இளையோர் கையில் விவசாயம்!

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்களுக்கு உணவளிக்க பயிர் உற்பத்தியையே நம்பி இருக்கிறது. தொழிற்புரட்சியில் சாதித்த ஜப்பானும் அப்படித்தான். தங்களது நிலப்பரப்பில் சிறிய அளவுதான் விவசாயம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. மொத்தப் பரப்பளவில் அதிக அளவு தொழிற்சாலைகளைக் கொண்டிருந்தாலும், விவசாய நிலத்தைத் திறமையாக பயன்படுத்துவதில் ஜப்பானியர்கள் வல்லவர்களாக இருக்கிறார்கள். அந்த நாடு 20 டிகிரி செங்குத்தான நிலத்தை நெல் பயிர் செய்வதற்காக பயன்படுத்துகிறார்கள். மற்ற பயிர்களை மலைப்பகுதியில் சாகுபடி செய்கிறார்கள். மிதமான காலநிலை, போதுமான மழைப்பொழிவு மற்றும் வளமான மண் ஆகியவற்றோடு மூன்று மூன்று ஏக்கராக பிரித்து, பண்ணையாக மாற்றி தீவிரமாக சாகுபடி செய்கிறார்கள். ஐப்பானின் அனைத்துப் பகுதிகளிலும் விவசாயம் செழிக்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு 1970-களில் உற்பத்தி மற்றும் அறுவடையை அதிகரிக்க உரங்கள், கலப்பின விதைகள் மற்றும் இயந்திரங்கள் என பல மேம்பட்ட முறைகள் கையாளப்பட்டன.

உலகின் இரண்டாவது பெரிய விவசாய தயாரிப்பு இறக்குமதியாளராகவும் ஜப்பான் உருவானது. குறிப்பாக அதிகளவில் அரிசியை இறக்குமதி செய்தது. இதனால் அரிசி உற்பத்தியைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது ஜப்பான். 1987-ல் மற்ற பயிர்கள் விளையும் நிலங்களை நெல் விளையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் அதிகளவு நெல் சாகுபடி செய்யப்பட்டு, அரிசி உற்பத்தி பெருகியது. 1999-ம் ஆண்டில் 11.5 மில்லியன் டன் அரிசி விளைவித்து, அரிசி உற்பத்தி செய்யும் நாடாக மாறியது ஜப்பான். இந்த ஆண்டில் அரிசி உற்பத்தி 93 சதவீதமாக உயர்ந்தது. இதன் காரணமாக ஐப்பான் அரசாங்கம் 1995 வரை அரிசி இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மேலும் பிற பயிர்களை சாகுபடி செய்வதிலும் கவனம் செலுத்தியது. இதனால் 1999-ம் ஆண்டின் இறுதியில் பல்வேறு பயிர்களின் வருடாந்திர உற்பத்தி வெகுவாக அதிகரித்தது. உருளைக்கிழங்கு 3400 டன், சர்க்கரைவள்ளிக் கிழங்கு 3803 டன், மாண்டரின் ஆரஞ்சு 1360 டன், முட்டைகோஸ் 2400, பார்லி 205 டன், சோயாபீன்ஸ் 187 டன், புகையிலை 64 டன், தேயிலை 91 டன் என உற்பத்தி உயர்ந்தது. ஜப்பான் நாட்டுக் குழந்தைகளுக்கு விவசாயம் அத்தியாவசியமான ஒன்று என வலியுறுத்தி கல்வி வழங்கப்பட்டது. அதேபோல நாமும் நமது நாட்டில் விவசாயத்தை முதன்மைப்படுத்தி பாடம் கற்பிக்க வேண்டும்.

அதற்கு என்னென்ன செய்யலாம்?

மாணவர்கள் அணிந்திருக்கும் சீருடை முதல் உட்கார்ந்திருக்கும் நாற்காலி மற்றும் எழுதும் பென்சில் வரை அனைத்தும் விவசாயத்தின் மூலமே கிடைக்கின்றன. இதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். விவசாயம் நம் வாழ்க்கையில் எவ்வாறு தொடர்புகொண்டிருக்கிறது? என்பதை விளக்க வேண்டும். உணவுப்பொருட்கள் ஏன் தேவை? அவை எப்படி வருகின்றன? என்பது போன்ற கேள்விகளை அவர்களிடம் அடிக்கடி கேட்டு தெளிவுபடுத்த வேண்டும். விவசாய உற்பத்திப் பொருட்களின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும் அட்டைகளை மாணவர்களிடம் வழங்க வேண்டும். ஆசிரியர் ஒவ்வொரு பெயராக வாசிக்கும்போது சம்பந்தப்பட்ட பெயர் கொண்ட அட்டை வைத்திருப்பவர் அதை உயர்த்தி, அதுகுறித்து விளக்க செய்யலாம். இதில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால் மாணவர்கள் கேள்விகள் கேட்கலாம்.ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஒரு சிறிய விவசாய தினத்தை கொண்டாட ஏற்பாடு செய்யலாம். அவ்விழாவில் விவசாயப் பொருட்களை வீட்டில் இருந்து கொண்டு வரச் சொல்லி மாணவர்களுக்கு விளக்கலாம். மரங்கள் எவ்வாறு வளர்கின்றன? தேனீக்கள் எவ்வாறு தேன் எடுக்கின்றன? எள் எவ்வாறு எண்ணெயாக மாறுகிறது? என வேளாண்மையின்
இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலை அன்றாட நடைமுறையில் விளக்கலாம்.

ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் ஒரு தனித்தோட்டம் அல்லது புல்வெளி இருக்க வேண்டும். அங்கு மாணவர்களை விதைகளை நடச் சொல்லலாம். இது பசுமையான அணுகுமுறையைக் கொண்டு வருவதோடு, உயிர் வளர்ச்சி மற்றும் இறப்புக்கான வாழ்வியல் கூறுகளை செயல்விளக்கமாக காண்பிக்கலாம். மாணவர்களை விவசாயத்தில் ஈடுபடுத்துவதன் சமூக மற்றும் மன ரீதியாக நம்பிக்கை பெறுவார்கள். ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்தலாம். மேலும் உணவு எங்கிருந்து வருகிறது? ஒரு நபரை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் உணவின் பங்கு என்ன? என்பதையும் விளங்க வைக்கலாம். பாடத்திட்டங்களுக்கு இடையே வேளாண் கல்வி என்பது மாணவர்களுக்கு தலைமைப்பண்பு, தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்த திறன்களை வளர்க்க உதவுகிறது. போட்டிகள் நிறைந்த சூழலில் மாணவர்கள் அழகான பண்ணை விலங்குகள் பற்றியும், அவைகள் எந்த மாதிரியான உணவுகளை உண்ணுகின்றன? என்பது பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். துரதிர்ஷ்டவசமாக கணிதம் மற்றும் விஞ்ஞானம் போன்ற துறைகளைக் கொண்ட கல்வி நிறுவனங்கள் விவசாயக் கல்வியை மறைத்துவிட்டன. இத்தகைய பாடங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததுதான் என்றாலும் மாணவர்களுக்கு விவசாயத்தின் மீது சிறப்புக் கவனம் தேவை.

பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டப்படிப்பை தேர்ந்தெடுக்கும்போது மாணவர்கள் பெரும்பாலும் உயிரியல் மற்றும் வேளாண் அறிவியலை தேர்ந்தெடுப்பதில்லை. ஏனெனில் அதைப்பற்றிய புரிதலும், அறிவும் இல்லாத காரணத்தால் பெரும்பாலான ஆசிரியர்களும் அதைப்பற்றி விளக்கமாக சொல்வதில்லை. விவசாயத்தின் உள்நாட்டு நிலை குறித்து மாணவர்களுக்கு விளக்கினால் மட்டுமே, விவசாயத்தின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு மேம்படுத்துவது என சிந்திப்பார்கள். இதனால் உணவு உற்பத்தி மட்டுமின்றி பல்வேறு நிலைகளில் நாடு மேம்பாடு அடையும்.
– பொறியாளர் கோ.சுரேஷ்.
கல்வி செயல்பாட்டாளர்.

Related posts

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு