உலகில் அதிக சம்பளம் பெறும் பெண் சிஇஓக்கள் அதிகரிப்பு: ஆண்கள் வேற லெவல்

சான் பிரான்சிஸ்கோ: உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் பெண் சிஇஓக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனாலும், ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் அதிகபட்ச சம்பளம் மிகவும் குறைவாக உள்ளது.
உலகம் முழுவதும் முன்னணி நிறுவனங்களில் கடந்த ஆண்டில் அதிக சம்பளம் பெற்ற தலைமை நிர்வாக அதிகாரிகள் (சிஇஓ) பட்டியலை ஈகுலர் நிறுவனத்துடன் இணைந்து அசோசியேட் பிரஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இதில், பெண் சிஇஓக்கள் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்தது.

இதன் மூலம், 2011ம் ஆண்டில் இருந்து வெளியாகும் இந்த ஆய்வில் முதல் முறையாக 25 பெண் சிஇஓக்கள் இடம் பெற்றுள்ளனர். இதற்கு முன் 2017ல் 21 பெண் சிஇஓக்கள் இடம் பெற்றதே அதிகபட்சமாக இருந்தது. இவர்களில், அமெரிக்காவின் சிப் தயாரிப்பு நிறுவனமான அட்வான்ஸ்டு மைக்ரோ டிவைசஸ் குழுமத்தின் சிஇஓ லிசா சூ, மொத்த ஆண்டு சம்பளம் 30.3 மில்லியன் டாலருடன் (ரூ.251.5 கோடி) முதல் இடத்தில் உள்ளார். இவரது அடிப்படை சம்பளம் 1.2 மில்லியன் டாலர் (ரூ.10 கோடி), போனஸ் 1.4 மில்லியன் டாலர் (ரூ.11 கோடி), நிறுவனத்தின் வளர்ச்சியை பொறுத்து தரப்படும் பங்களிப்பு தொகை 21.8 மில்லியன் டாலர் (ரூ.181 கோடி).

இதுதவிர இதரபடிகள் உண்டு. கடந்த 5 ஆண்டாக உலகின் அதிக சம்பளம் பெறும் பெண் சிஇஓ இவர்தான். ஒட்டுமொத்த சிஇஓக்கள் பட்டியலில் இவர் 25வது இடத்தில் இருந்து 21வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். ஆனால் ஆண் சிஇஓக்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு. மேலும், அதிக சம்பளம் பெறும் சிஇஓக்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பிராட்காம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹாக் டான் ஆண்டு சம்பளம் 161.8 மில்லியன் டாலர் (ரூ.1,343 கோடி). எனவே சம்பள விஷயத்தில் பெண் சிஇஓக்கள் ஆண்களை பின்னுக்கு தள்ள இன்னும் நீண்ட காலம் ஆகலாம் என்கின்றனர் தொழில்துறையினர்.

Related posts

ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் நாளை ஆய்வு..!!

சிறை அலுவலர்கள், உதவி சிறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

நாட்டு மக்களின் வளர்ச்சியே நமது குறிக்கோள்: பிரதமர் மோடி பேச்சு