படித்து கொண்டே ஆட்டோ ஓட்டலாம்!

நன்றி குங்குமம் தோழி

படித்துக் கொண்டே வேலை செய்யலாம் என்பது போல தான் படித்துக் கொண்டே ஆட்டோ ஓட்டலாம் என்கிற திட்டத்துடன் வந்திருக்கிறது திருச்சியில் இருக்கிற ஊர் கேப்ஸ் நிறுவனம். கல்லூரி பெண்கள், வீட்டில் இருக்கும் பெண்கள் என பலரும் தற்போது இந்த நிறுவனத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார்கள். அதிலும் இன்னொரு சிறப்பம்சம் இந்த ஊர் ஆட்டோக்கள் முழுவதும் இ ஆட்டோக்கள். ‘‘சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில்தான் இருக்க வேண்டும் என இந்த இ ஆட்டோக்களை வைத்து தொடங்கியுள்ளோம்’’ என்கிறார் ஊர் ஆட்டோ நிறுவனத்தின் நிறுவனர் மரிய ஆண்டனி.

‘‘பொறியியல் படிச்சிட்டு தனியார் கேப்ஸ் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தேன். என் மனைவி சாஃப்ட்வேர் இன்ஜினியர். அவர் திருமணத்திற்கு முன்பு வரை லண்டனில் வேலை பார்த்து வந்தார். நான் ஏற்கனவே கேப்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததால், எனக்கு அந்த நிறுவனத்தினை செயல்படுத்தக் கூடிய அனைத்து நுணுக்கங்களும் தெரியும், மேலும் அந்தத் தொழிலில் உள்ள சிக்கல்கள் மற்றும் பிரச்னைகளையும் எவ்வாறு சமாளிப்பது என்று நன்கு அறிந்து வைத்திருந்தேன்.

அதனால் அந்த துறையில் சந்திக்கக்கூடிய குறைகளை போக்கி புதிதாக ஒரு மாடலில் கேப்ஸ் நிறுவனம் தொடங்கலாம் என நானும் என் மனைவி மேரி சைலஜாவும் முடிவு செய்தோம். கேப்ஸ் வேலையை பொறுத்தவரை ஓட்டுநருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே இடைவெளி இருந்தது. வாடிக்கையாளர்கள் ஆட்டோவை புக் செய்திருப்பார்கள்,திடீரென்று ஓட்டுனர்கள் ரத்து செய்து விடுவார்கள். காரணம், வாடகை அவர்களுக்கு கட்டுப்படியாகாததுதான். இந்தப் பிரச்னைகளை சரி செய்ய வேண்டும். அதே நேரத்தில் வாடிக்கையாளர்களும் குறைந்த விலையில் பயணம் செய்ய வேண்டும் என நினைத்தோம் அதற்காக குறைந்த விலையில் ஆட்டோ சவாரிகளை கொடுக்கலாம் என முடிவு செய்தோம்’’ என்றவர் தங்களுடைய நிறுவனம் தொடங்கப்பட்டது குறித்து பேசத் தொடங்கினார்.

‘‘நம் நாட்டின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் மக்களும் சொந்த பயன்பாட்டிற்காக வாகனங்களை வாங்குவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நினைச்ச நேரத்துக்கு போக முடிவதில்லை. மறுபக்கம் பெட்ரோல் விலை அதிகரித்ததால் மக்கள் பேருந்து, ஆட்டோ, மெட்ரோ போன்ற வாகனங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதிகமான வாகனங்களை பயன்படுத்துவதால், கார்பன் டை ஆக்சைடு புகைகளும் அதிக அளவில் வெளியேறினதால், வெப்பம் ஏற்படுது. தற்போது புவி வெப்பமயமாதல் பிரச்னையும் எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், இதற்கான மாற்று பேட்டரி வாகனங்கள்.

அதனைப் பயன்படுத்த சொல்லி அரசும், பல மேலை நாடுகளும் வலியுறுத்தி வருகிறார்கள். பல நாடுகளில் பேட்டரி வாகனங்கள் நடைமுறையில் உள்ளது. அரசும் பேட்டரியில் இயங்கக்கூடிய பேருந்துகளை வாங்க தொடங்கி இருக்காங்க. அந்த சமயத்தில்தான் பேட்டரியில் இயங்கக்கூடிய ஆட்டோக்களை வாங்கலாம் என்கிற எண்ணம் இருந்தது. ஆனால் அதை அறிமுகம் செய்தால், அதன் பயன்பாட்டிற்கு முக்கியமான சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லை. அதனால் அதனை நாங்களே சோலாரில் இயங்கக்கூடிய சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க முடிவு செய்து அதற்கான வேலையில் இறங்கினோம்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் ஆட்டோக்களை வடிவமைத்தாலும் எங்களுடைய போட்டியாளர்கள் அனைவரும் மற்ற பிரபல கார்ப்பரேட் ஆட்டோ நிறுவனங்களாக இருந்தது. அவர்களை சமாளித்து நமக்கான வாகனம் இது என்று மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும். அதற்காகவே ‘ஊர் ஆட்டோ’ என பெயர் வைத்தோம். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இணையாக உள்ளூர் நிறுவனங்களும் இருக்க வேண்டும் என்பதே இந்தத் தொழிலின் ஆரம்ப புள்ளி.

அதை நாங்கள் சமரசம் செய்து கொள்ளவே இல்லை. எங்களுக்கென பிரத்யேகமான ஆப் ஒன்றை தொடங்கினோம். வாடிக்கையாளர்கள் எங்களை எளிதில் அணுகுவதற்காக முதன் முறையாக வாட்ஸாப் மூலமாக ஆட்டோவை புக் செய்யும் நடைமுறையை கொண்டு வந்திருக்கிறோம். வாட்ஸாப்பில் புக் செய்து அவர் எங்களுக்கு அவர்களின் லொகேஷனை ஷேர் செய்தால் போதும். நாங்க அவர்களின் இடத்திற்கு சென்றுவிடுவோம்.

ஆனால் அந்த சமயம் கொரோனா காலம் என்பதால், பேட்டரி வாகனங்களை இயக்க அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. அதனால் முதலில் சாதாரண பெட்ரோல் ஆட்டோக்களை வைத்து தான் கோவையில் இந்த நிறுவனத்தை தொடங்கினோம். அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு திருநெல்வேலி, தற்போது திருச்சியில் 50 இ – ஆட்டோக்களை வைத்து தொடங்கியிருக்கிறோம். இதில் சமமாக ஆண்-பெண் இருவரையும் வேலைக்கு அமர்த்த முடிவு செய்தோம்.

பகலில் பெண்களும் இரவில் ஆண்களும் ஆட்டோவினை இயக்குவார்கள். பகுதி நேர வேலையில் ஈடுபடுபவர்களுக்கும் வேலை அளிக்க திட்டமிட்டோம். வெளிநாடுகளில் கல்லூரியில் படிப்பவர்கள் பகுதி நேர வேலை செய்வார்கள். அதில் கிடைக்கும் வருமானத்தில் தங்களின் அன்றாட செலவிற்கு பயன்படுத்திக் கொள்வார்கள். அதே திட்டத்தினை இதில் செயல்படுத்தி இருக்கிறோம். கல்லூரி மாணவ, மாணவிகள் பகுதி நேரமாகவும் எங்களின் ஆட்டோவினை ஓட்டலாம்.

இந்த திட்டத்தின் முக்கிய காரணம் கல்லூரி மாணவிகளும் இந்த வேலையில் ஈடுபட வேண்டும் என்பது தான். இது போக வீட்டில் உள்ள பெண்கள், சிறிய அளவில் தொழில் செய்யும் பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்கிறோம். மேலும் சிறுதொழில் செய்யும் பெண்கள் எங்களிடம் வேலைக்கு வரும் போது, அவர்களின் பொருட்களையும் எங்க இணையதளத்தில் பதிவேற்றி அவர்களின் பொருட்களுக்கு விளம்பரம் கொடுக்கிறோம்.

மேலும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பெண்களை அணுகி அவர்களை எங்களிடம் ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். இதன் மூலம் சவாரி இல்லாத நேரத்தில் கைவினைப் பொருள்களை செய்து அதன் மூலம் அவர்கள் ஒரு சிறிய அளவில் வருமானம் பார்க்க முடியும். இது போக அவர்கள் ஆட்டோ ஓட்டுவதைப் பொறுத்து கமிஷனும் வழங்குகிறோம். இதன் மூலம் பெண்கள், கல்லூரியில் படிப்பவர்களுக்கு தங்களின் சொந்த செலவிற்கும் பெற்றோர்களை எதிர்பார்க்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது.

தற்போது 13 பெண்கள் எங்க நிறுவனத்தில் ஆட்டோ ஓட்டுகிறார்கள். சுற்றுச்சூழலை கெடுக்காத வகையிலும், எங்களிடம் வேலை செய்பவர்களுக்கு நிலையான வருமானத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். திருச்சியை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் இதனை அறிமுகம் செய்ய வேண்டும்’’ என்கிறார் மரிய ஆண்டனி.

எனக்கான செலவுகளை நானே பார்த்துக் கொள்கிறேன்…

‘‘நான் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். எனக்கு ஓட்டுநர் உரிமம் வாங்க சென்ற போது அங்குதான் இந்த ஆட்டோக்களை பார்த்தேன். அது குறித்து விசாரித்தேன். என்னைப் போன்ற கல்லூரி மாணவிக்கு நல்ல திட்டம் என்பதால், நானும் அதில் என்னை சேர்த்துக் கொண்டேன். கல்லூரி முடிந்த பின்னர் நான்கு மணி நேரம் ஆட்டோ ஓட்டுவேன். என் செலவுகள் போக என்னால் கொஞ்சம் சேர்த்து வைக்கவும் முடிகிறது.

ஆரம்பத்தில் என் வீட்டில் சொல்லும் போது உன்னால் ஆட்டோ ஓட்ட முடியுமா? படித்துக் கொண்டு எப்படி வேலையும் செய்து சமாளிப்பாய். பாதுகாப்பானதா? என்று பல கேள்விகள் அவர்கள் முன் இருந்தது. ஆட்டோ முழுக்கவும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதால், நான் எங்கு செல்கிறேன் என்பதை கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள். எலக்ட்ரிக் ஆட்டோ என்பதால் ஓட்டுவதற்கும் எளிதாகவே இருக்கிறது. இரவு நேரங்களில் ஓட்ட வேண்டியதில்லை என்பதால் வீட்டிலும் சம்மதம் கொடுத்தார்கள்.

நான் ஓட்டத்தொடங்கியதும் என்னைப் பார்த்து என் தோழிகள் மற்றும் என் வண்டியில் பயணித்த வாடிக்கையாளர்களும் நாங்களும் ஓட்டலாமா என கேட்டார்கள். நானும் அவர்களுக்கு விருப்பம் மற்றும் நேரம் இருந்தால் பகுதி நேரமாக செய்யச் சொல்லுவேன். தற்போது நான் ஆட்டோ ஓட்டத் தொடங்கியதில் இருந்து எனக்கான செலவுகளை நானே பார்த்துக் கொள்கிறேன்’’ என்கிறார் பிரிஜிதா.

தொகுப்பு: மா.வினோத்குமார்

படங்கள்: அகஸ்டின் நிகோலஸ்

Related posts

சுபிட்சம் கொடுக்கும் கதிர்குல்லா தோரணங்கள்!

உலகத்தை என் ஓவியங்கள் மூலமாக பார்க்கிறேன்!

பெண்களுக்கு ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை கொடுக்க வேண்டும்!