இளம் தொழிலதிபரை காரில் கடத்தி ரூ.50 லட்சம் பறித்த வழக்கு தனிமையில் சந்திக்கலாம் என்று இனிக்க இனிக்க பேசி அழைத்து சென்ற இளம் பட்டதாரி பெண் கைது: இரவு நேர பாருக்கு வரும் தொழிலதிபர்களை மயக்கி பணம் பறித்து வந்தது அம்பலம்

சென்னை: சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த இளம் தொழிலதிபரை காரில் கடத்தி ரூ.50 லட்சம் பணம் பறித்த வழக்கில், இருவரும் தனிமையில் சந்திக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்ற வேலூரை சேர்ந்த பட்டதாரி இளம் பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை ராயப்பேட்டை பக்சி அலி தெருவை சேர்ந்தவர் ஜாவித் சைபுதீன்(32). இளம் தொழிலதிபரான இவர், பர்மா பஜாரில் சொந்தமாக செல்போன் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர் வெளிநாடுகளில் இருந்து எலெக்ட்ரானிக் பொருட்கள் மொத்தமாக வரவழைத்து தனது கடையில் விற்பனை செய்து வருகிறார். ஜாவித் சைபுதீனுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே முகம் தெரியாத பெண் ஒருவர் ஜாவித் சைபுதீனிடம் செல்போன் வழியாக அடிக்கடி மெசேஜ் மற்றும் வாட்ஸ் அப் கால் மூலம் பேசி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியுள்ளது. ஆனால் எதிர்முனையில் பேசிய இளம் பெண் தனது புகைப்படத்தை அனுப்பாமல் நேரில் சந்திக்கலாம் என்று பேசி இளம் தொழிலதிபர் ஜாவித் சைபுதீனை தன் வசப்படுத்தி வந்துள்ளார். அதன்படி கடந்த 17ம் ேததி ஜாவித் சைபுதீனை தொடர்பு கொண்டு, பட்டினப்பாக்கம் கற்பகம் அவென்யூ 2வது தெருவில் தனது உறவினர் ஒருவர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி வந்துள்ளேன். நீங்கள் வந்தால் இருவரும் வெளியே சென்று தனிமையில் சந்திக்கலாம் என்று கூறியுள்ளார்.

பல நாட்கள் செல்போனில் பேசிய பெண், தன்னை நேரில் சந்திக்க அழைத்ததும், இளம் தொழிலதிபரான ஜாவித் சைபுதீன் தனது காரை எடுத்து கொண்டு அவசர அவசரமாக சம்பவ இடத்திற்கு சென்றார். பின் அந்த பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர், உங்களை நான் பார்த்துவிட்டேன் எதிரே உள்ள காரில் அமர்ந்து இருக்கிறேன் வாருங்கள் என்று கூறியுள்ளார். உடனே ஜாவித் சைபுதீன் தனது காரை நிறுத்திவிட்டு இளம் பெண் அழைத்த காருக்கு சென்று உள்ளே அமர்ந்து தனது காதலியை நேரில் பார்த்த சந்தோஷத்தில் பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென காரின் அருகே வந்த 4 பேர், ஜாவித் சைபுதீனை கத்திமுனையில் மிரட்டி காரில் கடத்தி சென்றுள்ளனர். அப்போது அவரிடம் இருந்து 2 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் பணம், அவரது கார் சாவியை பறித்துக் கொண்டனர். உன்னை உயிரோடு விட வேண்டும் என்றால் ரூ.50 லட்சம் பணம் தர வேண்டும். இல்லை என்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜாவித் சைபுதீன் நீங்கள் கேட்ட பணத்தை கொடுத்துவிடுகிறேன் என்னை விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார். பின் அவரது செல்போனில் மனைவி மற்றும் சகோதரனை தொடர்பு கொண்டு, வெளிநாட்டில் இருந்து பல கோடி மதிப்புள்ள எலெக்ட்ரானிக் பொருட்கள் வந்துள்ளது. அதை எடுக்க அவசரமாக ரூ.50 லட்சம் பணம் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். அதன்படி, 2 தவணையாக ரூ.50 லட்சம் பணத்தை உறவினர்கள் மூலம் கடத்தல் கும்பல் பெற்றுள்ளது. யாருக்கும் சந்தேகம் வராதப்படி, ஜாவித் சைபுதீன் காரையே பயன்படுத்தி அந்த பணத்தை கடத்தல் கும்பல் வாங்கி வந்தது. இதன்பின், இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை அவர்கள் மிரட்டி பல கோணங்களில் எடுத்துள்ளனர்.

இது குறித்து வெளியே சொன்னால் இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இளம் பெண் மூலம் புகார் அளித்து குடும்பத்தை பிரித்துவிடுவோம் என்று மிரட்டி, சேத்துப்பட்டு மேம்பாலம் அருகே இறக்கிவிட்டுள்ளனர். உனது காரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளோம் எடுத்து செல் என்றும் கூறியுள்ளனர்.உயிர் பிழைத்தால் போதும் என்று இளம் தொழிலதிபர் ஜாவித் சைபுதீன் அவர்களிடம் இருந்து தப்பித்து வந்தார். பிறகு நடந்த சம்பவத்தை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வந்தார். பிறகு, நண்பர்கள் அறிவுரைப்படி நடந்த சம்பவத்தை மயிலாப்பூர் துணை கமிஷனர் ரஜத் சதுர்வேதியிடம் ஜாவித் சைபுதீன் புகார் அளித்தார். பட்டினப்பாக்கம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். பட்டினப்பாக்கம் போலீசார் சிசிடிவி பதிவுகளை பெற்றும், இளம் தொழிலதிபரிடம் பேசிய இளம் பெண் செல்போன் எண்ணை வைத்தும் தீவிர விசாரணை நடத்தினர். அதில், வேலூரை சேர்ந்த சோனியா என்ற பட்டதாரி இளம் பெண் தான் தொழிலதிபரை மயக்கி தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து ரூ.50 லட்சம் பணம் பறித்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் செல்போன் சிக்னல் உதவியுடன் வேலூரில் பதுங்கி இருந்த சோனியாவை அதிரடியாக நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து கடத்தல் குறித்து விசாரணை நடத்தினர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் சோனியா(31). பட்டதாரியான இவர், சென்னையில் வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார். ஆனால் அந்த நபர் சோனியாவுடன் நெருக்கமாக இருந்துவிட்டு கைவிட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட காதல் தோல்வியால் சோனியா போதைக்கு அடிமையானார். பார்களுக்கு வந்து செல்லும் போது, கடத்தல் கும்பல் ஒன்று அறிமுகமாகியுள்ளது. அவர்களுடன் சோனியா நட்பை வைத்து கொண்டு இரவு பார்களில் வசதியான நபர்கள் மற்றும் இளம் தொழிலதிபர்களை காதல் வலையில் வீழ்த்தி தனிமையில் இருக்கலாம் என்று நட்சத்திர ஓட்டல்களுக்கு அழைத்து சென்று, தனது நண்பர்கள் 4 பேருடன் கத்திமுனையில் மிரட்டி பணத்தை பறித்து வந்தது தெரியவந்தது. ராயப்பேட்டையை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஜாபத் சைபுதீனையும் இதே பாணியில் மிரட்டி பணம் பறித்ததுள்ளார். கடத்தல் திட்டத்தைப் போட்டுக்கொடுத்த 4 ஆண் நண்பர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் கொடுத்து உள்ளார். கஞ்சா போதைக்கு அடிமையானதால் ரூ.10 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு இளம் தொழிலதிபரை கடத்தி பணம் பறித்ததாக விசாரணையின் போது வாக்கு மூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

Related posts

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு 2,068 கனஅடி நீர் திறப்பு ..!!

மதுரை, கோவை மெட்ரோ ரயில் வழித்தடங்களில் ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நாளை நேரில் ஆய்வு : ரூ.22,108 கோடி முதலீடு செய்ய திட்டம்

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை: மக்களவையில் அகிலேஷ் யாதவ் பேச்சு