உலக சுகாதார நிறுவனம், யூனிசெப் பட்டியல் தடுப்பூசி போடாத குழந்தைகள்; உலகில் 2ம் இடத்தில் இந்தியா

புதுடெல்லி: உலக சுகாதார நிறுவனமும், யூனிசெப் அமைப்பும் இணைந்து வெளியிட்ட, ஒரு தடுப்பூசி கூட செலுத்தபடாத குழந்தைகள் பட்டியலில் உலகளவில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. குழந்தைகள் பிறந்ததும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க, குறிப்பிட்ட மாத மற்றும் ஆண்டுகள் இடைவெளியில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதில் கடந்த 2023ம் ஆண்டில் எந்த ஒரு தடுப்பூசியும் போடப்படாத குழந்தைகள் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலை உலக சுகாதார நிறுவனமும், யூனிசெப் அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ளன.

இப்பட்டியலில், 16 லட்சம் குழந்தைகளுடன் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. ஆப்ரிக்க நாடான நைஜீரியா 21 லட்சம் குழந்தைகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து எத்தியோப்பியா (9.17 லட்சம்), காங்கோ (8.39 லட்சம்), சூடான் (7.01 லட்சம்) ஆகிய நாடுகள் உள்ளன. டாப் 20 நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் 10வது இடத்தையும், சீனா 18வது இடத்தையும் பெற்றுள்ளன. கடந்த 2021ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாத குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் 27.3 லட்சத்தில் இருந்து 16 லட்சமாக குறைந்திருப்பது ஆறுதலான விஷயம். அதே சமயம் மொத்த மக்கள் தொகையுடன் கணக்கிட்டு பார்க்கையில் 0.11 சதவீத குழந்தைகள் மட்டுமே ஒரு தடுப்பூசியை கூட பெறவில்லை என ஒன்றிய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

அதே சமயம், தடுப்பூசி செலுத்தப்படும் எண்ணிக்கையில் உலக சராசரியை விட இந்தியாவின் சராசரி அதிகரித்தே உள்ளது. உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் டிப்தீரியா, கக்குவான் இருமல் மற்றும் டெட்டனஸ் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் டிபிடி 1 தடுப்பூசி இந்தியாவில் 93 சதவீத குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் இதன் சராசரி விகிதம் 89 மட்டுமே. இதே போல, டிபிடி 3 தடுப்பூசி இந்தியாவில் 91 சதவீத குழந்தைகளுக்கும் (உலக சராசரி 84%), எம்சிவி 1 தடுப்பூசி 92 சதவீத குழந்தைகளுக்கும் (உலக சராசரி 83%) செலுத்தப்பட்டுள்ளது.

இதனால் உலக சராசரியை விட இந்தியா 10 சதவீதத்திற்கும் கூடுதல் சிறப்புடன் இருப்பதாகவும் சுகாதார அமைச்சக தகவல் கூறுகின்றன. அதே சமயம், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகளைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதற்கு அனைத்து தரப்பிலும் முயற்சிகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த அறிக்கை காட்டுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது.

Related posts

விபத்தில் மின்துறை அதிகாரி உயிரிழப்பு: ரூ 80 லட்சம் இழப்பீடு வழங்க பண்ருட்டி மக்கள் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக இருந்த அப்துல் ரகுமான் திடீர் ராஜினாமா

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!