பல ‘சி’ கொடுத்தும் சீட் கிடைப்பது தொங்கலா இருக்கே என கதறும் இலை பிரமுகர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கொடுத்தது வீணாகிடுமான்னு இலைக்கட்சியில புலம்பல் சத்தம் கேட்குதாமே’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, திருத்தணி என்று 6 சட்டமன்ற தொகுதிகள் இருக்குது.. இந்த தொகுதியில தேர்தல் பணிகள் சுறுசுறுப்பாக நடக்குது.. இதுல இலைக்கட்சியே களம் இறங்க வேலை தீவிரமாக நடந்து வருதாம்.. குயின்பே ட்டை செக்ரட்ரிகள், வெயிலூர் செக்ரட்ரிகள்னு எல்லாரும் கூட்டாக சேர்ந்து, சோங்கிற பேரூராட்சியோட மாஜி தலைவரும், இப்ப ஒன்றியத்தோட செக்ரட்ரியாக இருக்குற 4 எழுத்துக்காரரை, சேலத்துக்காரருக்கு அறிமுகம் செஞ்சி வெச்சி, தேர்தல் பணிக்கான காய் நகர்த்திட்டு வந்திருக்காங்களாம்..

அதேபோல் குயின்பேட்டைல சுகமானவரும் கேன்டிடேட் பட்டியல்ல இடம் பெற்றிருக்கறதா சொல்லிக்குறாங்க.. இதுக்கெல்லாம் இடையில, இலையும், மாம்பழமும் கூட்டணி வெச்சா, கோணம் பாதியான தொகுதியை மாம்பழம் கேட்டு வாங்கிடும்னு சொல்றாங்க.. இதனால, இலைக்கட்சியில பல ‘சி’களை கொடுத்துட்டு ரெடியான 4 எழுத்துக்காரரு, கொடுத்தது வீணாகிடுமா, சீட்டு கிடைக்குமா, கிடைக்காதான்னு புலம்பிக்கிட்டிருக்காராம்.. கூட்டணி முடிவுல தான் சீட்டு தப்புமா, தப்பாதான்னு சேலத்துக்காரருக்கே தெரியும்னு விஷயம் தெரிஞ்சவங்க பேசிக்கிறாங்க’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கண்டன நோட்டீஸ் ஒட்டியவர்களுக்கே அதிர்ச்சி கொடுத்திருக்காங்களாமே அதிகாரிங்க..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சியில் செயல் அலுவலராக ஆதிசிவன் பேரை கொண்டவர் இருக்கிறாராம்.. இங்கு அலுவலக உதவியாளராக இரண்டெழுத்துக்காரர் உள்ளாராம்.. இருவரும் லஞ்சம் வாங்குவதில் ஒருவருக்கொருவர் செம டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்களாம்.. இதனால், இருவரும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் அதிக விமர்சனத்திற்கு ஆளாகிகிட்டு இருக்காங்க…

ஆனாலும் இருவரது வேகமும் குறையாத நிலையில், பேரூராட்சிக்கு உட்பட்ட குறிப்பிட்ட வார்டுகளில் அடிப்படை தேவையான சாலை, கால்வாய் அமைக்க வேண்டுமென்பதை கூட கண்டுகொள்வதே இல்லையாம்.. அந்த வார்டு பகுதியினர் இரு அதிகாரிகளையும் இடமாற்றம் செய்ய வேண்டுமென கூறி நகர் முழுவதும் நோட்டீஸ் அச்சடித்து ஒட்டி எதிர்ப்பை காட்டும் நிலை ஏற்பட்டிருக்கு. ஆனா, யாராலும் என்னை ஒன்னும் செய்ய முடியாதுன்னு கூறி பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனராம்.. இதுதான் கடலோர மாவட்டத்தின் தற்போதைய ஹாட் டாபிக்காம்..’’ என்றார் விக்கியானந்தா

‘‘பாஜவின் வாக்குவங்கி தொடர்பான டிவிட்டால தேனிக்காரர் ஷாக்காயிட்டாராமே… அந்த கதை தெரியுமா?’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மூன்று முறை முதல்வராகியிருக்கேன், இலைக்கட்சியில் எனக்கு பங்குண்டுன்னு தேனிக்காரர் சொல்லிக்கிட்டு இருக்காரு.. இதே வேகத்தோடு தாமரையுடன் கூட்டணி அமைச்சிடணுமுன்னு படுதீவிரமாக இருக்காரு.. ஆனா, அந்த கட்சியோ இவரை ஒரு பொருட்டாகவே கண்டுக்கிடலையாம்.. அவர்களின் நோக்கமே இலைக்கட்சியோடதான் கூட்டணி என்பதில் தீவிரமா இருக்காம்..

இந்த நிலையில் மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தை தேனிக்காரர் கூட்டியிருக்காரு.. நாம் யாருடன் சேரவேண்டும், குறிப்பா யாருடன் சேரக்கூடாதுன்னு பேசிட வேண்டும் என்ற திட்டத்தோடு மா.செ.க்கள் மீசையை முறுக்கிக்கிட்டு இருந்திருக்காங்க.. இந்த நேரத்துல அக்கட்சியின் கொ.ப.செ. டிவிட் ஒன்றை பண்ணியிருக்காரு.. ‘தாமரைக்கு வாக்கு வங்கி 3 சதவீதத்துல இருந்து 6 சதவீதமா உயர்ந்துட்டுன்னு கற்பனை செய்துகொண்டாலும்’ என தொடங்கி அவர்களின் தோலை மென்மையாக உரிச்சிட்டாராம்.

இத பார்த்த தேனிக்காரர் ரொம்பவே ஷாக்காயிட்டாராம்.. நாமளே ஏதாவது ஒரு படகு வராதா.. அதில் ஏறி தப்பித்துவிடமாட்டோமான்னு இருக்கோம்.. இதுல உண்மைய ஏன் பேசணுமுன்னு முணுமுணுத்துகிட்டே இருந்திருக்காரு.. அப்படியே கூட்டம் தொடங்கியதும், எல்லா அதிகாரத்தையும் தேனிக்காரரிடம் கொடுப்போமுன்னு ஒரு உச்சக்கட்ட தீர்மானத்தை நிறைவேற்றியதோடு, அப்படியே ஏற்பாடு செஞ்சிருக்கிற மட்டன் பிரியாணியையும், சிக்கன் 65ஐயும் சாப்பிட்டுட்டு போங்கன்னு சொல்லியிருக்காங்க..

எத்தனையோ கேள்வியோட வந்த மா.செ.க்கள் பாஜ கூட்டணியில இருக்கோமுன்னு சொல்லல.. நாம தான் இருக்கோமுன்னு சொல்றோம். இதே நிலை நீடிச்சா வெறும் கையில் முழம் போடும் கதையாகிடுவோமுன்னு கேட்டுக்கிட்டே மட்டன் பிரியாணிய ஒரு வெட்டு வெட்டிட்டு போனாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘விரல் விட்டு எண்ணும் அளவிற்கு வந்த கூட்டத்தால நிர்வாகிகளை மாஜி அமைச்சர் கடிந்துகொண்டாராமே’’ என அடுத்த கேள்விக்கு தாவினார் பீட்டர் மாமா.

‘‘தமிழகம் முழுவதும் இலைக்கட்சி சார்பில நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதுல, கடலோர மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ தலைமையிலான ஆர்ப்பாட்டம் என்பதால் கடலோர மாவட்டத்தில் தனது செல்வாக்கை மீண்டும் காட்டுவதற்கான வாய்ப்பும் இதுதான்னு நினைத்த அவரு, ஆர்ப்பாட்டத்தில் அதிக அளவில் கூட்டம் இருக்கணும்னு முதல்நாளே மாவட்ட பொறுப்பாளர்களுக்கு உத்தரவு போட்டிருந்தாராம்…

ஆனா, ஆர்ப்பாட்டத்தில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு மட்டுமே தொண்டர்கள் வந்து இருந்ததால மணியானவர் உச்சக்கட்ட டென்சனுக்கு போனதோடு, மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகளை ரொம்பவே கடிந்து கொண்டாராம்… ஏற்கனவே சேலத்துக்காரருக்கு தன் மீது நம்பிக்கை இல்லாததால்தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கடலோர தொகுதியில் போட்டியிட வேட்பாளரை தலைமையே முடிவு செய்திருக்கு…

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில ஆர்ப்பாட்டத்தில தொண்டர்கள் கூட்டம் குறைவாக இருந்ததால் இன்னும் சேலத்துக்காரருக்கு என் மேல கோபம் அதிகமாகக்கூடும்.. இனி ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினா அதிக அளவில் கூட்டத்தை காட்டணும்.. இதற்காக ‘வைட்டமின் ப’ இறக்கினால் தான் வேலை நடக்கும்னு மணியானவர் முடிவு செய்துள்ளாராம்’’.. என்றார் விக்கியானந்தா.

Related posts

நிபா வைரசால் மாணவன் பலி மலப்புரத்தில் கட்டுப்பாடுகள் அமல்

21ம் நூற்றாண்டின் வரலாற்றில் இந்தியாவின் சோலார் புரட்சி பொன் எழுத்தால் எழுதப்படும்: பிரதமர் மோடி பெருமிதம்

அரசியலமைப்பு சட்டத்தின்படி ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தற்போது சாத்தியமில்லை: ப.சிதம்பரம் கருத்து