பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற நகரங்களுக்கு வர இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்தாண்டு 6.54 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகளில் பயணித்தனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். நேற்றைய தினம் தைப்பொங்கல் பண்டிகையை தங்கள் வீடுகளுக்கு முன் புதுப்பானையில் பச்சரிசி பொங்கலிட்டு, சூரியனுக்கு படைத்து உற்சாகமாக கொண்டாடினர். இன்றைய தினம் மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நாளை காணும் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டும். சென்னை போன்ற நகரங்களில் பணி நிமித்தமாக வசிக்கும் மக்கள் பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவர்.

அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கடந்த 12, 13,14 ஆகிய நாட்களில் சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. சென்னையில் இருந்து தினமும் வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் கூடுதலாக 12ம் தேதி 1,260 பேருந்துகளும், 13ம் தேதி 2,210 பேருந்துகளும், 14ம் தேதி 1,514 பேருந்துகளும் என 3 நாட்களில் மொத்தமாக 11,284 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த பேருந்துகளில் 6,54,472 பயணிகள் பயணித்துள்ளனர். கடந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது 5.05 லட்சம் பேர் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்தனர். இந்தாண்டு 5.50 லட்சம் பேர் வரை பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6.54 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களுக்கு திரும்புவதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று முதல் 18ம் தேதி வரை 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அந்த வகையில் வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் 3 நாட்களூக்கு கூடுதலாக 11,289 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 2,028 பேருந்துகளும், சென்னை தவிர மற்ற இடங்களுக்கு 2,164 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

நாளைய தினம் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 1,726 பேருந்துகளும், சென்னை தவிர மற்ற இடங்களுக்கு 2,632 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது. வெளியூர்களில் இருந்து மதியம் மற்றும் மாலை நேரங்களில் இருந்து புறப்படும் பேருந்துகள் சென்னைக்கு நள்ளிரவில் வரும் என்பதால், பயணிகள் சென்னையில் தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்ல கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டில் இருந்து இரவு நேர பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு