உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் நான்தான் அதற்கு காரணம் என்று மோடி சொல்லியிருப்பார்: க.சுந்தர் எம்எல்ஏ பேச்சு

மதுராந்தகம்: உத்திரமேரூர் ஒன்றியம், பேரூர் திமுக சார்பில், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், பேரூர் திமுக சார்பில், திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் உத்திரமேரூர் கே.எம்.ஆர். பேருந்து நிலையம் அருகில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.

பேரூர் செயலாளர் பாரிவள்ளல் முன்னிலை வகித்தார். ஒன்றிய கழக செயலாளர் ஞானசேகரன் அனைவரையும் வரவேற்றார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் க.சுந்தர் எம்எல்ஏ பேசுகையில், மத்தியிலே ஆளுகின்ற பாஜ ஆட்சியாளர்கள் 10 ஆண்டு ஆட்சியிலே நாட்டை குட்டிச் சுவராக்கியுள்ளனர். ஏதாவது நல்லது நடந்தால் நரேந்திர மோடி காரணம் என்று சொல்வார். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பிரதமர் மோடி பார்வையிட சென்றபோது, இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் நான்தான் அதற்கு காரணம் என்று சொல்லி இருப்பார்.

மோடி இந்தியாவில் ஒரு நாடகத்தை நடத்தி வருகிறார். திமுக அரசு ஏழை எளியவர்களுக்கு பாடுபடுகின்ற அரசு. தமிழ்நாடு முதலமைச்சர் எந்நேரமும் ஓயாமல் உழைத்து வருகிறார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 2019ம் ஆண்டு வெற்றி பெற்றது போல் வெற்றிபெறச் செய்ய வேண்டும்’ என பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், பெண்களின் முன்னேற்றத்திற்கு செயல்படுத்தப்பட்ட திட்டம்தான் அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம். இந்த இலவச பயணத்திற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஆண்டுக்கு ரூ.2,500 கோடி செலவு செய்கிறார். இந்தத் திட்டம் தொடங்கும்போது 40% பெண்களே பேருந்தில் பயணம் செய்தனர். தற்பொழுது 68% பெண்கள் பயணம் செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் சிறப்பான முறையிலே செயலாற்றி வருகிறார். இதனால்தான் தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறை முக்கியத்துறையாக பார்க்கப்படுகிறது. ஏராளமான இளைஞர்கள் விளையாட்டுத்துறையில் சாதித்து வருகின்றனர். என்றார். இதனைத் தொடர்ந்து 200 பேருக்கு தையல் இந்திரம், இஸ்திரி பெட்டி, மிதிவண்டி, விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார். இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், ஒன்றிய செயலாளர் குமார், பொதுக்குழு உறுப்பினர் சசிகுமார், ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன், துணைப் பெருந்தலைவர் வசந்தி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

சென்னை மெட்ரோ ரயிலில் நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்

அமமுக பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கேசவ விநாயகம் ஆஜர்!!