வேலை கேட்பது போல் நடித்து உதவியவரின் வீட்டில் கைவரிசை: வாலிபர் கைது

பெரம்பூர், ஜூன் 13: திருப்பூர் நந்தவனம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (53). இவர் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 173வது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, தனியார் உணவகத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவர், கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து கொடுங்கையூர் செல்வதற்கு பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த வாலிபர், ‘‘எனது பெயர் ஆரோக்கிய யோகேஷ். நான், சென்னைக்கு புதுசு. ஏதாவது வேலை இருந்தால் கொடுங்கள்,’’ என கூறியுள்ளார். இதையடுத்து, கிறிஸ்டோபர் அந்த வாலிபரை தனது அறைக்கு அழைத்து சென்று, வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அறைக்கு சென்றதும், அவரை ஹாலில் அமர வைத்துவிட்டு கிறிஸ்டோபர் குளிக்கச் சென்றார்.

அப்போது ஆரோக்கிய யோகேஷ், அங்கிருந்த 2 செல்போன்கள் மற்றும் ₹3,500 ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கிறிஸ்டோபர், இதுகுறித்து கொடுங்கையூர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கிறிஸ்டோபரின் 2 செல்போன்களை எடுத்துச்சென்ற ஆரோக்கிய யோகேஷ், அவரது செல்போனை கிறிஸ்டோபர் வீட்டிலேயே விட்டுச் சென்றது தெரிய வந்தது. அந்த செல்போன் எண்ணை வைத்து நேற்று எம்ஜிஆர் நகர் கபிலர் தெருவைச் சேர்ந்த ஆரோக்கிய யோகேஷை (24) போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், கிறிஸ்டோபர் தனக்கு வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்று, தனது வீட்டில் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இதனால், அவர் குளிக்கச் சென்றபோது, அவரது 2 செல்போன் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து ஆரோக்கிய யோகேஷ் மீது வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு