மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல்; பிரிஜ்பூஷண் ஆதரவாளர்கள் வெற்றி

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பாஜ எம்பி பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது ஒரு சிறுமி உட்பட 7 வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்தனர். பல்வேறு போராட்டங்கள், வழக்கு காரணமாக அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. அதனால் பிரிஜ்பூஷண் பதவி விலகினார். தொடர்ந்து நடக்கும் தேர்தலில் அவரது ஆதரவாளர்கள் போட்டியிடக் கூடாது என்று மல்யுத்த வீராங்கனைகள் வலியுறுத்தினர். ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினர். அதை ஏற்று அவர் உறுதி அளித்தார். ஆனால் நேற்று முடிந்த தேர்தலில் பிரிஜ்பூஷணின் விசுவாசியான சஞ்ஜெய் சிங் தலைராக தேர்வாகி உள்ளார். அனுமதிக்கப்பட்ட 51வாக்குகளில் அவர் 40 வாக்குகள் பெற்றார்.

அவரை எதிர்த்து நின்ற முன்னாள் வீராங்கனை அனிதா ஷியோரன் 7 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். மேலும் 4துணைத் தலைவர்கள், 5 செயற்குழு உறுப்பினர்கள், பொருளாளர் என 15 பதவிகளில் பெரும்பான்மையான பதவிகளை பிரிஜ்பூஷண் ஆதரவாளர்களே கைப்பற்றி உள்ளனர். பொதுச் செயலாளர் பதவியை மட்டும் அனிதா அணியில் போட்டியிட்ட பிரேம்சந்த் லோச்சப் கைப்பற்றினார். இந்த தேர்தல் முடிவுகள் வீரர்கள், வீராங்கனைகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூடவே நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உலக மல்யுத்த கூட்டமைப்பு விலக்கிக் கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்