ஆண்டு இறுதி தள்ளுபடி சலுகை: வாகன நிறுவனங்கள் அறிவிப்பு

ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு பண்டிகை சீசன் எப்போதும் விற்பனையில் கைகொடுக்கும். இந்த ஆண்டு பண்டிகை சீசனில் டிராக்டர் தவிர அனைத்து வாகனங்களின் விற்பனையும் அதிகரித்தது. ஆனால், பண்டிகை சீசன் முடிந்து ஆண்டு இறுதியில், அதாவது டிசம்பர் மாதத்தில் வாகன விற்பனை படு மந்தமாக காணப்படும். இதனால், ஒவ்வோர் ஆண்டும் டிசம்பரில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தள்ளுபடி சலுகையை அறிவிக்கின்றன. இந்த வகையில், இந்த மாதத்துக்கு வாகன உற்பத்தி நிறுவனங்கள் மாடல்களுக்கு ஏற்ப பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன.

போக்ஸ்வேகன் டிகுவான்: இந்த காருக்கு ரூ.2.5 லட்சம் வரை சலுகையை போக்ஸ்வேகன் அறிவித்துள்ளது. விலையில் மட்டும் ரூ.75,000 வரை தள்ளுபடி கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் மற்றும் கார்ப்பொரேட் சலுகையாக ரூ.1.75 லட்சம் பெறலாம். காரின் துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.35.17 லட்சம். இந்தக் காரில் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 190 எச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதுதவிர, சில டீலர்கள் தரப்பில் சர்வீஸ் பேக்கேஜ் சேர்த்து ரூ.1.7 லட்சம் வரை சலுகைகள் வழங்குவதாக நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. இதுபோல், போக்ஸ்வேகனின் டாய்குன் காருக்கு ரூ.1.1 லட்சம் வரை சலுகை அறிவித்துள்ளது. விலையில் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச், கார்ப்பொரேட் சலுகைகள் ஆகியவை இதில் அடங்கும். இதுதவிர, குறிப்பிட்ட சில டீலர்களிடம் ரூ.36,000 வரை சலுகை கிடைக்கும். காரின் ஷோரூம் துவக்க விலை சுமார் ரூ.11.62 லட்சம். விர்டஸ் காருக்கு ரூ.1.17 லட்சம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, குறிப்பிட்ட சில டீலர்களிடம் ரூ.20,000 கூடுதல் சலுகை பெறலாம். துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.11.48 லட்சம்.

கிராண்ட் விட்டாரா: மாருதி சுசூகியின் பிரீமியம் கார்களில் ஒன்று கிராண்ட் விட்டாரா. இதில் 1.5 லிட்டர் ஹைபிரிட் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைந்து அதிகபட்சமாக 115 எச்பி பவரை வெளிப்படுத்தும். ஹைபிரிட் அல்லாத வேரியண்டும் உள்ளது. இந்தக் காருக்கு ரூ.30,000 வரை தள்ளுபடி சலுகை கிடைக்கும். வேரியண்டுக்கு ஏற்ப துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.10.70 லட்சம் முதல் ரூ.19.92 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பிற மாருதி சுசூகி கார்களான சியாஸ், பலேனோ, இக்னிஸ் ஆகியவற்றுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு ரூ.35,000 முதல் ரூ.63,000 வரை சலுகை கிடைக்கும். செலரியோவக்கு அதிகபட்சமாக ரூ.70,000 வரையிலும், ஈக்கோவுக்கு ரூ.35,000 வரையிலும் சலுகை கிடைக்கும்.

மாருதி சுசூகி ஜிம்னி: மாருதி சுசூகி நிறுவனத்தின் ஜிம்னி காரின் துவக்க நிலை மாடலான ஜெட்டா வேரியண்டக்கு ரூ.2.3 லட்சம் வரை தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. டாப் வேரியண்டான ஜிம்னி அல்பாவக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி சலுகை உண்டு. ஜிம்னி காரின் தண்டர் வேரியண்ட் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.10.74 லட்சம். இதிலுள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 104.8 எச்பி பவரையும், 134.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

சுசூகி புரோன்க்ஸ்: மாருதி சுசூகி சமீபத்தில் அறிமுகம் செய்த கார் இது. இதற்கு ரூ.40,000 வரை தள்ளுபடி சலுகை கிடைக்கும். இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 90 எச்பி பவரையும் 113 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 1 லிட்டர் இன்ஜின் வேரியண்டும் உள்ளது. இது அதிகபட்சமாக 100 எச்பி பவரையும், 147 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஷோரூம் விலை சுமார் ரூ.7.46 லட்சம்.

மகிந்திரா எக்ஸ்யுவி 400: இந்தக் காருக்கு ரூ.4.2 லட்சம் வரை சலுகை கிடைக்கும். இதில், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிடி கண்ட்ரோல் இல்லாத வேரியண்டுக்கு ரூ.3.2 லட்சம் வரை சலுகை கிடைக்கும். எக்ஸ்யுவி 400-ன் துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.15.99 லட்சம். இதில் உள்ள எலக்ட்ரிக் மோட்டார் 150 எச்பி பவரையும், 310 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 34.5 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 375 கி.மீ தூரம் வரை செல்லும். இதன் இஎல் வேரியண்ட் 456 கி.மீ தூரம் வரை செல்லும்.

மகிந்திரா எக்ஸ்யுவி 300: இந்தக் காருக்கு விலையில் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பொரேட் சலுகை உட்பட மொத்தம் ரூ.1.72 லட்சம் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. டாப் வேரியண்டான டபிள்யூ 8 மற்றும் டபிள்யூ 8 (ஓ) ஆகியவற்றுக்குத்தான் அதிகபட்ச தள்ளுபடி கிடைக்கும். இந்த கார் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் என 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.7.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜீப் கார்கள்: ஜீப் இந்தியா நிறுவனம் தனது கிராண்ட் செரோக்கீ எஸ்யுவி காருக்கு ரூ.11.85 லட்சம் வரையிலான தள்ளுபடி சலுகையை அறிவித்திருக்கிறது. ஷோரூம் விலையில் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகை, கார்ப்பொரேட் சலுகைகளும் இதில் அடங்கும். இந்தக் காரின் துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.80.50 லட்சம். இந்த காரில் 2 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 272 எச்பி பவரையும் 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதேபோல், ஜீப் மெரிடியனுக்கு ரூ.4.85 வரை தள்ளுபடி சலுகை கிடைக்கும். காம்பஸ் எஸ்யுவிக்கு ரூ.2.05 லட்சம் வரை தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் கார்கள்: ஹூண்டாய் நிறுவனம் ஐ20 காருக்கு ரூ.50,000 வரை சலுகை அறிவித்துள்ளது. இதுபோல், இந்த நிறுவனத்தின் டுக்சான் காருக்கு ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும். துவக்க ஷோரூம் விலையாக ஐ20 சுமார் ரூ.6.99 லட்சம். துவக்க மற்றும் ஐ20 என்லைன் சுமார் ரூ.9.99 லட்சம். இதுபோல் ரூ.29.01 லட்சம் விலையுள்ள டுக்சான் காருக்கு ரூ.1.5 லட்சம், கோனா இவிக்கு ரூ.3 லட்சம், கிராண்ட் ஐ10 நியாசுக்கு ரூ.48,000, வெர்னாவுக்கு ரூ.45,000, அவுராவுக்கு ரூ.33,000, அல்காசருக்கு ரூ.35,000 வரை தள்ளுபடி சலுகைகள் கிடைக்கும்.

ஹோண்டா கார்கள்: ஹோண்டா நிறுவனம் சிட்டி மற்றும் அமேஸ் கார்களுக்கு ஆண்டு இறுதி தள்ளுபடியை அறிவித்துள்ளது. இது குறித்து இந்த நிறுவன இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில்,ஹோண்டா சிட்டி காருக்கு அதிகபட்சமாக ரூ.88,600 வரையிலும், ஹோண்டா அமேஸ் காருக்கு அதிகபட்சமாக ரூ.77,000 வரையிலும் சலுகைகள் கிடைக்கும். இந்தச் சலுகை இந்த மாதம் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்த சிட்டி பேஸ்லிப்ட் காருக்கு தள்ளுபடியாக ரூ.25,000 வரையிலும், டீலர்களிடம் உதிரிபாக சலுகையாக ரூ.26,947 கிடைக்கும். மேலும், எக்ஸ்சேஞ்ச் போனசாக ரூ.15,000 பெறலாம். இதுபோல், ஹோண்டா அமேஸ் கார் எஸ் வேரியண்டுக்கு தள்ளுபடி சலுகையாக ரூ.35,000 அல்லது ரூ.42,444 மதிப்பிலான உதிரிபாக சலுகைகள் கிடைக்கும். இதுதவிர லாயல்டி போனஸ் ரூ.4,000 உண்டு. வேரியண்டுக்கு ஏற்ப நிபந்தனைகளுக்கு உட்பட்டு சலுகைகள் மாறுபடலாம் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.

Related posts

சென்னை மெரினா கடற்கரையை சுற்றிப் பார்க்க வந்தவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.56,000-க்கு விற்பனை..!!

ஆடியோ செட் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு!