இது தவறான செயல்

வெயில், மழை பாராது, உயிரை துச்சமென மதித்து, நாட்டை பாதுகாப்பதில் ராணுவ வீரர்களும், மாநிலங்களில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறையினரும் ஆற்றி வரும் பங்களிப்பு உயர்வானது. மற்ற பணிகளை போல அல்லாமல், நேரம் காலம் பாராது எந்நேரமும் நாட்டின் பாதுகாப்பு பணிக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் அவர்கள். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் காவல்துறையை சேர்ந்த பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இதற்கு பணிப்பளு, விடுமுறை இல்லாதது, மன உளைச்சல் உள்ளிட்டவை காரணமாக கூறப்பட்டது. இதை மனதில் கொண்டுதான் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல்துறையினர் நலனுக்காக பல திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்தார்.

சாலையோர பாதுகாப்பு பணியில் இருந்து பெண்களுக்கு விலக்கு, காவலர்களுக்கு வார விடுமுறை, பிறந்தநாளில் பரிசு, வாழ்த்து சான்று வழங்குதல், ஓய்வு பெற்ற காவலர் நலவாரியம் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளார். மேலும், பெண் காவலர்களுக்காக சென்னை, மதுரையில் தங்கும் விடுதி, அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கு கழிவறை வசதியோடு தனி ஓய்வறை, பெண் காவலர்கள் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விடுப்பு மற்றும் பணியிட மாறுதல் வழங்குதல் உள்பட பல்வேறு திட்டங்களையும் அறிவித்தார்.

காவலர்கள் மன உளைச்சலின்றி பணியாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இவ்வாறான திட்டங்கள் எல்லாம் அறிவிக்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் நமது நண்பர்கள் என்ற அணுகுமுறையோடு மக்களும் நடந்து கொள்ள வேண்டும். நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது அநாகரிகமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் மர்மக் கும்பலால் கொலை செய்யப்பட்டார். டிரைவரின் உடல் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் பிரேத பரிசோதனை செய்து வைக்கப்பட்டிருந்தது. உடலை வாங்க மறுத்த உறவினர்கள், அருப்புக்கோட்டையில் மறியல் செய்ய முயன்றனர்.

இதனை தடுக்கச் சென்ற பெண் டிஎஸ்பி காயத்ரியின் தோள் பகுதியில் கை வைத்தும், தலைமுடியை இழுத்தும் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். சம்பவத்தை தடுக்கச் சென்ற இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் மீதும் தாக்குதல் நடந்திருக்கிறது. இது தவறான முன்னுதாரணம்… ஒரு பெரும் போராட்டம் நடக்கும்போது, அதற்கேற்ற வரைமுறைப்படி தான், பாதுகாப்பு பணியில் போலீசாரை நியமிக்க முடியும். போராடுபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஒருபோதும் நியமிக்க முடியாது. முன்விரோதம், இரு தரப்பு மோதல் உள்ளிட்டவைகளால் எதிர்பாரா சம்பவங்கள் நடக்கும்போது, இருதரப்பிலும் பிரச்னையின்றி கொண்டு செல்ல வேண்டிய பொறுப்புணர்வு காவல்துறையினருக்கு இருக்கிறது.

அந்த கடமையைத்தான் அவர்கள் செய்கின்றனர். அதனை தடுக்கவோ, தாக்கவோ யாருக்கும் உரிமையில்லை. அதிலும், ஒரு பெண் டிஎஸ்பி மீது நடுரோட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற சம்பவங்களில் இனி யாரும் ஈடுபடாமல் இருப்பது நாட்டின் நலனுக்கு சிறந்தது. நம்மை பாதுகாக்கும் காவலர்கள் மீது நாமே தாக்குதல் நடத்துவது மிகவும் தவறான செயல். சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் காவலர்களிடமே, சட்டம், ஒழுங்கை மீறுவது நியாயமற்றது. இனி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இது தவறான முன்னுதாரணமாகி ஆபத்தில் கொண்டு போய் விட்டு விடும்.

Related posts

சுவரை உடைத்த சூப்பர் சிக்ஸ் சேப்பாக்கத்தில் கோஹ்லி சம்பவம்

இந்தியாவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை கூடுதலாக உள்ளது: வங்கதேச கேப்டன் பேட்டி

வடகிழக்கு பருவமழை: சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சியில் பேரிடர் மீட்பு பயிற்சி தர திட்டம்