ஜிம்பாப்வே அணியுடனான கடைசி டி20 போட்டியிலும் இந்தியா அபார வெற்றி: 4-1 என தொடரை கைப்பற்றி அசத்தல்

ஹராரே: ஜிம்பாப்வே அணியுடன் நடந்த 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 42 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ரஸா முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஜெய்ஸ்வால், கேப்டன் கில் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். சிக்கந்தர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை இமாலய சிக்சராக விளாசினார் ஜெய்ஸ்வால்.

அந்த பந்து ‘நோ பால்’ ஆக அமைய, ஃபிரீ ஹிட் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்ட ஜெய்ஸ்வால் அந்த பந்தையும் சிக்சராகத் தூக்கி மிரட்டினார். சர்வதேச டி20ல் முதல் 2 பந்திலும் சிக்சர் அடித்த 2வது வீரர் என்ற பெருமை ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்தது. முன்னதாக, டான்சானியா அணியின் இவான் செலமணி ருவாண்டாவின் மார்டின் அகயெஸு பந்துவீச்சில் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார் (2022). சேசிங்கில் 2 சிக்சர்களுடன் தொடங்கிய பெருமை ஃபில் சால்ட் வசம் உள்ளது (ஓமனுக்கு எதிராக உலக கோப்பை டி20ல்).

ஜெய்ஸ்வால் 12, அபிஷேக் ஷர்மா 14, கில் 13 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, இந்தியா 5 ஓவரில் 40 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில், சஞ்சு சாம்சன் – ரியான் பராக் ஜோடி அதிரடியாக விளையாடி 4வது விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்தது. பராக் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக அரை சதம் அடித்த சாம்சன் 58 ரன் (45 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி முஸரபானி பந்துவீச்சில் மருமானி வசம் பிடிபட்டார்.

கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ஷிவம் துபே 26 ரன் (12 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார். இந்தியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன் குவித்தது. ரிங்கு சிங் 11 ரன், வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  ஜிம்பாப்வே பந்துவீச்சில் முஸரபானி 2, சிக்கந்தர், எங்காரவா, மவுடா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18.3 ஓவரில் 125 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 42 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

டியான் மையர்ஸ் அதிகபட்சமாக 34 ரன் (32 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), மருமானி 27 ரன் (24 பந்து, 5 பவுண்டரி), ஃபராஸ் அக்ரம் 27 ரன் (13 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாச, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். இந்திய பந்துவீச்சில் முகேஷ் குமார் 4, ஷிவம் துபே 2, தேஷ்பாண்டே, வாஷிங்டன், அபிஷேக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்த இந்திய அணி, அதன் பிறகு தொடர்ச்சியாக 4 வெற்றிகளை வசப்படுத்தி ஆதிக்கம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. ஷிவம் துபே ஆட்ட நாயகன் விருதும், வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

Related posts

மொபட்-பைக் மோதல்; 3 பேர் பரிதாப பலி: பைக்-லாரி மோதி தம்பதி சாவு

தகாத உறவை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை:துக்கம் தாளாமல் காதலனும் சாவு

பள்ளியில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாக கூறி அதிமுக மாஜி எம்.பி.யிடம் ரூ.50 லட்சம் மோசடி: தாளாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு