சாத்தனூர் வனப்பகுதியில் நள்ளிரவு 55 நாட்டு வெடிகுண்டுகளுடன் வாலிபர் அதிரடி கைது

தண்டராம்பட்டு: சாத்தனூர் வனப்பகுதியில் நள்ளிரவு 55 நாட்டு வெடிகுண்டுகளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார், மற்றொருவர் தலைமறைவானார். திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் வனச்சரகம் ராதாபுரம் பூமலை காப்பு காட்டில் வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையில் வனத்துறையினர் வனவிலங்கு வேட்டை தடுப்பதற்காக நேற்றிரவு முதல் விடியவிடிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் அத்துமீறி நடமாடிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் கொண்டம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த சூர்யா (24), குன்னியந்தல் கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் (23) என்பது தெரிய வந்தது.

இந்நிலையில் போலீசார் விசாரணை நடத்தியபோது சூர்யா தப்பியோடிவிட்டார். இதையடுத்து ஜெய்சங்கரிடம் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் இறைச்சி தடவப்பட்ட 55 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. காட்டுப்பன்றிகளை ேவட்டையாட திட்டமிட்டது தெரிந்தது. இதனிடையே பிடிபட்ட நபரிடம் விசாரித்துக்கொண்டிருந்தபோது வனப்பகுதியில் திடீரென பயங்கர வெடிசத்தம் கேட்டது. உடனடியாக வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது நாட்டு வெடி கடித்த நாய் பலியாகி இருப்பது தெரிந்தது. இந்த வெடிகுண்டை ஜெய்சங்கர் மற்றும் சூர்யா வைத்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக சாத்தனூர் வனத்துறையினர் ஜெய்சங்கரை கைது செய்து நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பிய சூர்யாவை தேடிவருகின்றனர்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை