யுவான் சுவாங் ருசித்த மாம்பழம்!

தமிழர்களுக்கும், மாம்பழத்திற்கும் நீண்ட நெடிய வரலாற்றுத் தொடர்பிருக்கிறது. மாம்பழத்திற்கென்று சில வரலாறும் இருக்கிறது.தமிழர்கள் தங்கள் உணவில் மட்டுமல்ல, கலாச்சாரத்திலும் மாம்பழத்திற்கென்று தனி இடத்தை வழங்கி இருக்கிறார்கள். தமிழ் நிலத்தில் முக்கனிக்கென்று எப்போதும் ஒரு சிறப்பு இருக்கிறது. அந்த முக்கனிகளில் முதல் இடத்தை மாம்பழமே பெறுகிறது. கோடைகாலத்தில் கிடைக்கும் சுவை மிகுந்த பழங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது. கோடையில் மாம்பழத்தின் விளைச்சலை வைத்தே, அந்த ஆண்டில் பெய்யப்போகும் மழையை அறிந்துகொள்வார்களாம். ‘புளிக்குப் பொங்கும், மாங்காய்க்கு மங்கும்’ என்று ஒரு பழமொழியே இருக்கிறது. அதாவது புளி அதிகமாகக் காய்த்தால் அந்த ஆண்டில் மழை அதிகமாகப் பொழிந்து ஆறு, கண்மாய்கள் நிறைந்து பொங்குமாம். மாம்பழ விளைச்சல் அதிகரித்தால், அந்த ஆண்டில் மழை குறைந்து ஆறுகளின் நீர் இருப்பு மங்கிப்போகுமாம். தமிழர்களுக்கு சித்திரை மாதம் ஒரு முக்கியமான மாதம்.

இந்த மாதத்தில் விளையும் புளி, மாம்பழத்தை வைத்து வருண பகவான் வருகையை எப்படி கணித்திருக்கிறார்கள் பாருங்கள்!MANGO என்ற ஆங்கிலச் சொல் ‘மேங்கா‘ என்ற போர்ச்சுக்கீசிய சொல்லில் இருந்தே உருவாகியிருக்கிறது. போர்ச்சுக்கீசிய மொழிக்கு அந்த சொல்லைக் கடன் கொடுத்ததே நம்ம தமிழ்தான். இந்தியாவுக்கு கடல் வழி தேடி மலையாள தேசம் வந்திறங்கிய போர்ச்சுக்கீசியர்கள், காயில் புளித்து கனியில் ருசிக்கும் இந்த விநோதப் பழத்தின் ருசிக்கு அடிமையாகியிருக்கிறார்கள். மாம்பழத்தின் ருசி அவர்களின் மனதுக்கு மிக நெருக்கமாகி இருக்கிறது. இதனால் மாம்பழங்களை ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த சீன வணிக யாத்ரீகர் யுவான் சுவாங் தென்னிந்திய மாம்பழங்களின் ருசியை ஆகா ஓகோ என்று புகழ்ந்துள்ளார்.

முகலாயர்கள் காலத்தில் பல வகையான ஒட்டு ரக மாம்பழங்கள் உருவாகின. அல்போன்ஸா மாம்பழங்களின் பூர்வ வடிவம் அந்தக் காலகட்டத்தில்தான் உருவாகியது. ஆனால், போர்ச்சுக்கீசியர்களின் இந்திய வருகை இருவேறு கனிகளை இணைத்துப் புதிய ரகங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியது. அப்படியான முயற்சி ஒன்றில் சுவை மிகுந்த குட்டை ரக மாம்பழம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. அதற்கு போர்ச்சுக்கீசிய ஜெனரலான அல்போன்ஸா டீ அல்ப்யூக்கெர் என்பவரின் பெயர் வைக்கப்பட்டது. அதுதான் பின்னாட்களில் அல்போன்ஸா மாம்பழம் என்ற பெயரில் தன் ருசியால் உலகையே ஆண்டுகொண்டிருக்கிறது. இன்று உலகின் ஒட்டுமொத்த மாம்பழ உற்பத்தியில் அறுபது சதவீதத்துக்கு மேல் இந்தியாதான் வழங்குகிறது. மாம்பழத்திற்கு இப்படி
மாபெரும் சங்கதிகள் எல்லாம் உண்டு.

 

Related posts

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :வைகோ வேண்டுகோள்

நூதன திருட்டு: போலியான இமெயில் அனுப்பி பணம் பறிப்பு… மோசடி கும்பல் குறித்து சைபர் போலீஸ் எச்சரிக்கை !