5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு ரூ.60,000 நிதியுதவி பெரிய நிறுவனங்களில் அனுபவ பயிற்சி வழங்கும் திட்டம் டிச. 2 தொடங்கும்: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.60,000 நிதியுதவி வழங்கும் அனுபவ பயிற்சி திட்டம் டிசம்பர் 2ம் தேதி முதல் தொடங்கும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மோடி தலைமையிலான 3.0 பாஜ அரசு கடந்த ஜூலை 23ம் தேதி 2024-25ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது. அப்போது பெரிய, சிறந்த நிறுவனங்களில் இளைஞர்களுக்கு அனுபவ பயிற்சி வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

அடுத்த 5 ஆண்டுகளில் 500 பெரிய நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு அனுபவ பயிற்சி வழங்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நிகழ்கால வணிக சூழல், மாறுபட்ட தொழில்களுக்கு ஏற்ப, வேலை வாய்ப்பு பெறுவதற்கு இளைஞர்களுக்கு 12 மாத பயிற்சி வழங்கப்படும். மேலும் அனுபவ பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.6,000 என்பதுடன், மாதந்தோறும் அனுபவ பயிற்சிபடியாக ரூ.5,000 வழங்கப்படும். இந்த ரூ.5,000ல் ரூ.4,500 ஒன்றிய அரசாலும், ரூ.500 பயிற்சி தரும் நிறுவனங்களாலும் தரப்படும்.

இந்த நிறுவனங்கள் பயிற்சிக்கான செலவுகளை ஏற்பதுடன், அனுபவ பயிற்சிக்கான செலவில் 10 சதவீதத்தை கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து செலவிடும் என அறிவிக்கப்பட்டது. ஒருசில நிபந்தனைகளுடன் 21 முதல் 24 வயது வரையான இளைஞர்கள் இந்த பயிற்சி பெற தகுதியுடையவர்கள். மேலும் தொலைதூர, மற்றும் ஆன்லைன் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள இளைஞர்கள் பயிற்சி பெற தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் இந்த திட்டத்துக்கான மொத்த செலவு ரூ.800 கோடியாக இருக்கும்.

மேலும் 1.25 லட்சம் இளைஞர்கள் இந்த நிதியாண்டில் பயிற்சி பெறுவார்கள் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பயிற்சி வழங்க உள்ள நிறுவனங்கள் அதற்கான இணையதளம் மூலம் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை வழங்க முடியும். கடந்த 3 ஆண்டுகளில் நிறுவனங்கள் செய்த செலவுகளின் அடிப்படையில் இத்தகைய நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த அனுபவ பயிற்சியில் இளைஞர்கள் இம்மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சி திட்டங்கள் டிசம்பர் 2ம் தேதி முதல் தொடங்கும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

Related posts

சென்னையில் 10 விமானங்களின் சேவை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: மோடி இன்று ஆலோசனை

சென்னை தனியார் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்