உலக முதலீட்டாளர்கள் மாநாடு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் வைரமாக நிலைத்து நிற்கும்: வைகோ பாராட்டு

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தி உள்ளது. மாநாட்டின் நிறைவு விழாவில் சிறப்புரை ஆற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் முன் எப்போதும் இல்லாத அளவாக ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி என்பதை இந்தியாவே உற்று நோக்கும் என்றும், இந்த முதலீடுகள் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டது நம் அனைவருக்கும் அளவு கடந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

தெற்காசியாவின் முதன்மை மாநிலமாக உயர்ந்து வரும் தமிழ்நாடுதான் உலக முதலீட்டாளர்களின் முதல் முகவரி என்பதே நமது நிலையான செய்தியாக இருந்து வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளது நம் அனைவரையும் பெருமிதம் பொங்கச் செய்கிறது. திராவிட மாடல் அரசினை திறம்பட வழிநடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் இச்சாதனை தமிழ்நாட்டு வரலாற்றில் வைர எழுத்துக்களில் என்றென்றும் நிலைத்து நிற்கும். தொழில் வளர்ச்சியின் மூலம் பொருளாதார நிறைவு காணவும், லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினைப் பெற்றுத் தரவும், நாட்டை வலுவான பாதைக்கு அழைத்துச் செல்லவும் அரும்பணி ஆற்றிவரும் தமிழ்நாடு முதல்வருக்கு என் அன்பான பாராட்டுகள், வாழ்த்துகள்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்