யானைப்பசிக்கு சோளப்பொரியா? தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு ஒரு பைசா ஒதுக்காத ஒன்றிய அரசு: ஆர்பி.உதயகுமார் கொந்தளிப்பு

திருமங்கலம்: மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டில். தமிழகத்திற்கு ஒன்றிய அரசு பாரபட்சம் செய்து வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்தார். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு தொடர்ந்து பாரபட்சத்துடன் செயல்பட்டு வருகிறது. தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டங்கள் ₹61,843 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு முதல் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் பங்காக ₹3,273 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மகாராஷ்டிராவிற்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ₹28,877 கோடியும், கர்நாடகா மாநிலம் பெங்களூரூவுக்கு ₹19,236 கோடியும், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ₹15,218 கோடியும், உ.பிக்கு ₹12,919 கோடியும் ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் தமிழகத்திற்கு குறைவான அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒதுக்கும் தொகையாக இருந்தாலும், தமிழக பேரிடர் நிவாரண நிதியாக இருந்தாலும், வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியாக இருந்தாலும், ஒரு பைசா கூட ஒதுக்காமல் உள்ளனர்.

அப்படியே நிதி ஒதுக்கீடு செய்தாலும் அது யானை பசிக்கு சோளப்பொறி அளவுக்கு மட்டுமே உள்ளது. மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு தமிழகத்திற்கு ஒன்றிய அரசு நிதி தரும் என்ற நம்பிக்கை இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநில வளர்ச்சிக்கு ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு இன்னும் வழங்கவில்லை. இதே போல் தென் தமிழகத்தில் வளர்ச்சிக்கான எந்த திட்டங்களையும் ஒன்றிய அரசு செயல்படுத்தவில்லை என்பது மிகப்பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. இவ்வாறு கூறினார்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை