ஆரோக்கியம் ஆயிரம் கொடுக்கும் யோகா :யோகா தெரபிஸ்ட் பத்மபிரிய தர்ஷினி

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று கூறுவார்கள். ஆனால் இன்றைய அவசரமான யுகத்தில் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்கள் வயதானவர்களை மட்டுமின்றி, சிறு பிள்ளைகளையும் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. வயதானவர்கள், இளைஞர்கள் முதல் பள்ளி செல்லும் மாணவர்கள் வரை தொட்ட தற்கெல்லாம் மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகி வருகின்றனர். இதுபோன்ற நிலையில்,“யோகாவை சரியான முறையில் பயிற்சி செய்தாலே இதுபோன்ற நோய்களில் இருந்து நீங்கி, மருந்தில்லாமல் வாழலாம்” என்கிறார் யோகா தெரபிஸ்ட்டான பத்ம பிரியதர்ஷினி.

கோவையைச் சேர்ந்த பத்ம பிரிய தர்ஷினி தற்போது சென்னையில் வசித்து வருகிறார். ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இவர், கடந்த 10 ஆண்டு களாக யோகா மற்றும் அக்குபஞ்சர் துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, அதன் மூலம் யோகாவை மக்களிடம் எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பதற்கான சுவாரஸ்யமான வழியைக் கண்டுபிடித்துள்ளார். இது குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…

ஐ.டி. துறையைச் சேர்ந்த நீங்கள் யோகா தெரபிஸ்ட்டாக மாறியது எப்படி?

ஐ.டி. துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஒரு விபத்தில் சிக்கி கழுத்து வலியால் அவதிப்பட்டேன். பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக வலியை குணப்படுத்த முடியவில்லை. அதன் பிறகே நான் அடிப்படையாக கற்று வைத்திருந்த யோகா பயிற்சியை செய்ய ஆரம்பித்தேன். சில வாரங்களிலேயே வலியில் இருந்து முழு நிவாரணம் கிடைத்தது. அதன் பிறகே யோகா மற்றும்அக்குபஞ்சர் குறித்து தீவிரமாக படிக்க ஆரம்பித்தேன்.

யோகா தெரபி மையத்தை ஆரம்பிக்க தூண்டியது எது?

யோகா மற்றும் அக்குபஞ்சர் இரண்டு மே உடல் வலிகளுக்கு சிறந்த மருந்து என்பதை அறிந்துகொண்டேன். அதனைப் பற்றி ஆராய்ந்த போதுதான், முதுகுவலி, இடுப்புவலி, தோள்பட்டை-முட்டி வலி, அல்சர் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு யோகா-அக்கு பஞ்சர் மூலமாக நிரந்தரத் தீர்வு காணமுடியும் என்பதை அறிந்து கொண்டேன். இதனை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் யோகா தத்துவா மையத்தை உருவாக்கி, எளிமையான யோகா பயிற்சிகளை கற்பித்துவருகிறேன். பெரிய கார்ப்ரேட் நிறுவனங்களில் பணியாற்றுவோர் தொடங்கி அவரவரது வேலைகளில் ஏற்படக்கூடிய கழுத்து, முதுகு மற்றும் மூட்டு சம்பந்தமான வலிகளை போக்க எளிமையான யோகா பயிற்சிகளைக் கற்றுத்தருகிறோம். குறிப்பாக தற்போதைய வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படக்கூடிய சர்க்கரைநோய், உடல் பருமன், ரத்த அழுத்தம் போன்ற நோய்களில் இருந்து விடுபட தினமும் 15 நிமிடங்கள் மட்டுமே செய்யக்கூடிய யோகா பயிற்சிகளை அளிக்கிறோம்.

யோகா தெரபி மூலம் என்னென்ன மாதிரியான சிகிச்சைகளை வழங்குகிறீர்கள்?

தெரபி மூலமாக வெறும் யோகா பயிற்சி மட்டுமின்றி, உணவுக்கட்டுப்பாடு தொடர்பாகவும் கற்பிக்கிறோம். என்னென்ன மாதிரியான உணவுகளை எந்தெந்த நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் என்னென்ன மாதிரியான சத்துக்கள் கிடைக்கும் என அறிவுறுத்துகிறோம். ஏனெனில் நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்கள் தான் உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. எனவே யோகா பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் ஒன்றிணையும் போது நோயிலிருந்து விரைவில் நிவாரணம் பெறமுடியும்.

யோகா மூலமாக மருந்தில்லா வாழ்க்கை வாழ்வது சாத்தியமானதா?

எந்த நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்பவராக இருந்தாலும் சரியான யோகாவை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலமாக தீர்வு பெறலாம். ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் மருந்துகளை முற்றிலும் நிறுத்திவிட்டு நாங்கள் கற்றுத்தந்த யோகா தெரபியை முறையாகச் செய்து வந்தாலே போதுமானதாக இருக்கும். குறிப்பாக சர்க்கரை நோயில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான பல பயிற்சிகள் யோகாவில் உள்ளன. அத்துடன் யோகா தெரபி மூலமாக சர்க்கரை நோய்க்கான மருந்துகளை எடுப்பதை குறைக்கவும், அதனால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளை தடுக்கவும் யோகா தெரபி மூலம் பயிற்சி அளிக்கிறோம்.

யோகா தனிமனிதனின் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமானது?

யோகா வெறும் நோய்களைக் குணப்படுத்தக்கூடிய மருந்தாக மட்டுமல்ல, வாழ்க்கை முறை மாற்றத்திற்கும் உதவுகிறது. தற்போது யாரும் பெரிதாக உடல் உழைப்பு செலுத்துவது கிடையாது. இதனால் இரவு நேரங்களில் தூக்கமின்றி தவிக்கிறார்கள். எனவேதான் அவரவர் செய்யக்கூடிய வேலைகளுக்கு ஏற்ற வகையில் யோகாசனங்களை வடிவமைத்துள்ளோம். குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர் என உடல் அமைப்பிற்கும், வயதிற்கும், அவர்களின் உடல் உழைப்பிற்கும் ஏற்ப ஆரோக்கியமான எளிய ஆசனங்களை, புதிதாக வடிவமைத்திருக்கிறேன். அது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், வலிகளில் இருந்து நிவாரணம் பெறவும் உதவுகிறது. யோகாவை கற்றுக்கொண்டு அதனை செய்வதின் மூலம் ஆரோக்கியமான வாழ்வினை பெறலாம் என்கிறார் பத்ம பிரியதர்ஷினி.
– தனுஜா ஜெயராமன்.

Related posts

கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில் எட்டியம்மன் கோயிலில் வைக்கப்பட்ட சீல் அகற்றம்: பட்டியலின மக்கள் சாமி தரிசனம்

செப்.28-ல் பனப்பாக்கத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்!!

தவறான திசையில் அதிவேகமாக வந்த BMW கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி