இளம் வயது இசையமைப்பாளர் சாய் திவிநந்தன்!

“இசைதான் எனது எதிர்காலம்” என்று முழுமூச்சுடன் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளை செய்து வருகிறார் இளம் இசையார்வலர் சாய் திவிநந்தன். மூன்று வயதிலேயே இசையின் மீது அதீத ஆர்வம் கொண்டு டிரம்ஸ் வாசிக்க கற்றுக் கொண்டு தற்போது பதினான்கு வயதில் மியூசிக் கம்போசிங் செய்து அசத்திவருகிறார் சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த சாய் திவிநந்தன். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக கீபோர்ட் கற்றுவருகிறார். மேலும் இவர் கிடார் வாசிக்கவும், கஜோன் வாசிக்கவும் பயிற்சி பெற்றுள்ளார்.

உங்கள் இசை ஆர்வம் குறித்து சொல்லுங்கள்?

எனது தாயார் விஜயலஷ்மி பரதக் கலைஞர் மற்றும் இசைத்துறை மீது மிகுந்த ஆர்வமுள்ளவர்தான். எனது தந்தை தர் இன்ஜினியர். சிறு வயதிலேயே எனக்கு இசை மீதிருந்த அளவுக்கதிகமான ஆர்வத்தினை கண்ட எனது பெற்றோர்கள் இசையில் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்ள அனுப்பியுள்ளனர். மூன்று வயது முதல் டிரம்ஸ் வகுப்பில் சேர்ந்து பயிற்சி செய்து வருகிறேன். அதன்பிறகு கீபோர்டும், கிட்டாரும், கஜோனும் வாசிக்க கற்றுக்கொண்டேன். நான் வேலம்மாள் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன். பள்ளியில் படிக்கும் போதே பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வென்றுள்ளேன். அந்த அனுபவத்தினை கொண்டு இசைக்குழு ஒன்றினை துவங்கி மேடை நிகழ்ச்சிகள் செய்ய ஆரம்பித்துள்ளேன்.

உங்கள் இசைக்குழு குறித்து சொல்லுங்கள்?

தற்போது CJ troops என்கிற இசைக்குழுவினை எனது இசைத்துறை நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்து பல்வேறு மேடை நிகழ்ச்சிகளை செய்து வருகிறேன். இன்னும் நீண்ட நெடிய தூரம் பயணிக்க வேண்டும். கடந்த வாரம் சென்னை தீவுத்திடலில் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்திருந்த கலை நிகழ்ச்சியில் எனது CJ troops குழுவினருடன் சேர்ந்து பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியில் இசையமைத்து பார்வையாளர்களிடம் நிறைய பாராட்டுதல்களை பெற்றது மகிழ்வான விஷயமாக இருந்தது. எனது அம்மா விஜயலட்சுமி தர் அவர்கள் தான் இந்த நிகழ்ச்சியின் ஆர்கனைஸர். இவர்களது திஸா அகாடமி குழுவினருடன் சேர்ந்து தான் மேடை நிகழ்ச்சிகளை செய்தேன்.

உங்களுக்கு கிடைத்த விருதுகள் குறித்து?

வேலம்மாள் பள்ளியில் படிக்கும் போது நிறைய இன்டர் ஸ்கூல் காம்படிஷனில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை வென்றுள்ளேன். நோவா வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் 2022 யங் மியூசிக் கம்போஸர் விருதினை பெற்றுள்ளேன். அதே ஆண்டில் இந்தியன் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் வழங்கிய ஸ்டூடண்ட் டேலண்ட் விருதினை வென்றுள்ளேன். அதே போன்று ஸ்டார் பர்ஃபாமர் விருதினை 2023ல் வென்றேன். சிறந்த மியூசிக் பேண்ட் விருதினையும் வென்றுள்ளேன். தற்போது இசையின்மீது கொண்ட அதீதமான ஆர்வத்தினால் பத்தாவது படிப்பினை ஹோம் ஸ்கூலிங் முறையில் படித்துவருகிறேன். அதில் கிடைக்கும் மீதமான நேரத்தில் முழுநேர இசை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இனி எனது பயணம் முழு நேரமும் இசைத்துறையில் தான் என தொடர்ந்து உழைப்பினை செலுத்தி வருகிறேன். அதற்கான பலன்கள் நிச்சயமாய் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

எதிர்கால ஆசைகள் மற்றும் இலட்சியங்கள் குறித்து?

எதிர்காலத்தில் நிறைய மேடை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். அதில் கிடைக்கும் பணத்தினை ஏழைக் குழந்தைகளின் இலவசக் கல்விக்கு அளிக்க வேண்டும் என்கிற பெரும் எண்ணங்கள் இருக்கிறது. நிச்சயமாக செய்வேன். ஏற்கெனவே எங்கள் திஸா அகாடமி மூலமாக எனது பெற்றோர் நிறைய கல்வி உதவிகளை செய்து வருகிறார்கள். எனது தாத்தா மற்றும் பாட்டி சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள். இசைத்துறையில் எதிர்காலத்தில் ஏ .ஆர். ரஹ்மான் போன்று சிறந்த மியூசிக் டைரக்டராக வரவேண்டும் என்பது எனது ஆகப் பெரும் ஆசை. அதே போன்று மைக்கேல் ஜாக்சனை எனது ஆதர்ஸ குருவாக நினைக்கிறேன். இளையராஜாவின் பாடல்கள் என்னை பெரிதும் கவர்ந்தது. சிறுவயதிலிருந்தே அதை கேட்டே வளர்ந்திருக்கிறேன். எனது இசையார்வத்திற்கு எனது பெற்றோர் மிகுந்த உறுதுணையாக இருந்து வருகிறார்கள். அவர்களால்தான் எனது இசைப்பயணம் வெற்றிகரமாக துவங்கியுள்ளது என்பேன். இசைத்துறையில் பெரிதும் சாதிக்க நினைக்கும் இந்த இளம் இசையமைப்பாளர் இசைக்கென தனியாக ஒரு பள்ளியை அமைத்து இலவசமாக பலருக்கும் இசை கற்றுத் தரவேண்டும் என்பது இவரது லட்சியம் என்கிறார். இவர்களின் அகாடமி மூலமாக இவரது பெற்றோர்கள் ஏற்கனவே நிறைய சமூக சேவைகளைச் செய்துவருகிறார்கள். தமிழகமெங்கும் பெண்களின் பாதுகாப்புக்கென்று மார்ஷல் ஆர்ட் என்கிற சில தற்காப்புக் கலையை இலவசமாக சொல்லித் தருகிறார்கள் என்பது சிறப்புத் தகவல்கள்.

– தனுஜா ஜெயராமன்

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்