ஐக்கிய அரபு அமீரகத்தில் 9வது ஐசிசி மகளிர் டி.20 உலக கோப்பை நாளை தொடக்கம்

*இந்தியா உள்பட 10 அணிகள் பங்கேற்பு

துபாய்: 9வது ஐசிசி மகளிர் டி.20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை தொடங்கி வரும் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. முதலில் இந்த தொடர் வங்கதேசத்தில் நடைபெற இருந்த நிலையில் அங்கு கலவரம் வெடித்ததால் யுஏஇ-க்கு மாற்றப்பட்டது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

இவை தலா 5 என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்,. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, பி பிரிவில் இங்கிலாந்து, வங்கதேசம், ஸ்காட்லாந்து, தென்ஆப்ரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

நாளை மாலை 3.30 மணிக்கு சார்ஜாவில் நடைபெறும் முதல் போட்டியில் பி பிரிவில் வங்கதேசம்-ஸ்காட்லாந்து மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு ஏ பிரிவில் பாகிஸ்தான்-இலங்கை மோத உள்ளன. இந்திய அணி தனது முதல் போட்டியில் நாளை மறுநாள் இரவு 7.30 மணிக்கு துபாயில் நியூசிலாந்துடன் மோதுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது.

தொடர்ந்து 9ம் தேதி இலங்கை, 13ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் களம் இறங்கும் இந்தியா இந்த முறை பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது. மகளிர் டி.20 உலக கோப்பையில் இதுவரை ஆஸ்திரேலியா 6முறை பட்டம் வென்றது. 2009ல் இங்கிலாந்தும், 2016ல் வெஸ்ட்இண்டீசும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இந்தியா ஒரேஒருமுறை 2020ல் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்று அதில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி போட்டியில் இந்தியா வெற்றி

உலக கோப்பையொட்டி இந்திய அணி தனது முதல் பயிற்சி போட்டியில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்திய நிலையில் நேற்றிரவு 2வது பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்ரிக்காவுடன் மோதியது. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 144 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 36,திப்தி சர்மா 35, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 30, மந்தனா 21 ரன் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய தென்ஆப்ரிக்கா 20ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 116ரன்னே எடுத்தது. இதனால் 28 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.

Related posts

தென்காசி: குற்றால அருவிகளில் குளிக்க தடை

ஐ.நா. பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழைய தடை..!!

காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்.. நாடாளுமன்றத்தில் காந்தி சிலை இடமாற்றத்திற்கு கண்டனம் தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி.!!