ஏற்காடு அண்ணா பூங்காவில் உள்ள அலங்காரங்களில் மலர்கள் புதுப்பிப்பு

*நாளையுடன் கண்காட்சி நிறைவு

சேலம் : கோடை விழாவை முன்னிட்டு, ஏற்காடு அண்ணா பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அலங்கார உருவங்களின் மலர்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 47வது கோடைவிழா கடந்த 22ம் தேதி தொடங்கி, 26ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடந்தது. இதனையொட்டி, சுற்றுலா பயணிகளை கவர அண்ணாபூங்காவில் தோட்டக்கலை துறையின் சார்பில் 5.5 லட்சம் மலர்களை கொண்டு பல்வேறு உருவங்களும், 30 ஆயிரம் பூந்தொட்டிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக, பிரமாண்ட காற்றாலை, பவளப்பாறைகள், நண்டு, சிற்பி, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடல் குதிரை, கார்ட்டூன் கதாப்பாத்திரங்களான டொனால்டு டக், மிக்கி மௌஸ், டாம் அன்ட் ஜெரி போன்ற உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

இதனையடுத்து, அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர் கண்காட்சி மட்டும் நாளை (30ம் தேதி) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மலர் கண்காட்சி தொடங்கப்பட்டு ஒரு வாரம் ஆனதால், அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள வடிவமைப்புகளில் ஒருசில இடங்களில் மலர்கள் வாடிய நிலையில் காணப்பட்டன. இதனை மாற்றி புதுப்பிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, தோட்டக்கலைத் துறை மூலம் உருவங்களில் இருந்த வாடிய பூக்கள் மாற்றப்பட்டு, புதுப்பிக்கப்பட்டது.

இதனால் அந்த உருவங்கள் தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. அவற்றின் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். மேலும், ஏற்காடு அரசு தாவரவியல் பூங்காவில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மீன் வடிவமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது