வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்ட கணவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல்நிலையம்முன் பெண் தர்ணா

*முசிறியில் பரபரப்பு

முசிறி : முசிறியில் கணவன் வேறு பெண்ணை திருமணம் செய்ததால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்ககோரி முசிறி அனைத்து மகளிர் காவல்நிலையம் முன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருச்சி மாவட்டம், முசிறி தாலுக்கா தும்பலம் பெருமாள்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலையரசி (23). இதே ஊரைச் சேர்ந்த டைலர் ராஜசேகரன்(29) என்பவரை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். கடந்த நான்கு வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ராஜசேகர், கலையரசிக்கு தெரியாமல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல்அறிந்த கலையரசி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த மூன்று மாத காலமாக காவல் நிலையத்திற்கு அலைந்த கலையரசி நேற்று முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய வாசல் முன்பாக தரையில் அமர்ந்து கணவன் மீது நடவடிக்கை எடுக்ககோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் இல்லாத நிலையில் மகளிர் காவல் நிலையத்தில் இருந்த பெண் போலீசார் இதனால்ம அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து முசிறியில் உள்ள சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த முசிறி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் கோகிலா, பிரியா ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கலையரசியை சமாதானப்படுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து கலையரசி தர்ணா போராட்டத்தை கைவிட்டார். கணவர் மீது நடவடிக்கை எடுக்காத போலீசை கண்டித்து இளம்பெண் காவல் நிலையம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!