13 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியிடம் இந்தியா அதிர்ச்சி தோல்வி

ஹராரே: ஜிம்பாப்வே அணியுடனான முதல் டி20 போட்டியில், இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில், உலக கோப்பையில் விளையாடிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த முதல் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கில் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் ரியான் பராக், அபிஷேக் ஷர்மா, துருவ் ஜுரெல் அறிமுகமாகினர்.

வெஸ்லி, இன்னொசென்ட் இணைந்து ஜிம்பாப்வே இன்னிங்சை தொடங்கினர். இன்னொசென்ட் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேற அந்த அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. பிரையன் பென்னட் 22, வெஸ்லி 21, கேப்டன் சிக்கந்தர் 17 ரன்னில் பெவிலியன் திரும்பினர். டியான் கிளைவ் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். டியான் 23 ரன் எடுத்து ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். ஜிம்பாப்வே 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்தது. கிளைவ் 29 ரன், சதாரா (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய பந்துவீச்சில் பிஷ்னோய் 4 (4-2-, வாஷிங்டன் 2, முகேஷ், ஆவேஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 116 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. அபிஷேக், கில் இணைந்து துரத்தலை தொடங்கினர். அபிஷேக் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஒரு முனையில் கில் உறுதியுடன் போராட, சக வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் உள்ளேஞ் வெளியே விளையாடினர். கில் 31 ரன் (29 பந்து, 5 பவுண்டரி) விளாசி சிக்கந்தர் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, இந்தியா 10.2 ஓவரில் 47 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது. பிஷ்னோய் 9 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் வாஷிங்டன் ஆவேஷ் கடுமையாக முயற்சிக்க இந்திய அணிக்கு சற்று நம்பிக்கை பிறந்தது. ஆவேஷ் 16, முகேஷ் (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கடைசி 2 ஓவரில் 18 ரன் தேவைப்பட்ட நிலையில், முஸரபானி 19வது ஓவரில் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து நெருக்கடியை ஏற்படுத்தினார்.

இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட, சதாரா பந்துவீச்சில் பவுண்டரி, சிக்சர் விளாச முடியாமல் சிரமப்பட்ட வாஷிங்டன் 27 ரன் எடுத்து (34 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) விக்கெட்டை இழந்தார். இந்தியா 19.5 ஓவரில் 102 ரன் மட்டுமே எடுத்து 13 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. கலீல் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜிம்பாப்வே பந்துவீச்சில் கேப்டன் சிக்கந்தர், சதாரா தலா 3, பென்னட், மசகட்சா, முஸரபானி, ஜாங்வே தலா 1 விக்கெட் வீழ்த்தினர். சிக்கந்தர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஜிம்பாப்வே 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி இன்று மாலை 4.30க்கு தொடங்கி நடைபெற உள்ளது.

Related posts

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

வரும் 20ம்தேதி ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடக்கிறது; திமுக வழக்கறிஞர் அணி சார்பில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து கருத்தரங்கம்: சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ அறிவிப்பு

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்