கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலையைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம், கண்டனம், சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் என எங்கும் இந்தக் கொடுமையான சம்பவம்தான் மக்கள் மத்தியில் சுற்றிவருகிறது. மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்துவந்த பெண் பயிற்சி மருத்துவர், கல்லூரி கருத்தரங்கு அறையில் ஆக.8 ம் தேதி இரவுப் பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரைக் கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். தற்போது இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தைக் கண்டித்தும், பயிற்சி மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டும், சமரசமற்ற விசாரணை நடத்தக்கோரியும் மாணவர்களும், மருத்துவர்களும் நாடு முழுவதும் தொடர் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஞாயிறன்று நாடு முழுவதும் 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இணையம் முழுக்கவே டிரெண்டானது. மேலும் ஐந்து வயதுக் குழந்தை துவங்கி தள்ளாத வயது மூதாட்டி வரை போராட்டங்களில் ஈடுபட நாட்டையே இச்செய்தி உலுக்கிக்கொண்டிருக்கிறது. வீட்டிலிருந்து பள்ளி, கல்லூரி, வேலை செய்யுமிடம் என சென்று சேரும் வரை பாதுகாப்பு வேண்டுமென நினைத்த நிலையில், தற்போது வெளிப்புறம் மட்டுமல்ல, எங்கும் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருக்கிறது. நாட்கள் செல்லச் செல்ல அத்தனையும் செய்தியாகக் கடந்து விடுவோமோ என்கிற பயமும் உண்டாவதைத் தவிர்க்க முடியவில்லை. நாட்டு மக்களின் ஒரே பிரார்த்தனை அந்தக் கயவர்களுக்குச் சரியான தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு