சுற்றுலாதலமான ஏலகிரி மலையில் 30 ஆண்டுகள் பழமையான வீட்டை தரைப்பகுதியில் இருந்து 8 அடி வரை உயர்த்தும் பணி

* ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் முதல் முறையாக முயற்சி

ஏலகிரி : சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் சாலையில் இருந்து தாழ்வாக இருந்த வீட்டை தரை பகுதியில் இருந்து 8 அடி வரை உயர்த்தும் பணி ₹5 லட்சம் மதிப்பீட்டில் முதல் முறையாக முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்த மலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்று வளர்ச்சியுற்ற சுற்றுலாத்தலமாக சிறப்புற்று விளங்கி வருகிறது.

ஏலகிரி மலை சுற்றுலா தலமாக விளங்குவதால் மற்ற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் நிலங்களை வாங்கி வீடு கட்டி வருகின்றனர். இந்நிலையில் ஏலகிரி மலையை சேர்ந்த ரமேஷ் ராஜ் என்பவர் 30 வருடங்களுக்கு முன்பு 600 சதுர அடியில் வீட்டை ₹75 ஆயிரம் செலவில் கட்டியுள்ளார். இவர் சென்னையில் வேலை செய்து வருகிறார். இவரது வீடு ஏலகிரி அத்தனாவூர் அடுத்த மூலக்கடை நிலாவூர் செல்லும் சாலையில் உள்ளது. தற்போது இந்த வீடு சாலையில் இருந்து நான்கு அடி தாழ்வாக இருந்த நிலையில் மழைக் காலங்களில் வீட்டிற்குள் மழைநீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தார். கடந்த 12 வருடங்களுக்கு முன்பிருந்தே குடியிருப்பு வீட்டை இடிக்காமல் 8 அடி வரை உயர்த்த நினைத்துள்ளார்.

பின்பு சென்னையை சேர்ந்த தணிகைமலை என்பவரிடம் வீட்டை உயர்த்தும் பணியினை கொடுத்துள்ளார். இதையடுத்து ஜாக்கி வைத்து வீட்டை உயர்த்தும் பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து தணிகைமலை கூறுகையில், ‘600 சதுர அடியில் உள்ள வீட்டை 8 அடி வரை உயர்த்த ₹2.10 லட்சம் செலவாகும். பொருட்களின் செலவுகள் உட்பட இப்பணிக்கு வீட்டின் உரிமையாளருக்கு ₹5 லட்சம் வரை செலவு ஆகும். மேலும், 9 பணியாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் 40 முதல் 45 நாட்களில் முடிவடையும். தற்போது இப்பணியில் 7 அடி வரை ஜாக்கி வைத்து உயர்த்தப்பட்டுள்ளது. சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் முதன்முறையாக ஜாக்கி வைத்து 8 அடி வரை வீடு உயர்த்தப்படுகிறது’ என்றார்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் மரணம் பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பு: கமல்ஹாசன் இரங்கல்

ஆம்ஸ்ட்ராங் மரணம்: அஞ்சலி செலுத்த நாளை சென்னை வருகிறார் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி!!

பாஜக மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது..!!