டெல்லி : எவ்வளவு முயன்றாலும் சாப்பிடும் ஆர்வத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று உடல் எடையை அதிகரித்துக் கொண்டு செல்வோருக்காகவே அறிவியலாளர்கள் புதிய கருவி ஒன்றை கண்டறிந்துள்ளனர்.வாயை குறிப்பிட்ட அளவிற்கு மேல் திறக்கவிடாமல் தடுக்கும் இந்த கருவி, பரவலாக பயன்பாட்டிற்கு வரும் முன்னரே டார்ச்சர் டிவைஸ் என்றே பெயர் பெற்றுவிட்டது.நியூசிலாந்து நாட்டின் ஓட்டாக பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு உடல் எடைக் குறைப்புக்கான புதிய கருவி ஒன்றை கண்டறிந்துள்ளது.காந்த ஈர்ப்பு சக்தி கொண்ட இந்த கருவியை பற்கள் இடையே பொறுத்திக் கொள்ள முடியும். வாயை 6 மி.மீ. அளவிற்கு மட்டுமே திறக்க முடியும் என்பதால் திட உணவுப் பொருட்களை உட்கொள்ளவே முடியாது. முழுக்க முழுக்க திரவ உணவுகளை மட்டுமே சார்ந்திருக்கும் நிலை ஏற்படும்.இதன் மூலம் உடல் எடை கணிசமான அளவு குறைவது உறுதி என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.வாயைத் திறக்க முடியாதே தவிர பேசவோ, சுவாசிக்கவோ எந்த சிரமும் இருக்காது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.இந்த கருவியை பரிசோதனையின் போது பயன்படுத்தியவர்கள் இரு வாரங்களில் 3.36 கிலோ எடை குறைந்துளளனர்.இந்த கருவியை உணவுக் கட்டுப்பாட்டு நிபுணர்களின் வழிகாட்டுதல்படியே பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்ட அளவு எடை குறைந்ததும் வழக்கமான சிகிச்சை முறைக்கு திரும்பி விட வேண்டும் என்றும் நியூசிலாந்து பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.இந்த கருவியை பல் மருத்துவர்களால் மட்டுமே பொறுத்த முடியும் என தெரிவிக்கும் ஆய்வாளர்கள், ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால் பயன்படுத்துபவர் அகற்றிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர். …