தினம் ஒரு கீரையினை எளிதாக சாப்பிடலாம்!

நன்றி குங்குமம் தோழி

கீரை நம் அன்றாட உணவில் இடம்பெறும் முக்கியமான உணவு. ஆனால் இப்போது பெண்கள் வேலைக்கு செல்வதாலும், குழந்தைகளும் மேற்கத்திய உணவுகளை விரும்புவதாலும், கீரை உணவினை நாம் செய்வதில்லை. குறிப்பாக அதனை சுத்தம் செய்து சமைப்பதை பலர் கஷ்டமாக பார்க்கிறார்கள். அதனாலேயே கீரை உணவினை நாம் நம் உணவுப் பழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதே சமயம் அம்மாக்களுக்கு குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஒன்றை விட்டு விடவும் எண்ணமில்லை. அப்படிப்பட்ட அம்மாக்களுக்காகவும், குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் ஆரோக்கியத்திற்காகவும் இன்ஸ்டன்ட் கீரை மிக்சினை ‘தினசரி கீரை’ என்ற பெயரில் தயாரித்து வருகிறார் திருச்சியை சேர்ந்த லட்சுமி பிரியா.

‘‘எளிமையான முறையில் கீரையை இன்ஸ்டன்டாக உணவில் சேர்த்துக் கொள்வதற்காகவே இந்த அருமையான வழியை கண்டுபிடித்து அதில் சக்சஸும் கண்டுள்ளார் இவர். இல்லத்தரசியாக இருந்தவர், தன் மகனுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக ஆர்கானிக் உணவை நோக்கி தன் கவனத்தை திருப்பியுள்ளார். குழந்தைக்கு பிடித்தமாகவும் அதே சமயம் ஆரோக்கியமான உணவு தேடலில்தான் இவருக்கு கீரை மிக்ஸ் தயாரிப்பிற்கான ஐடியா வந்துள்ளது.

கலைக்கூடம் ஒன்றில் பாடம் பயிற்றுவிப்பாளராக பணி புரியும் இவர், வீட்டில் இருந்தபடி டைலரிங் செய்து வந்துள்ளார். ஆனால் உணவு மீது ஆர்வம் கொண்டிருந்த காரணத்தால், ஏதாவது உணவு தயாரிப்பில் இறங்க வேண்டும் என்று நினைத்த போது, தன் பிள்ளைகளுக்காக ஆரம்பித்த ஆர்கானிக் உணவு முறை பின்னர் உறவுகள் மற்றும் ஃப்ரெண்ட்ஸ் என பரவ ஆரம்பித்தது. இப்போது அதுவே அவரின் முழு நேர ெதாழிலாக மாறிவிட்டது.

“என் கணவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்தார். எங்களுக்கு ஒரு மகன். அவனுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், டாக்டர் அவனுக்கு ஆரோக்கியமான அதே சமயம் வீட்டில் தயாரிக்கப்படும் உணவினை வழங்க வேண்டும் என்று சொல்லிட்டார். அதனால் வீட்டில் என் பாட்டி, அம்மா மற்றும் என் மாமியார் இவர்களின் ஆலோசனைப்படி நான் அவனுக்காக ஸ்பெஷல் உணவினை தயாரிக்க ஆரம்பித்தேன்.

அப்போது, கீரையில் நான் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தேன். தினம் ஒரு கீரை அவன் உணவில் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்தேன். கீரையில் இல்லாத சத்துக்களே கிடையாது. எல்லா நோய்க்கும் மருந்து கீரைல இருக்கு. காய்ச்சலுக்கு பிரண்டை, பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடலாம். சருமம் மற்றும் முடி கொட்டும் பிரச்னைக்கு முருங்கைக் கீரை மற்றும் கறிவேப்பிலை நல்லது. கண் பார்வை குறைபாடு, கிட்னி சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் கீரைதான் தீர்வு.

கிட்டத்தட்ட 150 வகை கீரைகள் இருந்துள்ளன. இவற்றை நாம் ஒழுங்காக சாப்பிட்டு வந்திருந்தாலே நம்மை எந்தவித நோயும் பாதிக்காது. இப்போதும் 50 வகை கீரைகள்தான் உள்ளன. நான் ஒவ்வொரு முறை கிராமத்திற்கு பாட்டி வீட்டிற்கு செல்லும் போது, குப்பை கீரை என்று செய்து தருவாங்க. அதில் பல மருத்துவ குணம் இருப்பதாக சொல்வாங்க. அதனால் நான் உணவில் தினம் ஒரு கீரையினை சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தேன். அதனால் எங்களுடையது மட்டுமில்லாமல் என் மகனின் உடல் ஆரோக்கியமும் நன்றாக தேறியது. படிப்படியாக அவன் எடுத்து வந்த மருந்தும் குறைந்து அவன் ஆக்டிவாக நடக்க ஆரம்பித்தான். இப்போது என் மகள் மற்றும் மகன் இருவரும் கல்லூரிப் படிப்பு படித்து வருகிறார்கள்.

இவருக்கும் அதன் பிறகு எந்த வித ஆரோக்கிய குறைபாடும் ஏற்படவில்லை. இவை அனைத்தும் உணவில் நான் செய்த சிறு மாற்றம்தான். அதன் அடிப்படையாக முதலில் நான் எங்க வீட்டில் மாடித் தோட்டம் அமைத்தேன். பல வகையான கீரைகளை பயிர் செய்தேன். கொரோனா காலத்தில் இந்த கீரைகள் எங்களை கேடயமாக பாதுகாத்தது’’ என்றவர் அதன் பிறகு இதனை முழு நேர தொழிலா மாற்றி அமைத்துள்ளார்.

‘‘இன்றைய அளவில் வேகமான வாழ்க்கையில் பலரால் கீரையை சமைக்க முடிவதில்லை. கீரைகளால் நம்முடைய ஆரோக்கியம் மேம்படுவது மட்டுமல்லாமல், விவசாயமும் செழிக்கும். ஆனால் பெண்கள் இப்போது வேலைக்கு செல்வதால், அவர்களால் இயற்ைக முறையினை கடைபிடிக்க முடிவதில்லை. அதே சமயம் அதனை சாப்பிடவும் விரும்புகிறார்கள். அவர்களும் வாரத்துக்கு ஒரு முறையாவது கீரையினை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் என்ன செய்யலாம் என்று யோசித்த போதுதான் ரெடி மிக்ஸ் நினைவிற்கு வந்தது. எப்படி சத்து மாவு கஞ்சிப் பவுடர் உள்ளதோ அதேபோல் கீரையில் மிக்ஸ் தயாரிக்க திட்டமிட்டு அதற்கான ஆய்வில் ஈடுபட்டேன்.

இதனை அப்படியே சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம் அல்லது இட்லி, தோசைக்கும் சேர்த்து சாப்பிடலாம். இதன் மூலம் தினம் ஒரு கீரை சாப்பிட்ட உணர்வு ஏற்படும். உடலுக்கும் ஆரோக்கியம் என்றவர்’’ இதனை தயாரிக்கும் முறை பற்றி விவரித்தார். ‘‘முதலில் சிறிய அளவில்தான் செய்து வந்தேன். நல்ல வரவேற்பு கிடைத்ததால், இப்போது பெரிய இடத்தில் பொடியினை தயாரிக்க இயந்திரங்கள் எல்லாம் வைத்து தயாரித்து வருகிறேன். இயற்ைக முறையில் கீரைகளை விளைவிக்கும் விவசாயிகளிடம் இருந்துதான் கீரையினை நான் கொள்முதல் செய்கிறேன். அந்த கீரைகளை முதலில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நன்கு கழுவி பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்து, சோலார் முறையில் நன்கு காய வைத்திடுவோம்.

அதன் பிறகு அதில் தேவையான பருப்பு மற்றும் மிளகு சேர்த்து மிக்சாக தயாரிப்போம். எந்தவித ரசாயனமும் கலப்பதில்லை என்பதால் இதனை ஒன்றரை வயது குழந்தைக்கு கூட சாப்பிட கொடுக்கலாம். இந்த மிக்சினை இட்லி மாவில் கலந்து தோசையாக சுட்டுக் கொடுக்கலாம். அல்லது சப்பாத்தி மாவில் சேர்த்து சப்பாத்தி அல்லது பூரியாகவும் செய்து தரலாம். அப்படியே சாதத்திலும் கலந்து சாப்பிடலாம். தற்போது முடக்கத்தான், வல்லாரை, முருங்கை, பொன்னாங்கண்ணி, தூதுவளை, மணத்தக்காளி, புளிச்சகீரை. அகத்திக்கீரை, பிரண்டை கீரை, கரிசலாங்கண்ணி கீரை என 20க்கும் மேற்பட்ட கீரை மிக்ஸ்களை தயாரித்து வருகிறேன்.

இவை தவிர ராகி, கம்பு, கருப்பு கவுனி அரிசிகளில் தோசை மிக்ஸ்களும் உள்ளன. மேலும் ஆவாரம்பூ, துளசி டீ, சுக்குமல்லி காபி பொடிகளும் தயாரிக்கிறோம். இன்ஸ்டன்ட் மிக்ஸ்கள் அனைத்தும் 50 கிராம், 100 கிராம், அரை கிலோ, ஒரு கிலோ என பல எடைகளில் வழங்கி வருகிறோம். தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறோம்.

நம் உடல் பல அற்புதங்களை கொண்டது. நம்முடைய உடலில் எந்தப் பகுதியில் என்ன சரியில்லை என்பதை அழகாக எடுத்துச் சொல்லும். ஆனால் நாம் அதை புரிந்து கொள்ளாமல் உடலில் வலி என்றால் உடனே மாத்திரை எடுத்துக் கொள்கிறோம். ஒரு ஆராய்ச்சியின்படி, நாம் உட்கொள்ளும் வலி மாத்திரையின் வீரியம் நம் உடலில் 100 நாட்கள் வரை இருக்குமாம். அது உடலில் எத்தனை கழிவுகளை தேக்கி விடும். ஆனால் உண்மையில் நாம் இயற்கையான முறையில் அதனை தீர்த்துக்கொள்ள வேண்டும்’’ என்கிறார் லட்சுமி பிரியா.

தொகுப்பு: சித்ரா சுரேஷ்

Related posts

நகைகள் பாதுகாப்பும், பராமரிப்பும்!

மீ டைம்

நாடாளுமன்றம் செல்லும் மூன்று இளம் வயது பெண் எம்பிக்கள்