இன்று உலக ரத்ததான நாள்; ரத்த தானம் செய்தால் மாரடைப்பு வாய்ப்பு குறைவு

செய்யாறு: உலக சுகாதார நிறுவனம் சார்பில் இன்று சர்வதேச ரத்ததான நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு இஎஸ்ஐ மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் ரத்னவேல் கூறியதாவது:
ஏ,பி,ஓ வகை ரத்த அமைப்பை கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ம் தேதியை சர்வதேச ரத்ததான நாளாக கடைபிடிக்கிறோம். ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் வரை ரத்தம் உள்ளது. ரத்தத்தை தானமாக அளிக்க விரும்புவோரிடம் 200 முதல் 300 மில்லி வரை ரத்தத்தை தானமாக பெறலாம். அவ்வாறு கொடுத்தபோதிலும் அவரது உடலில் 2 வாரங்களில் சாதாரண உணவு மூலமே மீண்டும் ரத்தம் உற்பத்தியாகிவிடும். சராசரியாக ஒரு மனிதன் 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் வழங்கலாம். ரத்த தானம் பெற 5 முதல் 10 நிமிடங்கள் போதுமானது. ஒவ்வொரு மனிதனின் உடலிலும் ரத்தம் உற்பத்தி 24 மணி நேரமும் இருந்துகொண்டே இருக்கும். ரத்தத்தை தானமாக கொடுத்தவுடன் அந்த உடலில் வேகம் அதிகரித்து மீண்டும் ரத்தம் பழைய அளவை அடைந்துவிடும். எனவே ரத்ததானம் செய்ய விரும்புவோருக்கு எவ்வித உடல் நலன் பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.

இந்தியாவில் மொத்த ரத்த தேவை சுமார் 4 கோடி யூனிட். ஆனால் கிடைக்க பெறுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்டுகள்தான். மனித வாழ்க்கையின் மிக உயரிய பரிசான ரத்தத்திற்கு மாற்று ஏதுமில்லை. ரத்த தானம் கொடுப்போருக்கு மாரடைப்பு வாய்ப்புகளும் குறைவு. ஹீமோகுளோபின் அளவை கட்டுப்படுத்தவும், சமச்சீராக பராமரிக்கவும் ரத்த தானம் அவசியம். ரத்த தானம் மூலம் அதன் அழுத்தம் (blood pressure) சீராக இருக்கும். மது அல்லது புகை பிடித்திருந்த ஒருவர், 24 மணி நேரம் கழித்தே ரத்த தானம் செய்ய முடியும். 45 கிலோவுக்கு மேல் உள்ள 18 முதல் 60 வயது வரை உள்ள எந்த ஒரு மனிதனும் 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி செங்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சோழவரம் அருகே பரபரப்பு 2 குடிசை வீடுகளில் திடீர் தீ விபத்து

பெரியபாளையத்தில் மண் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி