வழிப்பறி வழக்கில் 2 வாலிபர்கள் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் வழிப்பறி வழக்கில் தொடர்புடைய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு இராட்டிங்கிணறு பகுதியை சேர்ந்தவர் டேனியல் (26). இவர், கடந்த 27ம் தேதி செங்கல்பட்டு அருகே திருப்போரூர் கூட்டுசாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் டேனியலை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். மேலும், அவரிடமிருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து டேனியல் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், திருப்போரூர் கூட்டு சாலையில் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது, இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து, போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அதில், சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த முரளி (29), செங்கல்பட்டு மேலமையூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (20) ஆகியோர் என தெரியவந்தது. இதில், முரளி மீது கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, சென்னை ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, கைதான முரளி மற்றும் பிரகாஷ் ஆகியோரை போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

முனீஸ்வரர் கோயிலில் நகை, பணம் திருட்டு

மாமல்லபுரம் அருகே நெம்மேலி குப்பத்தில் கடல் சீற்றத்தால் சிமென்ட் சாலை சேதம்

ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயில் ரூ.2 கோடியில் புனரமைப்பு பணிகள்: பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்