Thursday, October 3, 2024
Home » மங்கலத் தாயே நீ வருவாயே!

மங்கலத் தாயே நீ வருவாயே!

by Lavanya

நவராத்திரி ஆரம்பம் – 3.10.2024

நவராத்திரி சிறப்பு

நவராத்திரி வந்துவிட்டது. மகாலய அமாவாசை முடிந்ததும் நவராத்திரி தொடங்குகிறது. பிதுர்பூஜை முடிந்த கையோடு தேவபூஜை தொடங்குகிறது. நவராத்திரி என்ற சொல் அற்புதமானது. அதில் உள்ள “ராத்திரி’’ என்ற சொல் இரவு காலத்தைக் குறிக்கிறது. மனிதர்களுக்கு பகல் காலம் போலவே இரவுக் காலம் மிக முக்கியம். தட்சிணாயனம் என்றால் இரவு. இது தட்சிணாயனத்தில் கொண்டாடப்படும் பண்டிகை. அடுத்து இரவில் கொண்டாடப்படும் பண்டிகை. புதுமையான பலன் தரும் பண்டிகை. ஒன்பது நாள் இரவுக் காலம் கொண்டாடும் பண்டிகை. இவையெல்லாம் நவராத்திரியின் சிறப்பு அம்சங்கள்.

பெண்மையைப் போற்றும் பண்டிகை

சில பண்டிகைகள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே பிரசித்தமாக இருக்கும். சில பண்டிகைகள் நாடு முழுவதும் பிரசித்தமாகக் கொண்டாடப்படும். நவராத்திரி பண்டிகை இந்தியாவில், அனேகமாக எல்லா மாநிலங்களிலும் விரிவாகக் கொண்டாடப்படும் பண்டிகை. பெண்மையை சக்தியாகக் கொண்டாடும் நமது சமய மரபு, சிவராத்திரியை ஒரு நாளைக்கு வைத்துவிட்டு, நவராத்திரியை ஒன்பது நாள்களுக்கு என்று வைத்து வணங்கிப் போற்றிய தத்துவத்தைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கல்வியின் பெருமைகளையும், கலைகளின் பெருமைகளையும், குணத்தின் சிறப்பையும், ஞானத்தின் அருமையையும் பேசும் பண்டிகை இது. மற்ற உயிரினங்களால் நம்மைவிட வேகமாக ஓடமுடியும்; நம்மைவிட வலிமையானவையாக அவை இருக்கின்றன; நம்மால் முடியாத பலவற்றையும் அவை செய்கின்றன, ஆனால் நம்மால் கற்க முடிந்த அளவுக்கு அவற்றால் கற்றுக்கொள்ள முடியாது. மனிதனாக இருப்பதன் பெருமையே விருப்பம் இருந்தால், எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும் என்பதுதான். அதுதான் சாரதா நவராத்திரியின் சிறப்பு.

மனித குலத்தின் மகத்தான ஆற்றலை உணர்த்தும் பண்டிகை

இந்த உலகம், அண்டாதி அண்டங்கள் எல்லாம் இணைத்து சக்தியால் உருவானது. அண்டங்களை இயக்குவது இந்த பிரபஞ்ச சக்தி (Power of Universe). எல்லாவற்றையும் இயக்குவது மட்டுமல்ல எல்லாவற்றையும் தருவதும் இந்த பிரபஞ்ச சக்திதான். இதை உணர்ந்து கொண்டாடினால், நவராத்திரியின் விசேஷமான பலனை, நம் மனிதகுலம் முழுமையாகப் பெறும். மனித குலத்தின் மகத்தான ஆற்றலை உணர்த்தும் பண்டிகைதான் நவராத்திரி. இதில் முப்பெரும் தேவியர்களை (வீரம், செல்வம், ஞானம்) வணங்குகின்றோம். முப்பெரும் ஆற்றலும் இணைந்தால் கிடைக்கும் மகத்தான வெற்றியின் குறியீடாக தசமி அன்று “விஜயதசமி” விழாவை பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். ஒரு மனிதனாக உருவாவதில் முக்கியமான அம்சம், அந்த மனிதன் ஒரு உயிராக, மலரவேண்டும். இந்த ஒன்பது நாட்களும் படிப்படியாக மலர்வதை குறித்ததாகவே (progressive) இருக்கிறது. பத்தாவது நாளான விஜயதசமி. பூரணமாக மலர்ந்து வெற்றியடைந்து விட்டதைக் குறிக்கிறது.

அம்மன் வழிபாட்டில் ஆர்வம் இல்லாதவர்கள் யார்?

நாடெங்கும் துர்க்கைக்கு ஆலயங்கள் உண்டு. சக்தி வழிபாட்டை அறுசமய வழிபாட்டில் ஒன்றாக வைத்தார்கள். “சாக்த வழிபாடு’’ என்று அழைக்கப்படும் இந்த வழிபாட்டை ஆயிரக்கணக்கான மக்கள், மற்ற வழிபாட்டைவிட அதீத ஆர்வத்துடன் செய்கிறார்கள். அம்மன் வழிபாட்டில் ஆர்வம் இல்லாதவர்கள் யார்? அது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும், துணிச்சலையும், செயலாற்றலையும் தருகிறது. தட்சிணாயனத்தின் முதல் மாதமான ஆடி மாதம் முழுவதுமே அம்மன் வழிபாட்டிற்கு என்றே ஒதுக்கி வைத்தார்கள். இல்லாததை இருப்பதாக மாற்றும்
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடு, அதாவது சக்தி வழிபாடு. அது என்ன ராத்திரி வழிபாடு? பொதுவாகவே “ராத்திரி” என்பது இருட்டைக் குறிக்கும். இருள் என்பது புத்தியின் மயக்க நிலையைக் குறிக்கும். “நெஞ்சகம் இருளானால் வஞ்சக எண்ணங்கள் தானே தோன்றும்’’ என்பார்கள். இருட்டு என்பது அஞ்ஞானத்தைக் குறிப்பது. இந்த அஞ்ஞானம் என்பது தனியான ஒரு பொருளோ, தத்துவமோ அல்ல. ஒளி இன்மை, அறிவின்மையின் பிரதிபலிப்புதான் அஞ்ஞானம். இருப்பது என்பது ஒளி. இல்லாதது என்பது இருள். இல்லாததை இருப்பதாக மாற்றுவதற்குத்தான் நவராத்திரி வழிபாடு. இதில் சக்தியின் ஆற்றலை (ஒளியை) வணங்குகின்றோம். ஆற்றலைப் பெறுகின்றோம்.

மகிஷாசுர மர்த்தனி

“மகிஷாசுர மர்த்தனி” என்று துர்க்கையைக் கொண்டாடுகிறோம். `மகிஷம்’ என்றால் எருமை. எருமைத் தலையோடு கூடிய அசுரனை, சிங்க வாகனம் ஏறி அழித்தவள் பராசக்தி. இது புராணக் கதையாக இருப்பினும், இதன் தத்துவச் சிறப்பு அபாரமானது. எருமையின் நிறம் கறுப்பு (ராத்திரி). எருமையின் குணம் தாமசம் (தமஸ்). மனிதர்களிடம் தெளிவின்மையாகிய இருட்டும் தமஸ் குணமும் மிஞ்சி நிற்கும்போது அவன் ஆற்றல் நேர்வழியில் செல்லாது. துர் குணங்களே மிகும். தமஸ் குணம், ஒரு மனிதனிடம் அமைந்துள்ள குணங்களான காமம், வெகுளி, மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை செய்தல், இரத்தல், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை உணர்வு, உறக்கம், அச்சம், சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும் பிறர்க்குக் கேடு விளைவிக்கும் செயல்கள் செய்தல், பகட்டுக்காகச் செய்யப்படும் செயல்கள் ஆகியவற்றைக் குறிக்கும்.
தமோ குணத்திலிருந்து, சோம்பல் உண்டாகிறது. தமோகுணப் பெருக்கினால் இராட்சசத் தன்மையும், மோகமும் அதிகரிக்கின்றது. தமோ குணத்தினால் உறக்கநிலையும் உண்டாகிறது. தமோ குணத்தால் மறுபிறவியில் விலங்கு, மரம், செடி, கொடி போன்ற தாழ்வான நிலை பிறப்பு உண்டாகிறது. அது அவர்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் துயரத்தைத் தரும். இந்த குணத்தைத் தானே போக்கிக்கொள்ள முடியாது. அதை அழிக்க (மர்த்தனம்) வேண்டும். நவராத்திரி முதல் மூன்று நாள் வழிபாட்டில் அசுர குணங்களாகிய இருட்டையும், தமஸ் எனும் குணத்தையும் முற்றிலும் நீங்க பிரார்த்திக்கிறோம்.

அசுரர் யார்?

புராணக்கதைகளில் ஏதோ அசுரர்களை அழித்து தேவர்களைக் காத்தாள் தேவி என்று படிக்கிறோம். அசுரர்களும் தேவர்களும் தனித்தனி இனம் என்று நினைத்துக் கொள்கிறோம். உண்மையான தத்துவம் அதுவல்ல. சாத்வீகம் என்பதும், நற்குணங்கள் என்பதும், ஆக்கபூர்வமான அறிவு என்பதும், தெளிவு (வெளிச்சம்) என்பதும் தேவர் குணம் எனப்படும். இந்த குணங்களும் தெளிவும் இல்லாத நிலை அசுரர் குறியீடு. இந்திரனே ஆனாலும் அசுரகுணம் வரும்போது அவன் துன்பப்படுகிறான். அசுரனே ஆனாலும் தேவகுணம் தலையெடுக்கும் போது அவன் இன்பத்தை அடைகிறான். எனவே குணங்களின் வளர்ச்சிக்கும் ஆக்கபூர்வமான சக்திக்கும் துர்கையை வணங்குகிறோம்.

ராகு காலத்தில் துர்க்கை

பொதுவாக ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களை நிழல் அல்லது இருள் கிரகங்கள் என்பார்கள். ஒன்று தலை இன்னொன்று வால். ஒளியாகிய சூரியனையும் சந்திரனையும் விழுங்கும் வல்லமை பெற்றவை இந்த கிரகங்கள். எனவேதான் இவர்களால் சூரிய சந்திர ஒளி மங்குவதை “கிரகணம்” என்கிறோம். இந்த கிரகணம் நல்லறிவை செயல்படாது முடக்கும். இந்த முடக்கத்தை நீக்குவதுதான் துர்க்கை வழிபாடு. ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுவது சிறப்பு.

சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளி அள்ளித் தருபவள்

நவராத்திரியின் அடுத்த மூன்று நாள்கள் திருமகளுக்கு உரியது. மகாலட்சுமியை அலைமகள் என்று அழைக்கிறோம். பாற்கடலில் அவதரித்த தேவி மஹாலட்சுமி. பாற்கடலைக் கடைந்தபோது பல்வேறு பொருட்கள் தோன்றின. அவைகளில் பலவற்றை தேவர்கள் எடுத்துக் கொண்டனர். அந்த பாற்கடலில் இருந்து மகாலட்சுமியும் அவதரித்தாள். அவள் உதித்த நாள் பங்குனி உத்திரத் திருநாள்.

“லஷ்மீம் ஷீர ராஜ சமுத்திர தனயாம் ஸ்ரீ ரங்க தாமேஸ்வரீம்
தாசி பூத சமஸ்த தேவ வனிதாம் லோகைக தீபாங்குராம்
ஸ்ரீமன் மந்த கடாக்ஷ லப்த பிரமேந்திர கங்காதராம்
த்வாம் திரை லோக்ய குடும்பினிம் சரஸிஜாம் வந்தே முகுந்தப்ரியாம்’’

– என்ற ஸ்லோகம் இதை விவரிக்கும்.
நவராத்திரியின் இரண்டாம் மூன்று நாட்கள் செய்யும் பூஜைகள் அஷ்ட
லட்சுமியின் அருளைக் குறித்துச் செய்யப்
படுகின்றது. வீரத்தையும் வெற்றியையும் விரும்பிய நமக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளிஅள்ளித் தருபவள் அல்லவா
மகாலட்சுமி!

மஹாலட்சுமி வசிக்கும் இடங்கள்

பண்டிகையின் மகிழ்ச்சி என்பது குணங்களின் மகத்துவங்களைச் செழுமை யாக்குவது. ஒவ்வொரு பண்டிகையின் முடிவிலும் நம்முடைய ஆத்மார்த்தமான குணம் அதிகரித்து இருக்க வேண்டும். அதுதான் பக்தியின் விசேஷம். மகாலட்சுமியின் திருவருள் பெற வேண்டும் என்றால், நல்ல குணங்களும் பரோபகார சிந்தனையும் மனதில் அழுத்தமாக இருக்க வேண்டும். ஒரு முறை சுகப்பிரம்ம மகரிஷி மகாவிஷ்ணுவைச் சந்தித்தபோது பக்கத்தில் இருந்த மகாலட்சுமியிடம் ஒரு கேள்வி கேட்டார்.“அம்மா நீ யாரிடத்தில் பிரியமாக வசிப்பாய்?’’ என்ற அவர் கேள்விக்கு மகாலட்சுமி சிரித்தபடி பதில் தந்தாள், “இனிமையான பேச்சும், சாந்தமும்,
பணிவும், கிடைத்ததைப் பகிர்ந்துகொள்ளும் குணமும், பிறரை மதிக்கும் பண்பும், மனம் மொழி மெய்களில் தூய்மையும் யாரிடத்தில் உண்டோ, அவர்களிடத்தில் நான் நிரந்தரமாக இருப்பேன்’’ என்றாள். இந்த நற்குணங்கள் நவராத்திரி பூஜையின் போது ஓங்க வேண்டும். நற்குணங்கள் நிலைத்திருக்க பிரார்த்திக்க வேண்டும். “எண்ணம் போல்தானே வாழ்வு’’ என்பதை மறக்கக்கூடாது.

மாதுளம் பழம்

மகாலட்சுமிக்கு மாதுளம்பழம் பிடித்தமானது. நவராத்திரியில் இதனை நாம் விசேஷமாக நிவேதனம் செய்ய வேண்டும். இதற்குப் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது. பத்மாட்சன் என்ற அரசன் தவமிருந்தான். மகாவிஷ்ணு அவன் முன்தோன்றி, “என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டார். “மகாலட்சுமியே குழந்தையாகப் பிறக்க வேண்டும்’’ என்று வரம் வேண்ட, மகாவிஷ்ணு “உன் எண்ணம் நிறைவேறும். இந்த மாதுளம் பழத்தைக் கொண்டு போய் உன் பூஜை அறையில் வைத்துக் கொள்’’ என்றார். மன்னனும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு பூஜை அறையில் வைத்து தினசரி பூஜை செய்தான். அது நாளுக்கு நாள் பெரிதானது. இதை அதிசயத்தோடு பார்த்தான் மன்னன். ஒருநாள் அது இரண்டாகப் பிளந்தது அதில் ஒரு பக்கம் அழகான முத்துக்களும் ஒரு பக்கம் அற்புதமான பெண் குழந்தையும் இருக்க, அதிசயத்தோடு அந்தக் குழந்தையை எடுத்தான். தாமரை மலர் போல் சிரித்த முகத்துடன் இருந்த அந்த பெண் குழந்தைக்கு, “பத்மை’’ என்று பெயரிட்டான். இந்தக் கதையின் அடிப்படையில் மாதுளம் பழம்
நிவேதனமாகப் படைக்க வேண்டும்.

“தான்யம் தனம் பஶும் பஹுபுத்ரலாபம்
ஸதஸம் வத்ஸரம் தீர்கமாயு:’’
என்ற மந்திரத்தை சொல்லித் துதிக்க, எல்லா செல்வங்களையும், தீர்க்கமான ஆயுளையும் கொடுப்பாள்.

என்னென்ன மலர்கள்? பட்சணங்கள்?

மகாலட்சுமிக்கு பிடித்த மலர்களையும் நிவேதனங்களையும் பற்றிப் பல்வேறு நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. மகாலட்சுமிக்குப் பிடித்த தாமரைப் பூ, மல்லிப் பூ, மரிக்கொழுந்து, பன்னீர் ரோஜா, இப்படி நமக்கு எந்த பூ கிடைத்தாலும் அதை வைத்து வழிபாடு செய்யலாம். வாசனை மிகுந்த சந்தனம், ஜவ்வாது, அத்தர், கோரோசனை இப்படியாக பல வாசனைப் பொருட்கள் மகாலட்சுமிக்கு மிகவும் உகந்தது. மிக முக்கியமாக பொங்கல், பால்பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், தேன், கற்கண்டு, ஆரஞ்சு, மாதுளை, விழாப்பழம், மாம்பழம், வாழைப்பழம், திராட்சை முதலிய கனிவகைகளைப் படைக்க வேண்டும். மிக முக்கியமாக தாமரை மலர்கள் மகாலட்சுமிக்கு பிடித்தமானது. வில்வமும் மகாலட்சுமிக்குப் பிடித்தமானது.

நவராத்திரி கொலு

நவராத்திரியில் கொலு என்பது விசேஷம். பல்வேறு விதமான பொம்மைகளைப் படிகளில் அடுக்குவார்கள். இந்த படிகள் கீழிருந்து மேலே ஒவ்வொன்றும் உயரமாகப் போய்க் கொண்டே இருக்கும். கீழ்ப்படியில் சாதாரண மனித உருபொம்மைகளை அல்லது விலங்குகளை அல்லது தாவரங்களை வைப்பார்கள், மேல்படியில் பராசக்தியை அல்லது இஷ்ட தேவதையை வைத்து நிறைவு செய்வார்கள். ஒவ்வொரு மனிதனும் படிப்படியாக உயர வேண்டும், வான் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் அந்த நிலையை அடைந்து தெய்வத்தின் அருளைப் பெற வேண்டும் என்பதுதான் நவராத்திரி கொலுப்படிகள் நோக்கம். அஷ்டமி, நவமி, தசமி நவராத்திரியில் கன்னி பூஜை என்பது விசேஷமானது. முதல் நாள் இரண்டு வயதுச் சிறுமியை அம்பிகையாகப் பாவித்து வணங்குவார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வயதுகூட உள்ள சிறுமியை அம்பாளாகப் பாவித்து வணங்குகின்ற கன்னி பூஜை சிறப்பானது. அது மட்டும் இல்லை, இந்த ஒன்பது நாட்களிலும் அம்பிகையை ஒவ்வொரு வடிவத்தில் அலங்கரித்து பூஜைசெய்வார்கள். மகேஸ்வரி, கவுமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, மகா சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி ஆகிய வடிவங்களில் அம்பிகையை அலங்கரித்து வழிபடுவார்கள். இந்த ஒன்பது நாளும் வழிபட முடியாதவர்கள் குறைந்தபட்சம் அஷ்டமி, நவமி, தசமி முதலிய நாட்களில் விரதம் இருந்து வழிபட வேண்டும். நவராத்திரி நாட்களில் வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், சந்தனம், தாம்பூலம், பூக்கள் கொடுக்க தேவியின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.

அனந்தபத்மநாபன்

You may also like

Leave a Comment

2 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi