அழகை விட அடையாளமே பெண்களுக்கு மிகப்பெரும் பலம்!

எறும்புகள், தேனீக்கள், பறவைகள் கூட காலத்துக்குத் தகுந்தாற்போல் சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறது. எனில் மனிதர்கள் நமக்கு சேமிக்கும் பழக்கம் எவ்வளவு முக்கியம். குறிப்பாக பெண்களுக்கு சிறு சேமிப்பு என்பது மிகவும் முக்கியப் பணி. ஆனால் இக்காலத்திலும் கூட பெண்கள் பலரும் படித்துவிட்டுக் கூட வீட்டில் குடும்பம், கணவன் எனத் தங்களுக்கான எந்த அடையாளமும் இல்லாமல் நேரத்தையும், வயதையும் வீணாக்கிக் கொள்கிறார்கள். குடும்பப் பொறுப்பு, சமையல் என காரணம் காட்டிக் கொண்டிருந்தால் நாளை அதே குடும்பத்தினர் ‘நீ வீட்டில் சும்மாதானே இருக்கிறாய், இதைச் செய்தால் என்ன? என்கிற கேள்விகளை முன்வைப்பார்கள். காலம் கடந்து நமக்கான அடையாளம் என்ன எனத் தேடாமல், சின்ன சின்னச் செலவுகளுக்குக் கூட வீட்டாரை எதிர்பார்க்காமல் சேர்ந்து வருமானம் ஈட்டி சேமிக்க வேண்டிய சூழல் என்றோ வந்துவிட்டது. மேலும் இன்று இரண்டு பேர் வருமானமே போதாத நிலைக்கு விலை உயர்வு விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு லட்சம் வரையிலும் கூட ஒரு சவரன் தங்கம் விலை ஏரளாம் என்கிற நிலை கூடியவிரைவில் இருக்கும் பட்சத்தில் வீட்டுப் பெண்களும் வருமானம் ஈட்டும் பழக்கத்துடன் சேமிக்கும் வழக்கத்தையும் உண்டாக்கிக் கொள்ள வேண்டும். எப்படிச் சேமிக்கலாம், என்ன வழிகள் விபரமாக சொல்கிறார் டாக்டர். சாந்தி சரவணன் (நிதி அலோசகர், பொருளாதார வல்லுனர், தன்னம்பிக்கைப்
பேச்சாளர் மற்றும் ஓவியர்)‘நம் அனைவருக்குமே எதிர்காலத் தேவைக்காகச் சேமிக்க வேண்டும் என்ற ஆசையும் எண்ணமும் இருக்கும். ஆனால் சூழல்கள் சேமிப்புக்கு ஏதுவாக இருப்பதில்லை
.

படித்தப் பெண்கள் மட்டும் பணத்தைச் சேமித்து வைக்க முடியாது. பத்து மணி நேரம் வேலை செய்து ஒருவர் சம்பாதித்துச் சேமிக்க முடியும். ஆனால், வீட்டில் இருக்கும் பெண்களுக்கோ சம்பாதிப்பது மற்றும் சேமிப்பது என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது.இல்லத்தரசியாக இருக்கும் பெண்களுக்குத் தனி வருமானமும், சேமிப்பும் மிகவும் முக்கியம். அது அவர்களுக்குத் தன்னம்பிக்கையும், ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கும். அவர்களது பிள்ளைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் இருக்கும். வீட்டில் இருந்துகொண்டே ஏதேனும் வகையில் வருமானத்தை ஈட்டுவது நல்லது. அதற்கு சில ஆலோசனைகள் இதோ.

*தினமும் 2 மணிநேரம் சுயக் கற்றலுக்கு ஒதுக்குங்கள், பல தொழில் சார்ந்த பயிற்சிகள் இன்று பல அரசு சார் அமைப்புகளே இலவசமாக கொடுக்கிறார்கள். நேரடியாக அல்லது இணையத்தில் என இப்போதும் எங்கும் கற்றல் என்பது சுலபம்.
* உங்கள் பலம் மற்றும் பலவீனங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
vநீங்கள் அமைதியாக வேலை செய்ய ஒரு இடம், மேஜை மற்றும் நாற்காலியை ஒதுக்குங்கள்.
*படித்த பெண்கள் உள்ளடக்கம் எழுதுதல் (Content Writing), தரவு உள்ளீடு (Data Entry), டியூஷன் (Tuition), இணைய சேவைகளுக்கான வாடிக்கையாளர் வேலைகள்(Digital Services) மற்றும் பிற ஆன்லைன் வேலைகளைச் செய்யலாம்.
*படிக்காத பெண்கள் தையல், தூபக் குச்சிகள் தயாரித்தல், எம்பிராய்டரி, தோட்டக்கலை, ஆர்கானிக் விதைகள் சேகரித்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவற்றைக் கற்க பட்டறைகள் (workshops) அல்லது ஆன்லைன் வகுப்புகளுக்குச் செல்லலாம்.
* இதன் மூலம் நீங்கள் 6 மாதங்களில் உங்கள் திறமைகளைக் கண்டுபிடித்து, சுயமதிப்பீடு செய்து சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்.
*இவை அனைத்தும் நீங்கள் சுய வளர்ச்சி அடையவும், சுயசார்புடன் இருப்பதற்காகவும், உங்களுக்காகச் சம்பாதிக்கத் தொடங்குவதற்கான வாய்ப்பை அடைய உதவுகின்றன.

“இலட்சத்தை நோக்கி அல்ல, இலட்சியத்தை
நோக்கி…”

படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை. படிப்பு இல்லை என்றாலும் கவலை இல்லை. பல தொழில் முனைவர்கள் படிக்காதவர்களாக இருந்தாலும் முன்னேற்றப் பாதையில் வலம் வருகின்றனர். படிப்பு என்பது வெறும் புத்தகத்தில் கற்று தேர்வெழுதிதான் படிக்க வேண்டும் என்றில்லை. ஏதேனும் திறன் சார்ந்த பயிற்சிகள், தொழில் பயிற்சிகள் எடுத்துக்கொள்வதும் கூட படிப்புதான். தொழில் பயிற்சிகள் எடுத்துக்கொள்ள வயது வரம்பே கிடையாது.

சேமிப்புப் பழக்கம்

சேமிப்புப் பழக்கத்தை வளர்ப்பது நிதி அறிவை மேம்படுத்தி பாதுகாப்பான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்கிறது. இன்றைய வேகமான மற்றும் கணிக்க முடியாத உலகில், சேமிப்புப் பழக்கத்தை வளர்ப்பது முன்னெப்போதையும் விட மிக முக்கியமானதாகிவிட்டது. சேமிப்பு என்பது பணத்தை ஒதுக்குவது மட்டுமல்ல; இது நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், எதிர்கால வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் ஒரு செயலூக்கமான அணுகுமுறையாகும். எனவே மாதம் சிறு தொகையைச் சேமித்து வைத்தால் எதிர்காலத்தில் அது மிகப் பெரிய பயனாக இருக்கும்.“சிக்கனமும், சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரு கருவிகள் – ஜார்ஜ் ஹெர்பர்ட்”

உங்களைத் தன்னிறைவு அடையச் செய்வதில் நிதிச் சுதந்திரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது உங்கள் விருப்பங்களுக்கும், வசதிகளுக்கும் ஏற்ப வாழ்க்கையை வாழ உதவுகிறது. நீங்கள் விரும்பும் விஷயங்களில் உங்கள் பணத்தை செலவழிக்கவும், வசதியான மற்றும் வளமான வாழ்க்கையை வாழவும் வழிகாட்டுகிறது. உங்கள் கைகளில் நீங்கள் ஈட்டிய வருமானம் என்பதே மிகப்பெரிய நம்பிக்கைக் கொடுக்கும். இது குடும்பத் தரத்தை மட்டுமின்றி குழந்தைகளின் பண்புகளிலும் கூட முன்னேற்றத்தை உயர்த்தும்.

“பணத்தைச் சேமிப்பது என்பது நிதி சுதந்திரத்திற்கான ஒரு படியாகும்.”

*உங்கள் மாதாந்திர செலவீனங்களைப் பதிவு செய்து கண்காணிக்க முயற்சிக்கவும். நீங்கள் எங்கு அதிகமாக செலவிடுகிறீர்கள் என்பது பற்றிய தெளிவை இது உங்களுக்கு வழங்கும். நீங்கள் முக்கியமில்லாத விஷயங்களைக் கண்டறிந்து, அந்த செலவினங்களைத் தவிர்ப்பதன் மூலம் அதிகச் சேமிப்பை நோக்கமாகக் கொள்ளலாம்.
*ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு வரவு செலவுத் திட்டத்தை உருவாக்குங்கள்.
*சேமிப்பை முதல் செலவாக்குங்கள்.
*சேமிப்புப் பழக்கத்தைத் தூண்டுவதற்கு உத்வேகம், கல்வி மற்றும் ஆதரவு ஆகியவற்றின் கலவை தேவைப்படுகிறது.
*தேவையில்லாத போதும் கடன் வாங்கி ஆடம்பர செலவு செய்யக்கூடாது.
* மன அழுத்தத்தைக் குறைக்கவும், பிரச்சனைகளைத் தவிர்க்கவும் யோகா, கைவினைப் பணிகள் போன்ற சில செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இது ஒரு தியானம் போன்றது.
*அடுத்தவர்களைப் போல வாழ நினைக்கக் கூடாது.
*எது தேவை, எது தேவையில்லை என்று முன்னதாகவே கணக்கிடத் தெரிய வேண்டும்.
*பணத்தை எப்படிப் பெருக்குவது என்ற அறிவு வேண்டும்.
*பணம் ஈட்டும் போது தான் அதன் மதிப்பு தெரியும். எனவே சிறு வருமானம் சீரான வாழ்க்கையாகக் கொண்டு முன்னேறலாம்.

“சிறுகச் சேமித்தால் பெருக வாழலாம்!” என்ற பழமொழிக்கேற்ப நன்றாகச் சம்பாதித்து, சிக்கனத்தையும், சேமிப்பையும் இரு கருவிகளாகக் கொண்டு, உங்களையும், உங்கள் குடும்பத்தையும் உங்களுக்கான தனித்தன்மையுடன் பாதுகாத்து வாழுங்கள்; வாழ்க்கையில் முன்னேறுங்கள். படிப்பு அவசியம்தான் ஆனால், இன்று தங்களின் சக்திக்கு மீறி கடன் வாங்கி குழந்தைகளைப் படிக்க வைத்து தானும் துன்பப்பட்டு, குழந்தைகளுக்கும் கஷ்டம் என்பதைக் காட்டாமல் வளர்த்து கடைசியாக கடனாளியாகி நிற்கும் கணவன் – மனைவி பலரைப் பார்க்க முடிகிறது. இதைத் தவிர்க்கலாம். சேமிப்புப் பழக்கத்தை குழந்தைகளிடமிருந்தே உருவாக்கலாம்.
– ஷாலினி நியூட்டன்.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு