மகசூல் குறைந்தது எலுமிச்சை பழம் விலை திடீர் உயர்வு: கிலோ ரூ.150க்கு விற்பனை

சென்னை: மகசூல் குறைந்ததால், எலுமிச்சை பழம் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் மொத்த மார்க்கெட்டில் முதல் ரக எலுமிச்சை பழம் கிலோ ரூ.150க்கும், சிறிய ரக எலுமிச்சை ரூ.120க்கும் விற்கப்படுகிறது. ஒரு எலுமிச்சை பழம் ரூ.7 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ரயில்வே கோடூர் பகுதியில் அதிக அளவில் எலுமிச்சை பழம் சாகுபடி செய்யப்படுகிறது. அங்கிருந்து சென்னை, பெங்களூரு உள்பட பல்வேறு நகரங்களுக்கு எலுமிச்சை பழம் லாரிகளில் மூட்டைகளில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கிலோ கணக்கில் மொத்தமாக வியாபாரிகள் கொள்முதல் செய்து எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். திருவிழாக்கள், பூஜைகள், உணவு தயாரிக்க எலுமிச்சை பழம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை முதல் ரக எலுமிச்சை பழம் சில்லறை விற்பனையில் அதிகபட்சமாக ரூ.5க்கும், சிறிய அளவு எலுமிச்சை பழம் ரூ.2முதல் ரூ.3க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், சுப முகூர்த்த நாட்கள், திருவிழாக்கள் நடைபெற்று வருவதால், எலுமிச்சை பழம் விற்பனை அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில் எலுமிச்சை வரத்து குறைந்து கடந்த சில நாட்களாக விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இதுகுறித்து எலுமிச்சைபழம் விற்பனை மொத்த வியாபாரி ஒருவர் கூறுகையில், ஆந்திராவிலிருந்து எலுமிச்சைபழம் கொள்முதல் செய்து லாரிகளில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறோம். ரயில்வே கோடூர் பகுதியில் இந்த ஆண்டு எலுமிச்சை மகசூல் குறைந்த நிலையில், கடந்த வாரம் ஆந்திராவில் பெய்த கனமழைக்கு எலுமிச்சை செடிகள் பெரும் அளவில் சேதமடைந்தன.

இதனால், மார்க்கெட்டுக்கு வரத்து வெகுவாக குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை முதல் ரக எலுமிச்சை கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது. சிறிய ரகம் கிலோ ரூ.40க்கு விற்கப்பட்டு வந்தது. இருப்பினும், கடந்த சில நாட்களாக எலுமிச்சை வரத்து குறைந்ததால், மொத்த மார்க்கெட்டில் முதல் ரக எலுமிச்சை கிலோ ரூ.150க்கும், சிறிய ரக எலுமிச்சை ரூ.120க்கும் விற்பனை நடைபெறுவதால், சில்லறையில் விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், திருவிழா, பண்டிகை சீசன் என்பதால் மேலும் ஓரிரு மாதங்களுக்கு எலுமிச்சை விலை குறைய வாய்பில்லை என்று கூறினார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு