வேகமெடுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு: விழிப்புடன் இருக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி உள்ள நிலையில் பருவமழை காலத்தில் பரவும் சில நோய்களும் வேகமாக பரவி வருகின்றன. அந்த வகையில் பருவமழை காலத்தில் தேங்கி நிற்கும் நன்நீரில் உற்பத்தியாகும் ஏடிஎஸ் கொசுக்கள் டெங்கு, சிக்குன்குனியா போன்ற வைரஸ் நோயை பரப்புகின்றன. இந்த ஏடிஎஸ் கொசுக்கள்தான் ஜிகா வைரஸ் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன.

இந்த ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை உடல் திரவங்களில் வாழும் தன்மை கொண்டது. காய்ச்சல், உடல்வலி, தலைவலி, கண்கள் சிவப்பாக இருப்பது போன்றவை ஜிகா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக உள்ளன. ஜிகா வைரஸ் கர்ப்பிணி பெண்களுக்கு, குறிப்பாக கருவில் உள்ள சிசுக்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்த கூடியது. மகாராஷ்டிராவில் தற்போது ஜிகா வைரஸ் பாதிப்பு வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் ஜிகா வைரஸ் பரவல் குறித்து விிழிப்புடன் இருக்குமாறு மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில்,

“ஜிகா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கர்ப்பிணி பெண்கள் தொற்றுநோய் பரிசோதனை, கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை கண்காணிப்பதில் விழிப்புடன் செயல்பட வேண்டும். அனைத்து மகப்பேறு மருத்துவமனைகளிலும் கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். கொசுப்புழு உற்பத்தியை தடுக்க குடியிருப்பு பகுதிகள், பணி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், கட்டுமான தளங்களில் மழை நீர் தேங்குவதை கண்காணித்து அகற்ற வேண்டும்.

தோல்வெடிப்பு, காய்ச்சல், தலைவலி, கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் இருந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஜிகா பாதித்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்