உலக சுற்றுச்சூழல் தினம் தாமிரபரணி நதியில் வாழும் உயிரினங்களை காக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஓவியம்

*மாணவர்கள், பெற்றோர் ஆர்வமுடன் பங்கேற்பு

நெல்லை : தாமிரபரணி நதியில் வாழும் உயிரினங்களை காக்க வலியுறுத்தியும், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டியும் நெல்லை அறிவியல் மையத்தில் விழிப்புணர்வு ஓவியத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் வரைந்தனர். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தாமிரபரணி நதி நீரில் வாழும் உயிரினங்களை காக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்ச்சி நெல்லை அறிவியல் மையத்தில் நடந்தது.

பூமியையும், அதன் இயற்கையையும் காப்பாற்ற தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாடுகள் பற்றிய நேரடியான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நோக்கத்தில் 1972ல் ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் உலக சுற்றுச்சூழல்தினம் ஜூன் 5ம்தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட அறிவியல் மையம், ஏ- ட்ரீ அமைப்பு, சிவராம் கலைக்கூடம் ஆகியவை இணைந்து நெல்லை தாமிரபரணி நதி நீரில் வாழும் உயிரினங்களை காக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்ச்சி நெல்லை கொக்கிரகுளம் மாவட்ட அறிவியல் மையத்தில் நேற்று (5ம்தேதி) நடந்தது. இதில் மாணவர்கள், அவர்களது பெற்றோர் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று தாமிரபரணி நதி மற்றும் கரை யோரங்களில் வாழும் தவளை, மீன் உள்ளிட்ட உயிரினங்களை தத்ரூபமாக வரைந்தனர்.

தொடர்ந்து அறிவியல் மையத்தில் நடந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நெகிழி பயன்பாட்டை ஒழிப்பது என்ற தலைப்பில் கோவில் பட்டி பசுமை இயக்க செயலாளர் ஜெக ஜோதி விளக்க உரையாற்றினார். ஏற்பாடுகளை மாவட்ட அறிவியல் மைய அதிகாரி எம். குமார், கல்வி உதவி அலுவலர் மாரிலெனின், சிவராம் கலைக்கூடம் ஓவிய ஆசிரியர் கணேசன், ஏ-ட்ரீ அமைப்பினர் செய்திருந்தனர்.

Related posts

விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு எதன் அடிப்படையில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது : ஐகோர்ட்

பாப்பாரப்பட்டி பெரிய ஏரியில் காலாவதி மருந்து, மாத்திரைகள் மூட்டை மூட்டையாக குவிப்பு

திருவண்ணாமலையில் சிறப்பு மருத்துவ முகாம் 75 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை