ஆரல்வாய்மொழி அருகே நடந்த விபத்தில் பலியான தொழிலாளி மனைவியும் சாவு

*மகளுக்கு தீவிர சிகிச்சை

ஆரல்வாய்மொழி : ஆரல்வாய்மொழி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சையில் இருந்த அவரது மனைவியும் இறந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. மகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.நாகர்கோவில் மேலசூரங்குடி பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (62). கூலி தொழிலாளி. இவருக்கு அன்னச்செல்வி (52) என்ற மனைவியும், பூபதி (24), ராஜ சிவநாராயணி (19) என்ற 2 மகள்களும் உள்ளனர்.

நேற்று முன் தினம் மாலை பத்மநாபன் பைக்கில் தனது மனைவி மற்றும் 2வது மகள் ராஜ சிவ நாராயணியுடன் ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலுக்கு சென்று இருந்தார். சாமி தரிசனம் முடிந்து மூவரும், பைக்கில் நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர். மூவேந்தர் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, எதிரே அதி வேகமாக வந்த கார், இவர்களின் பைக் மீது மோதியது.

இதில் பைக்கில் இருந்த மூவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் பத்மநாபன் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி அன்னச்செல்வி, மகள் சிவ நாராயணி ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்த விபத்து தொடர்பாக, ஆரல்வய்மொழி போலீசார் விசாரணை நடத்தி, அதி வேகம் மற்றும் அஜாக்கிரதையாக காரை ஓட்டி வந்த நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த ஜார்ஜ் மரியநேசன் (71) என்பவர் மீது, 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அன்னசெல்வி நேற்று அதிகாலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. ராஜ சிவநாராயணி தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார். விபத்தில் கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உள்ள ராஜ சிவ நாராயணி நெல்லை மருத்துவக்கல்லூரியில் பாரா மெடிக்கல் முதலாண்டு படித்து வருகிறார்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு