உலகப் புகழ்பெற்ற அன்னை வேளாங்கண்ணி பேராலய திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது!

நாகை: உலகப் புகழ்பெற்ற அன்னை வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலய பெருவிழா மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், பரிபாலகர் சகாயராஜ் ஆகியோர் ஆரோக்கிய அன்னையின் உருவம் வரையப்பட்ட கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்தனர். தொடர்ந்து, ஆயர் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது.

கொடியேற்றத்தை காண வெளி மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் ஆலயத்துக்கு வருகை தந்துள்ளார். இதுதவிர நடைபாதையாகவும் ஆலயத்துக்கு வந்து கொண்டிருக்கின்றனர். வேளாங்கண்ணி ஆர்ச் தொடங்கி கடைவீதி சாலை, கடற்கரை சாலை, நடுத்திட்டு, மாதாகுளம், பழைய வேளாங்கண்ணி என எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் காணப்படுகிறது. தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன் தலைமையில் நாகை எஸ்பி ஹர்ஷ்சிங் மேற்பார்வையில் திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட எஸ்பிகள், 3 ஏடிஎஸ்பிக்கள், 16 டிஎஸ்பிக்கள், 85 இன்ஸ்பெக்டர்கள், 150 எஸ்ஐக்கள் என மொத்தம் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். 10 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் குப்பைகளை அகற்ற 18 டிப்பர் டிராக்டர், 425 துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடந்தை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று பல்வேறு இடங்களில் இருந்து 500 சிறப்பு பேருந்துகளும், நாளை முதல் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. 9 தீயணைப்பு வாகனங்களுடன் 182 தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

கடைகளில் விற்கப்படும் குடிநீர் கேன்கள், உணவு பொருள்கள் மற்றும் பால் பாக்கெட்டுகளை ஆய்வு செய்ய மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தலைமையில் தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் நலன் கருதி வேளாங்கண்ணி கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி கோவில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெசன்ட் நகரில் அருட்தந்தை ஜார்ஜ் அந்தோணிசாமி கொடியேற்றினார். லட்சக்கணக்கான பக்கதர்களும், பொதுமக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

 

Related posts

சீர்காழி அருகே 3 சகோதரர்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

திருவிடைமருதூர் அருகே பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பரபரப்பு..!!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு 2,068 கனஅடி நீர் திறப்பு ..!!