உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி எதிரொலி: வெஸ்ட் இண்டீஸ் தொடரை வெல்ல சிறப்பு ஏற்பாடு.! இழந்த பார்மை மீட்க முக்கிய தலைகள் ரெடி

மும்பை:உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததிலிருந்து பல பாடங்கள் கற்றுக் கொண்டிருப்பதாக தெரிகிறது. ஐபிஎல் தொடர் மே மாதம் கடைசி வரை நடைபெற்றது. இதனையடுத்து எவ்வித ஓய்வும் இன்றி இந்திய வீரர்கள் இங்கிலாந்து சென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் ஆடி தோல்வியை தழுவினர். இதற்கு காரணம் அங்கு ஒரு வாரம் கூட பயிற்சி செய்யாமல் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை டெஸ்ட் போட்டியில் எதிர்கொண்டதுதான் என்றும் இந்திய அணி முன்கூட்டியே இங்கிலாந்து சென்று பயிற்சி ஆட்டத்தில் விளையாடி இருந்தால் இந்தியா கோப்பையை வென்று இருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் ரோகித் சர்மாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே சில வீரர்களின் தலை தப்பும். இதற்காக கடந்த முறை செய்த தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ள இந்திய அணி நிர்வாகம் தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக சில திட்டங்களை வகுத்துள்ளது. அதன்படி ஜூலை 12ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதற்காக பத்து நாட்கள் முன்பே வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி அங்கு தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட உள்ளது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் உள்ள இளம் வீரர்களை வைத்து பயிற்சி ஆட்டம் ஒன்றை வைக்கவும் இந்தியா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் முன்னணி வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இழந்த பார்மை மீட்க முடியும் என்று கருதப்படுகிறது.

இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடருக்கு விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, கில், ரகானே உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக பயிற்சி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதல் டெஸ்ட் நடைபெறும் டோமினிக்காவில் இந்தியா கடந்த 10 ஆண்டுகளாக விளையாடவில்லை. அங்கு விளையாடிய அனுபவம் விராட் கோஹ்லிக்கு மட்டும்தான் இருக்கிறது. கடைசியாக இந்தியா 2011ம் ஆண்டு விளையாடியபோது கடைசி இன்னிங்சில் கைவசம் 47 ஓவர்கள் இருக்க 180 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும் என்ற நிலையில் இந்திய அணி இருந்தது. ஆனால் டிராவிட், லஷ்மண் போன்ற வீரர்கள் மெதுவாக விளையாடி 32 ஓவர்களை எதிர்கொண்டு 3 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்திருந்தனர். இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி