உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக்கொள்ளுங்கள்!

மனதில் எப்போதும் வெற்றிக்கான ஊக்கமும், உந்துதலும் அவசியம். நம்மில் பலர் தோல்வி மனப்பான்மையோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.பெரும்பான்மையானவர்கள் தாங்களே தங்களை மட்டும் தட்டிக் கொண்டு, நான் தோற்பதற்காகத்தான் பிறந்துள்ளேன். என்னால் வெற்றிபெற முடியாது என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு தோல்வியாளராக இருப்பதுதான் நமது தலைவிதி என்றால் நம்மால் எப்படி வெற்றிபெற முடியும்? அந்த எண்ணம் உடையவர்கள் வெற்றிக்கான சாத்தியக் கூறுகளை தூக்கியெறிந்துவிடுகிறார்கள். தோல்வி மனப்பான்மை உள்ளவர்கள் முன்பு நாம் சந்தித்த தோல்விகள் நமது பிரச்னை அல்ல. ஆனால் அந்தத் தோல்விகளை நாம் பார்க்கும் விதம்தான் நமது பிரச்னை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். எப்போதுமே தோல்விகளை வெற்றிக்கான படிக்கற்களாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் தன்னம்பிக்கையாளர்கள்.

எனவே தோல்வி என்னும் தடைகளைத் தாண்டி நாம் ஜெயிக்கும்போது நமது பலம் கூடுகிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய மிக முக்கிய முதல் தடை எது தெரியுமா? தயக்கம்.நம்மால் இதைச் செய்ய முடியுமா? எப்படிச் செய்யமுடியும்? இதைச் செய்ய பணம்,நேரம்,திறமை நம்மிடம் உள்ளதா?என்று மனதில் தோன்றும் எண்ணம்தான் மாபெரும் தடை என்பதை நாம் உணர வேண்டும். மனதை ஊக்கப்படுத்தினால் தான் மகத்தான சாதனைகளைச் செய்ய முடியும்.அப்படித் தன்னுடைய மனதை ஊக்கப்படுத்தி வெற்றிபெற்ற தன்னம்பிக்கை மங்கைதான் ஜெனி ஜெரோம்.ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் தரையிறங்கியது. சனிக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது கேரளத்துக் கடலோர மக்களுக்குப் பெருமையாக இருந்தது. கேரளாவைச் சேர்ந்த ஜெனி ஜெரோம் மிகக் குறைந்த வயது பெண் விமானி என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார். இவரது சி்று வயதுக் கனவு நனவாகியுள்ளது.ஜெனி ஜொரோம் கேரளாவின் வயது குறைந்த வணிக விமானியாக வரலாறு படைத்துள்ளார்.இவர் ஷார்ஜாவில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு வந்த ஏர் அரேபியா (G9 449) விமானத்தில் இணை விமானியாகப் பணியாற்றியுள்ளார். பீட்ரஸ்-ஜெரோம் தம்பதியின் மகளான ஜெனி ஜெரோம். திருவனந்தபுரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்கரைக் கிராமமான கொச்சுத்துறைப் பகுதியைச் சேர்ந்தவர்.

எட்டாம் வகுப்பு முதலே விமானி ஆகவேண்டும் என்பது இவரது கனவாக இருந்துவந்தது.மத்தியக் கிழக்குப் பகுதியான அஜ்மனில் வளர்ந்த ஜெனி ஜெரோம் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு விமானம் ஓட்டும் பயிற்சியில் சேர்ந்துள்ளார்.தனது பயிற்சியை வெற்றிகரமாக முடித்து மிகக் குறைந்த வயது விமானி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இந்த இளம் விமானிக்குச் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. எழுத்தாளரும் திருவனந்தபுரம் எம்பி-யுமான சசி தரூர், இணை விமானியாகக் கொச்சித் துறைப் பகுதியைச் சேர்ந்த ஜெனி ஜெரோமி விமானியாக பயணித்ததற்கு வாழ்த்துக்கள்.அவர் ஏர் அரேபியா விமானத்தில் ஷார்ஜா முதல் திருவனந்தபுரம் வரை பறந்தபோது அவரது சிறுவயதுக் கனவு நனவாகியுள்ளது.இவர் மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கிறார் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஜென்னியின் சாதனைக்கு முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கேகே ஷைலஜா ஆகியோர் சமூக வலைத்தளங்கள் மூலம் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஜெனியின் கனவுகளுக்கும் விருப்பத்திற்கும் ஆதரவாக இருந்த அவரது குடும்பத்தினர் சமூகத்திற்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள்.ஜெனி ஜெரோமின் சாதனை பெண்களுக்கும், சாதாரண மக்களுக்கும் ஊக்கமளிக்கிறது.ஜெனி மென்மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன் என்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தன்னுடைய முதல் பயணத்தினை முடித்த ஜெனி, ‘நான் ஆர்மீனியாவுக்குப் பறக்கத் திட்டமிடப்பட்டிருந்தேன். பின்னர் அது கேரளாவுக்கு மாற்றப் பட்டது. எனது முதல் விமானத்தை எனது சொந்த ஊருக்கு இயக்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன்,” எனத் தனது முதல் விமானப் பயணத்தை முடித்த ஜெனி தெரிவித்துள்ளார். தன்னுடைய தொடர் முயற்சியாலும் பயிற்சியாலும் தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொள்ளும் திறனாலும் இளம்வயதிலே விமானியாக சாதித்து வரும் ஜெனிஜெரோமின் வாழ்க்கை இன்றைய இளம் பெண்களுக்கு ஒரு உன்னத பாடமாகும்.

Related posts

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்