நேற்று ஒரே நாளில் 31லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் சாதனை

சென்னை: நேற்று ஒரே நாளில் 31லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக்கு முதுகெலும்பாக இருப்பது விவசாயம். விவசாயத்தில் முக்கிய பங்கு வகிப்பது கால்நடை வளர்ப்பு. இந்த கால்நடை வளர்ப்பு என்பது பால்உற்பத்தியை பிரதானமாக கொண்டே நடந்து வருகிறது. விவசாயம் சற்று தொய்வுற்று உழவர்கள் கலங்கி நிற்கும் நேரத்தில் அவர்களுக்கு கை கொடுப்பது கறவை மாடுகள் வளர்ப்பு. இதை கருத்தில் கொண்டும், வெண்மை புரட்சி என்ற இலக்கோடும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் பால்உற்பத்தியை அதிகரிப்பதற்கும், அதனை நிலைநிறுத்தவும் ஆவின் நிறுவனம் சார்பில் கால்நடைத்தீவனம், இடுபொருட்கள், தாதுஉப்புக்கலவை, கால்நடை சுகாதார பராமரிப்பு மற்றும் கால்நடைகளுக்கான இனப்பெருக்க சேவைகளும் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தரமான பால் மற்றும் பால்பொருட்களை நுகர்வோருக்கு குறைந்த விலையில் வழங்குவது உறுதி செய்யப்பட்டு வருகிறது. மொத்தத்தில் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். நுகர்வோரின் ஊட்டச்சத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற இலக்கோடு தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆவின் நாள்தோறும் சராசரியாக 30 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 31 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு