ஏற்காட்டில் கடும் பனி மூட்டம்

*சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

ஏற்காடு : ஏற்காட்டில் நேற்று காலை கடுமையான பனிமூட்டம் இருந்தது. வெளியூர் சுற்றுலா பயணிகள் குவிந்து, இயற்கை அழகை கண்டு ரசித்தனர். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு ஆண்டு முழுவதும் உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவு இருந்து வருகிறது. இங்குள்ள படகு இல்லம், ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் மலைக்கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் பருவமழையின் காரணமாக ஏற்காட்டில் குளிருடன் கூடிய இதமான சீதோஷணநிலை நிலவி வருகிறது. இதனால், பெங்களூரு, புதுச்சேரியில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து ஏற்காட்டில் தங்கி, இயற்கை அழகை கண்டு ரசிக்கின்றனர்.

ஏற்காட்டில் நேற்று, காலை முதலே இதமான சீதோஷ்ணநிலை நிலவியது. மேகக்கூட்டம் தவழ்ந்து வந்து தரையை போர்த்தியது போல், பனிமூட்டம் இருந்தது. ஏரி பகுதியில் உள்ள ஒண்டிக்கடை ரவுண்டானாவில் சாலையே தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது. அவ்வழியே வந்த வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வந்தன. குளிரும் இதமாக இருந்ததால், படகு இல்லம், அண்ணாபூங்கா உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரண்டிருந்து இயற்கையை ரசித்தனர். இதேபோல், ஏற்காடு மலைப்பாதையிலும் மேகம் போர்த்தியது போல் பனிமூட்டம் காணப்பட்டது.

இதனை ஏற்காட்டிற்கு வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகள் ரசித்தபடி சென்றனர். சிலர் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி கேமரா, செல்போன்களில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். மலைப்பாதையில் வாகனங்கள் அனைத்தும், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. விடுமுறை நாள் என்பதால் நேற்று அதிகபடியான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்திருந்தனர். மாலையில் திடீரென சாரல் மழை கொட்டியது. அந்த சாரலில் இதமான சூழலை சுற்றுலா பயணிகள் அனுபவித்தனர்.

Related posts

நாட்றம்பள்ளி அருகே 10 ஆண்டுகளாக எரியாத உயர் கோபுர மின்விளக்கு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தவர்கள் 57 பேர் மீட்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட 1,156 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு