மகளிர் கூடைப்பந்து பயிற்சி மையம் வாரணாசிக்கு மாற்றுவதை ரத்து செய்ய கோரிக்கை: எம்பி வெங்கடேசன் கடிதம்

மதுரை: தமிழ்நாட்டில் உள்ள ஒரே பெண்கள் கூடைப்பந்து பயிற்சி மையத்தை வாரணாசிக்கு மாற்றும் உத்தரவை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென மதுரை எம்பி சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் நேற்று கூறியதாவது: இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) பயிற்சி மையங்கள் 37 நகரங்களில் உள்ளன. இதில் இரண்டு தமிழ்நாட்டில் உள்ளது. மயிலாடுதுறை மையத்தில் கூடைப்பந்து, கைப்பந்து பயிற்சிகள் தரப்படுகிறது. இது கூடைப்பந்து வீராங்கனைகளுக்கான சிறப்பு மையம். தற்போதைய இந்திய மகளிர் கூடைப்பந்து அணியின் கேப்டன் புஷ்பா, அணியில் உள்ள சத்யா இம்மையத்தில் பயிற்சி பெற்றவர்கள். இவர்கள் 2018ல் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் பங்கேற்றனர்.

இந்நிலையில், ‘சாய்’ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் மயிலாடுதுறையில் உள்ள கூடைப்பந்து, கைப்பந்துக்கான பயிற்சி அங்கீகாரத்தை ரத்து செய்து, வேறு மையங்களுக்கு மாற்றிட பரிந்துரைத்துள்ளது. சேலத்தில் கூடைப்பந்துக்கான அங்கீகாரம் இருப்பினும், அங்கு பெண்களுக்கான இடங்கள் தரப்படவில்லை. கைப்பந்து பயிற்சிக்கு தமிழ்நாட்டில் வேறு பயிற்சி மையம் இல்லை. உத்தரப்பிரதேசம் வாரணாசி மையத்தில் கூடைப்பந்து வீராங்கனைகள் பயிற்சி பெற இடங்கள் தரப்பட்டுள்ளன. இல்லையெனில் சத்தீஸ்கரில் உள்ள ராஜ்னந்த்கன் நகருக்கு செல்ல வேண்டும்.

தற்போது மயிலாடுதுறையில் மதுரை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனைகள் பள்ளிப் படிப்பையும், கூடைப்பந்து பயிற்சியையும் ஒரு சேர பெற்று வருகிறார்கள். அவர்களின் கதி என்ன? இதுதான் வாரணாசி சங்கமமா? தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் வஞ்சனை இது. இந்த உத்தரவை ரத்து செய்து மயிலாடுதுறையிலேயே கூடைப்பந்து, கைப்பந்து பயிற்சி மையம் தொடர வழி வகைசெய்யுமாறு ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், ‘சாய்’ பொது இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

பெரம்பூரில் வீட்டின் அருகே பேசிக் கொண்டிருந்தபோது பயங்கரம் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை

அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ம் தேதி திருவள்ளூரில் தொடங்கி வைக்கிறார்: பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

காலை உணவு திட்டம், நான் முதல்வன் உள்ளிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய திட்டங்களை பிரிட்டன் தேர்தலில் தொழிலாளர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு மாபெரும் வெற்றிகண்டுள்ளது: தமிழ்நாடு அரசு பெருமிதம்