தவறு செய்தவர்களை சும்மா விடமாட்டோம்: அமைச்சர் நாரா.லோகேஷ் ஆவேசம்

திருமலை: ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடுவின் மகனும், கல்வித்துறை அமைச்சருமான நாரா.லோகேஷ் அளித்த பேட்டி: கடந்த முறை எங்கள் ஆட்சியின்போது கர்நாடக அரசின் கேஎம்எப் நிறுவனத்திடம் தரமான நெய் கொள்முதல் செய்து பிரசாதத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அதன்பின்னர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் தனிநபருக்காக அந்த நெய் டெண்டரை ரத்து செய்து அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்கி உள்ளனர். அந்த நெய்யில்தான் தற்போது கலப்படம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தவறுக்கு காரணமானவர்களை சும்மா விடமாட்டோம். கடந்த முறை நடந்த அனைத்து தவறுகளையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

ஏழுமலையானின் சிவப்பு வைரக்கல் எங்கே?

அமைச்சர் லோகேஷ் மேலும் கூறுகையில், `கடந்த முறை எங்கள் ஆட்சியின்போது ஏழுமலையானுக்கு அணிவிக்கப்பட்டிருந்த சிவப்பு வைரக்கல்லை நாங்கள் திருடிச்சென்றுவிட்டதாக எங்கள் மீது ஜெகன்மோகன் குற்றம்சாட்டினார். ஆனால் அதுதொடர்பாக கடந்த 5 ஆண்டுகளில் அவர் விசாரணை கமிஷனை வைத்து எதையும் விசாரிக்கவில்லை. விசாரணை கமிஷன் வைத்திருந்தால் உண்மையில் வைரக்கல் திருட்டு போனதா? அதை யார் திருடினார்கள்?, அந்த வைரக்கல் தற்போது எங்கு உள்ளது? போன்ற விவரங்கள் தெரிந்திருக்கும்’ என்றார்.

ஒப்பந்தங்களுக்கு ரூ.500 கோடி கமிஷன்

மாநிலத்தில் கடந்த ஆட்சியின்போது வழங்கிய ஒப்பந்தங்களுக்கு ரூ.500 கோடி வரை கமிஷன் கைமாறியதாக புகார் உள்ளது. இதுதொடர்பாகவும் விசாரிக்கிறோம். இந்த விசாரணையில் தவறு நடந்தது உண்மை என நிரூபிக்கப்பட்டால் வருவாய் திரும்ப பெறும் சட்டம் (ரிவென்யு ரிக்கவரி ஆக்ட்) கொண்டு வந்து அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜெகன்மோகன் ஆட்சியில் செம்மர கடத்தல் உட்பட பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது என அமைச்சர் நாரா.லோகேஷ் தெரிவித்தார்.

Related posts

இன்று ஓட்டுப்பதிவு இலங்கை புதிய அதிபர் யார்? 39 வேட்பாளர்கள் போட்டி

82 வயது கார்கேவை அவமதிக்க வேண்டிய அவசியம் என்ன? பிரதமர் மோடியை சாடிய பிரியங்கா காந்தி

தீர்ப்புகள் மொழிபெயர்ப்பில் முன்னிலை வகிக்கும் தமிழ்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தகவல்