உலகைக் கலக்கும் ‘ஹேய் சிரி’!

இப்படி அழைத்தால் ‘ஹலோ! ஹாய்! ‘ என அன்போடு ஆரம்பித்து நலம் விசாரிப்பதில் துவங்கி முழுமையான டிஜிட்டல் உதவியாளராக ஒரு பெண் குரல் ஆப்பிள் ஐபோன் மொபைல்
களில் ஒலிக்கும். பல திரைப்படங்களில் கூட இந்த ஐபோனில் இருக்கும் இந்த சிரி குரல் நாயகனுக்கே ஒரு கட்டத்தில் உதவுவது போல பல படங்கள் வெளியாகி இருக்கின்றன. உலக அளவில் இந்த சிரி குரல் அவ்வளவு பிரபலம். சமீபத்தில் நான்தான் சிரி குரலுக்கு சொந்தக்காரர் என சூசன் பென்னட் என்பவரின் வீடியோக்கள் பேட்டிகள் என பிரபலமாகிவருகின்றன. யார் இவர் இவரின் பின்னணி என்ன எப்படி உலகையே கட்டுக்குள் வைக்கும் குரலுக்கு சொந்தக்காரர் ஆனார் இதோ சில சுவாரசிய தகவல்கள். அலைஸ் சூசன் பென்னட்… 1949ல் அமெரிக்காவின் வெர்மோன்ட் மாநிலத்தின் பர்லிங்டன் நகரில் பிறந்தவர். அடிப் படையில் குரல் நடிகராகவும் மற்றும் பேக்கப் பாடகராகவும் தனது வாழ்க்கையை துவங்கியவர். இவருக்கு வயது 74. கிரேக்க மற்றும் ரோமன் வரலாறுகளை படிக்கும் கிளாசிக்ஸ் படிப்பை பாடமாக எடுத்து தனது கல்லூரி பட்டப்படிப்பை முடித்தார். மேலும் அந்தத் துறையில் ஆசிரியையாக வரவேண்டும் என்பதே சூசனின் விருப்பமாக இருந்தது. ஆனால் அவருக்கு காலம் வேறு ஒரு திட்டத்தை வைத்திருந்தது. கல்லூரி நாட்களிலேயே மேடை நிகழ்வுகள் துவங்கி ஏராளமான நிகழ்ச்சிகள் அத்தனையிலும் தனது குரலால் கட்டிப்போட்டிருக்கிறார் சூசன். மேலும் மேடை நாடகங்களின் பின்னணிக் குரல் மற்றும் பாடல்கள் என சூசனின் குரல் அதிகம் பிரபலமாக துவங்க சின்ன சின்ன விளம்பர வேலைகளும்கூட சூசனை தேடி வந்தன. தொடர்ந்து அமெரிக்காவின் ஜாஸ் இசைக்குழுவிலும் தனது பங்களிப்பை கொடுக்க துவங்கியவருக்கு தொடர்ந்து அமெரிக்காவின் முக்கிய மேடை நாடகங்களிலும் குரல் கொடுக்கும் வாய்ப்புகளும் வந்து சேர்ந்தன.

இந்நிலையில்தான் 1950-களில் மிகவும் பிரபலமாக வலம் வந்த அமெரிக்க இசையமைப்பாளர்கள் ராய் ஆர்பிசன், மற்றும் பர்ட் பாச்சராக் இருவருக்கும் பேக்கப் பாடகராக ட்ராக் பாடும் வேலையில் சேர்ந்து இருக்கிறார் சூசன் பென்னெட். தொடர்ந்து வாய்ஸ் ஆர்டிஸ்ட் ஆகவும் வேலை செய்து கொண்டிருந்தவருக்கு முதல்முறையாக பேங்க் ஆப் அட்லாண்டாவின் கஸ்டமர் கேர் சர்வீஸ் டோன்களுக்கு குரல் கொடுக்கும் வாய்ப்பு அமைந்தது. தொடர்ந்து டெல்டா ஏர்லைன் நிறுவனத்தில் பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம் துறையில் குரல் கொடுக்கும் வாய்ப்பு அமைந்தது. விமான நிலையத்தில் அறிவிப்பு, ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டம், டெலிபோன் சிஸ்டம் என அனைத்திலும் குரல் கொடுக்க துவங்கினார் சூசன். பிரபல நிறுவனங்களான கொக கோலா , போர்ட் கார்ஸ், மெக்டொனால்ட்ஸ், ஹோம் டிபாட் உள்ளிட்ட இன்னும் ஏராளமான உலக பிரபல பிராண்டுகளுக்கும் விளம்பர குரலாக மாறினார் சூசன். இதற்கெல்லாம் முன்பே 2005-ல் ஸ்கேன் சாஃப்ட் நிறுவனம் , டிஜிட்டல் முறையில் குரல்களை தொகுக்கும் புராஜெக்ட் ஒன்றில் ஜிஎம் வாய்ஸ் நிறுவனத்துடன் ஒன்றிணைந்து சில வெளிப்புற வாய்ஸ் வேலைகளை எடுத்துச் செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு வீட்டிலிருந்தே தனது சின்ன ரெக்கார்டிங் பூத் மூலம் தினமும் நான்கு மணி நேரம் குரல்கள் கொடுத்து அனுப்பிக் கொண்டிருந்தார் சூசன். அனைத்தும் தொகுக்கப்படாத அல்லது முறைப்படுத்தப்படாத வாக்கியங்கள், வரிகள், வசனங்கள், வார்த்தைகள் என ஒரு வருட காலம் பகுதி நேரமாக வேலை செய்து கொடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். ஆனால் 2011 ஆம் ஆண்டு தான் தனது நண்பர் ஒருவர் மூலம் தான் குரல் கொடுத்தது உலகிலேயே டாப் மொபைல் பிராண்ட் ஆன ஆப்பிள் ஐபோனுக்கு என்பது தெரிய வந்திருக்கிறது.

ஒரு மொபைல் நம் இந்திய மதிப்பில் குறைந்தது ரூபாய் 1 லட்சத்திற்கு மேல் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ஆப்பிள் ஐபோன் பயனாளர்கள் தினமும் கேட்கும் பெண் குரல் சூசன் உடையது தான். ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையோ அல்லது தாங்கள் சூசனின் குரலைத் தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்ற உறுதியையோ ஆப்பிள் நிறுவனம் எங்கும் அறிவிக்கவில்லை. ஆனால் தற்போதைய வளர்ந்துவிட்ட நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக இது 100% சூசனின் குரல்தான் என தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தனை வருட காலமும் சூசன் குரல் மூலம் பயன் பெற்று வரும் ஆப்பிள் நிறுவனம் சூசனுக்கு இதற்கான எந்தத் தொகையும் கூட கொடுக்கவில்லை. நாங்கள் ஒரு நிறுவனத்திற்கு வாய்ஸ் ப்ராஜெக்ட் கொடுத்தோம் அவர்கள் எங்களுக்கு குரல்களை தொகுப்பாக கொடுத்தார்கள் அதற்கான தொகையை அந்த நிறுவனம் பெற்று விட்டது. அதைத் தாண்டி நாங்கள் எதுவும் செய்ய இயலாது என ஆப்பிள் நிறுவனம் கையை விரித்துவிட்டது. இன்னும் சொல்ல வேண்டுமானால் சூசனின் குரலை பெற்றுக் கொடுத்த நிறுவனத்திற்கு கூட சூசனின் குரல் ஐ ஃபோன்களுக்கு செல்லப் போகிறது என்பது தெரியாது. 2005இல் அவர் ஹோம் பூத் முறையில் குரல்கள் அனுப்பி எவ்வளவு பணம் பெற்றாரோ அது மட்டுமே சூசன் தான் கொடுத்த குரலுக்கு வாங்கிய சம்பளம். அதேபோல் தான் சிரியின் குரலுக்கு சொந்தக்காரர் என்பதை நிரூபிக்க பல கட்டங்களை அவர் கடக்க வேண்டி இருந்தது. குறிப்பாக பல டிவி நிகழ்வுகள், சில பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என சூசன் பென்னட் கலந்துகொண்டு தான் யார் என்பதை உலகுக்கு தெரிவித்தார். எனினும் இப்போது வரை மில்லியன் மற்றும் பில்லியன்களில் சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனம் சூசன் பென்னட் குரலை பயன்படுத்தியதற்கான அங்கீகாரமோ அல்லது அதற்குரிய சம்பளத் தொகையோ எதுவும் கொடுக்கவில்லை. இதுகுறித்து ஒரு பேட்டியில் சூசன் பென்னெட்டிடம் கேள்வி வைக்கப்பட்ட போது ‘நீதிமன்றம் வரை நான் அணுகி எனக்கான உரிய தொகையை நான் பெற்றிருக்க முடியும்.

ஆனால் ஒரு வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் ஆக என்னுடைய குரல் இன்று உலகின் மூலை முடுக்கெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறது’ அதுவே நான் மிகப்பெரிய விருதாகப் பார்க்கிறேன்’ என ஒரு கலைஞனாக தனது திருப்தியை வெளிப் படுத்தி இருக்கிறார் சூசன் பென்னெட். ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனமே கூட அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் இன்று உலகம் முழுக்கவே சூசன் பென்னட் என்றால் இணைய உலகம் முழுக்க சிரி என்னும் பெயரும் சேர்ந்து வரும் அளவிற்கு சூசன் பென்னட் இன்று உலக பிரபலம். ஆப்பிள் நிறுவனத்திற்கு மட்டுமல்ல இன்று டிஜிட்டலில் நாம் கேட்கும் பல குரல் சார்ந்த வசதிகளுக்கு குரல் கொடுத்தவரும் சூசன் பென்னட் தான். இன்னும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பிராண்டுகள் உள்ளிட்ட அத்தனை டெலிபோன் மற்றும் டிஜிட்டல் குரல்களும் சூசன் பென்னட் குரலில்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தான் இணைந்து பணியாற்றிய சவுண்ட் இன்ஜினியர் மற்றும் கித்தார் இசைக்கலைஞர் ரிக் ஹின்கில் என்பவரை திருமணம் செய்து கொண்ட சூசன் தற்போது பேரன்கள் ,பேத்தி சகிதமாக அமெரிக்கா அட்லாண்டாவில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இப்போதும் சூசன் பென்னட் குறித்து இவ்வளவு விளக்கமாக பேச காரணம் சமீபத்தில் சாட் ஜிபிடியிள் பிரபல ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சனின் குரலை ஓபன்ஏஐ குரலாக பயன்படுத்தியதன் விளைவாக அவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதை முன்னிட்டு தான் தற்போது மீண்டும் சூசன் பென்னட் பேசு பொருளாகவும் மாறியிருக்கிறார்.

 

Related posts

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை