உலகக்கோப்பை முதல் போட்டி: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 283 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி

அகமதாபாத்: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உலக கோப்பை தொடர், இந்தியாவில் இன்று தொடங்கி நவ.19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர், அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் கடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி வில்லியம்சன் மற்றும் இங்கிலாந்து அணி தரப்பில் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இந்த போட்டியில் களமிறங்கவில்லை.

இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி தரப்பில் ஜானி பேர்ஸ்டோவ் 33 ரன்களும், ஜோ ரூட் 77 ரன்களும், ஜோஸ் பட்லர் 43 ரன்களும், ஹாரி புரூக் 25 ரன்களும், லியாம் லிவிங்ஸ்டன் 20 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி 300க்கும் மேல் ரன்களை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 282 ரன்களை எடுத்தது.

நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர், க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட் மற்றும் ரச்சின் ரவீந்திரன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். நியூசிலாந்து அணி 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு