவினர்கள் வீட்டிலும் தங்கி வாழ்கின்றனர். அப்படியே பெற்றோருடன் இருக்கும் குழந்தைகள் நாள்தோறும் தன் பெற்றோர்களின் சண்டை சச்சரவுக்கு மத்தியில்தான் வாழ்ந்து வருகின்றனர். வீட்டில் இந்தப் பிரச்சனைகள் ஒரு பக்கம் என்றால், அவர்கள் வாழும் சுற்றுச்சூழல் சார்ந்து பல பிரச்னைகளை சந்திக்கிறார்கள். இதைக் கடந்து, பள்ளியிலும் அவர்கள் பலதரப்பட்ட பிரச்னைகளை சந்திக்கிறார்கள். இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில், பள்ளி செல்வதே இவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இவைதான் பல குழந்தைகளின் வாழ்க்கை திசை மாற காரணமாக உள்ளது. இவர்கள் நண்பர்களுடன் விளையாட்டில் ஈடுபடும்போது, அவர்களின் கவனம் திசை திரும்புகிறது, மன அழுத்தமும் குறைகிறது. போட்டிகளில் வெல்லும் போது, அவர்களுள் ஒரு நம்பிக்கை ஏற்படுகிறது. இவர்களின் திறமையை அறிந்து பல தனியார் கல்லூரிகள் தானே முன்வந்து ஸ்போர்ட்ஸ் இட ஒதுக்கீட்டில் தங்களின் பள்ளியில் இடம் தருகின்றன. இதனால் எதிர்காலத்தில் எப்படியாவது முன்னேறிவிடலாம் என்ற நம்பிக்கை, இவர்களை வாழ வைக்கிறது” என்றவர் பல போராட்டங்களுக்கு பிறகு தான் இவர்களுக்கானதை பெற முடிகிறது’’  என்றார். ‘‘வியாசர்பாடி என்றாலே அது முரடர்களும், மோசமானவர்களும் வாழுமிடமாக முத்திரை குத்தப்பட்டு விட்டது. இதனால் மற்ற பகுதிகளில் வேலை கொடுக்கவோ, வாடகைக்கு வீடு தரவோ பயப்படுகிறார்கள். பிற பகுதி மக்களுக்கு நாங்கள் அன்னியர்களாகத் தெரிய காரணம் நாங்க பேசும் மெட்ராஸ் பாஷை. கால்பந்து பயிற்சியினை தாண்டி, குழந்தைகளை நல்ல தமிழில் பேசவும் ஊக்குவிக்கிறோம். கந்தல் ஆனாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி என்ற ஔவையின் வாக்கிற்கு இணங்க, நல்ல உடை அணிந்து தூய்மையாய் இருக்க வேண்டும் என்று சொல்லித் தருகிறோம். இது தவிர, பாரத சாரணியர் இயக்கமும் நடத்துகிறோம். நான் முறையாக பயிற்சி பெற்றிருப்பதால், பள்ளி சார்ந்ததில்லாமல், தனியாக சாரணியர் பயிற்சி மையம் அமைக்கவும் நாங்கள் அனுமதி பெற்றுள்ளோம். எங்கள் மாணவர்களை பார்க்கும் போது அவர்கள் வறுமையில் இருக்கின்றனர், துயரத்தில் இருக்கின்றனர் என்று சொல்லவே முடியாது. எவ்வளவு கவலைகள் இருந்தாலும், அதை தாண்டி எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இவர்களுக்கு உண்டு” என்றவரை தொடர்ந்தார் தேசிய கால்பந்து விளையாட்டு வீரரான, பீமா பாய். ‘‘எனக்கு சிறு வயதிலிருந்தே கூச்ச சுபாவம் அதிகம். தனியாக வெளியில் போக மாட்டேன். யாராவது குரல் உயர்த்தி பேசினாலும் பயந்திடுவேன். பள்ளி முடிந்து வீடு வரும் வழியில்தான் கால்பந்து மைதானம் இருக்கும். அங்கே மாணவர்கள் விளையாடுவதை பார்த்து எனக்கும் பயிற்சியில் சேர வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. வீட்டில் அடம் பிடித்துதான் பயிற்சியில் சேர்ந்தேன். பயிற்சியில் சேரும் போது நான் ஆறாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். இப்ப கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கணிதம் படிக்கிறேன். இத்தனை வருடங்களில் என்னிடம் பல முன்னேற்றங்கள் தெரிகிறது. எந்த நேரமும், எந்த இடத்திற்கும் தனியாக தைரியமாக போகிறேன். என் பெற்றோருக்கும், என்னால் என்னை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் இட ஒதுக்கீட்டில் தான் நான் விரும்பிய கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. இப்போது தேசிய அளவில் போட்டியில் பங்கு பெற்று வருகிறேன். சர்வதேச அளவில் இந்தியாவிற்காக விளையாடி தங்கம் வெல்ல வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதன் பிறகு என் மக்களுக்கு கால்பந்து பயிற்சியாளராக வேண்டும். பெண்கள் பலர் இன்றும் கூச்சத்துடன் ஒரு கட்டமைப்பில் வாழ்கின்றனர். ஒவ்வொரு பெண்ணும் தங்களுக்கு விருப்பமான ஏதாவதொரு விளையாட்டை தேர்வு செய்யணும்’’ என்றவர், விளையாட்டு ஒருவரின் மனதில் தன்னம்பிக்கையையும் போராடும் குணத்தையும் வளர்க்கும் என்றார். கால்பந்து விளையாட்டு மட்டும் இல்லாமல் பேட்மிண்டன், செஸ், டேபிள் டென்னிஸ் என பல விளையாட்டுகள், ஆங்கிலத்தில் பேச பயிற்சி, குழந்தைகளுக்கு பாடம் சம்பந்தப்பட்ட டியூஷன், தலைமை பண்புகள் எனப் பல பயிற்சிகள் பெற தங்கராஜ் ஏற்பாடு செய்கிறார். குழந்தைகள் சரியாக பள்ளிக்கு செல்கிறார்களா என்று கண்காணிக்கிறார். ஒவ்வொரு குழந்தைக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு அளிக்கிறார். தலைமுறையினரின் எதிர்காலம் நன்றாக அமையவேண்டும் என்று போராடுகிறார் தங்கராஜ்… அவர்களுக்கு வாழ்த்து கூறிவிட்டு நகர்ந்தோம். தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்படங்கள்: ஜி.சிவக்குமார்

You may also like

Leave a Comment

two × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi